Published:Updated:

திராவிட மாடலா, குஜராத் மாடலா? - அண்ணாமலைக்கு சவால்விடும் சிவசேனாபதி...

கார்த்திகேய சிவசேனாபதி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்திகேய சிவசேனாபதி

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை கட்சிக்காக மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார் உதயநிதி.

திராவிட மாடலா, குஜராத் மாடலா? - அண்ணாமலைக்கு சவால்விடும் சிவசேனாபதி...

நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை கட்சிக்காக மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார் உதயநிதி.

Published:Updated:
கார்த்திகேய சிவசேனாபதி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்திகேய சிவசேனாபதி

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க-விலிருந்து வேலுமணிக்கு எதிராக ‘கொம்பு சீவிவிடப்பட்டவர்’ கார்த்திகேய சிவசேனாபதி. தற்போது தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளராக இருப்பவரிடம் ‘ஸ்டாலின் மீதான விமர்சனங்கள், தி.மு.க-வின் திராவிட மாடல், உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து எழும் பேச்சுகள்’ உள்ளிட்ட விஷயங்களை நேரில் சந்தித்து உரையாடினோம்...

“சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடோடிப் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர் வீட்டுக்குச் சென்று சிற்றுண்டி சாப்பிட்டிருக்கிறார். ஆனால், இதை நாடகம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனவே?”

“விளிம்புநிலை மக்களை முதல்வர் சந்திக்கச் சென்றதே, ‘நான் இருக்கிறேன். எங்கள் அரசு உங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கும்’ என்ற நம்பிக்கையைக் கொடுப்பதற்காகத்தான். அப்படி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தச் சென்றவருக்கு, அவர்கள் அளித்த அழகான விருந்தோம்பலை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சிக்கிறார்கள். இதைவைத்து மார்க்கெட் செய்யவேண்டிய தேவை முதல்வருக்கு இல்லை. அரசின் அனைத்துச் சலுகைகளும் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருக்கும் வலதுசாரிகளுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தத்தான் செய்யும்.”

‘‘விடுமுறை தினத்தன்று பிரதமர் மோடியுடன் சீருடையில் மாணவர்கள் பயணித்ததை விமர்சித்த தி.மு.க., நாடோடிப் பழங்குடியினர் இல்லத்தில் முதல்வர் சந்தித்த மாணவர்களும் விடுமுறை தினத்தன்று சீருடையில் இருந்ததை எப்படி கவனிக்காமல் கோட்டைவிட்டது?”

“பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் சென்றபோது அவருடன் இருந்த மாணவர்கள் தனியார்ப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். அது முழுக்க முழுக்க மீடியாவுக்காக செட்டப் செய்யப்பட்ட நாடகம். தமிழ்நாட்டில் கிராமப்புற, ஏழை மாணவர்களின் அன்றாட உடையே சீருடையாகத்தான் இருக்கிறது. அன்றைக்கு முதல்வரைச் சந்தித்த மாணவர்களின் ஆடையும் அப்படித்தான் இருந்திருக்கும். நமது நோக்கம் சமூகநீதி மறுக்கப்பட்டவர்களின் உணவை, உடையைப் பார்ப்பதல்ல. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது. திராவிட மாடல் ஆட்சி என்பதே அதை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது.”

“ஆனால், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘மக்களை முட்டாள்கள் ஆக்கவே திராவிட மாடலை தி.மு.க முன்னெடுக்கிறது’ என்கிறாரே..?”

“அண்ணாமலைக்குச் சவால்விடுகிறேன்... திராவிட மாடல், குஜராத் மாடல்... இவற்றில் எது சிறந்தது என்று தி.மு.க தொண்டர் ஒருவருடன் விவாதம் செய்து, அவர் வெற்றி பெறட்டும். பிறகு அவரது விமர்சனம் குறித்து ஆராயலாம். அண்ணாமலையை லக்னோவுக்கு அழைத்துச் சென்று, படிக்கவைத்து ஐ.பி.எஸ் ஆக்கியது திராவிடம். ஆனால், அவரை மீண்டும் ஆடு மேய்க்கவைத்திருக்கிறது ஆரியம். உண்மையில், ஆடு மேய்ப்பதற்கும் அறிவு வேண்டும். அந்த அறிவுகூட அண்ணாமலைக்கு இல்லை.”

“உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நீங்கள்தான். இப்போது அவரைத் துணை முதல்வராக்க வேண்டும் என்பது வரை பேச்சுகள் அடிபடுகின்றனவே?”

“நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை கட்சிக்காக மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார் உதயநிதி. சட்டப்பேரவைத் தேர்தலில், ‘நான் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை... என் கட்சிக்காரர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்’ என்று பரப்புரை செய்தார். இதைச் சொல்வதற்குத் தலைமைப் பண்பும், அரசியல் தெளிவும் வேண்டும். இவை இரண்டுமே உதயநிதியிடம் இருக்கின்றன. பெரியாரிய, திராவிட அரசியலைப் புரிந்து வைத்திருக்கிற, தகுதியான ஒருவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதனால், அவரை அமைச்சராக்குவதைவிட துணை முதல்வராக்குவதுதான் நல்ல முடிவாக இருக்கும்.”

திராவிட மாடலா, குஜராத் மாடலா? - அண்ணாமலைக்கு சவால்விடும் சிவசேனாபதி...

“அப்படியென்றால், உதயநிதிக்கு முன்பிருந்தே தி.மு.க-வுக்காக உழைத்துவரும் சீனியர்கள் யாருக்கும் பெரியாரிய, திராவிட அரசியல் புரிதல் இல்லை என்கிறீர்களா?”

“தி.மு.க-வில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று யாராவது குறை சொல்லியிருக்கிறார்களா... தி.மு.க மீண்டும் ஒரு வலுவான தலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்ற அச்சத்தில்தான் அரசியல் எதிரிகள் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பதை விமர்சிக்கிறார்கள். ஒற்றைச் செங்கல்லை வைத்து ஆட்டம் காண்பித்தவர் இல்லையா... அந்த பயம் அவர்களுக்கு இல்லாமலா இருக்கும்!”

“ஆனால், ‘கருணாநிதி குடும்பத்திலிருந்தேதான் அந்தத் தலைவர் உருவாக வேண்டுமா?’ என்பதுதானே அவர்களின் வாதமாக இருக்கிறது?”

“தி.மு.க-வில் ஒரு லட்சம் பதவிகள் இருக்கின்றன. அவற்றில் தலைவர் தளபதி, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி என மூவர் மட்டும்தான் கட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். ஒரு கட்சிக்கு யாரைத் தலைமை ஏற்கவைக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தனிப்பட்ட முடிவு. அதுமட்டுமல்ல... தலைவர் என்பவரைத் தனிப்பட்ட ஒரு சமுதாயத்துக்கானவராக மட்டும் பார்க்கும் சூழல் உருவாகிவிடக் கூடாது.”

“இதை அ.தி.மு.க., பா.ஜ.க தலைவர்கள் மீதான விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாமா?”

“(சிரிக்கிறார்). ‘அண்ணாமலை அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்’ என்று ஒரு கட்டுரையை சமீபத்தில் ஜூனியர் விகடனில் படித்தேன். எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருப்பவர்களைக் கணக்கெடுங்கள்... அங்கும் அவர்களின் சமூகத்தினர்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள். ஆனால், தலைவர் தளபதி மீதோ, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி மீதோ இப்படியான விமர்சனத்தை வைக்க முடியுமா?”

“சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெரும்பாலும் உங்களைப் பார்க்க முடியவில்லை... ஒதுங்கிவிட்டீர்களா அல்லது ஒதுக்கிவிட்டார்களா?”

“என்னை யாரும் ஒதுக்கவுமில்லை. நான் ஒதுங்கவும் இல்லை. இப்போதும் சுற்றுச்சூழல் அணி மூலம் ஒரு சட்டமன்ற உறுப்பினரைவிட நான் தீவிரமாகவே இயங்கிக்கொண்டிருக்கிறேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism