Published:Updated:

எய்ம்ஸ்: மோடி நினைத்தால் வரும் என்பது மாறி, ஜப்பான் நினைத்தால் வரும் என்ற நிலை! ஸ்டாலின் விமர்சனம்

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மதுரையை மையமாகவைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. சமீபகாலமாக ராகுல் காந்தி, ஜெ.பி.நட்டா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, டி.டி.வி.தினகரன், திருமாவளவன், எல்.முருகன், குஷ்பு என்று பல தலைவர்கள் மதுரையில் பரபரப்பாகப் பிரசாரம் செய்துவருகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்தநிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் நடந்தது. இது தேர்தல் பிரசார மாநாடோ என்று எண்ணும் அளவுக்கு டி.ராஜா, நல்லகண்ணு, முத்தரசன், மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன் உட்பட தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

கலைஞர் சிலை திறப்புவிழா உட்பட இரண்டு நாள்களாக மதுரை, தேனி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை ஒரு பிடி பிடித்துவரும் மு.க.ஸ்டாலின், சிபிஐ மாநாட்டிலும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ``இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடாக இருந்தாலும், தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்வது போன்றே உணர்கிறேன். `திராவிட இயக்கம் இல்லையென்றால் கம்யூனிஸ்டாக மாறியிருப்பேன்’ என்று கலைஞர் கூறியிருக்கிறார்.

சிலை திறப்புவிழாவில் மு.க.ஸ்டாலின்
சிலை திறப்புவிழாவில் மு.க.ஸ்டாலின்

அரசியல்ரீதியாக மட்டுமல்ல, தத்துவரீதியாகவும் தி.மு.க-வும் கம்யூனிஸ்ட் கட்சியும் நெருக்கமாக உள்ளன. சோவியத்தில் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிசம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோல, இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு என்னை அழைத்திருக்கிறீர்கள்.

1990-ம் ஆண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணத்தை நிறைவேற்றியதைப்போல வரும் தி.மு.க ஆட்சியிலும் மக்கள் பணிகள் தொடரும். கொள்ளைக் கூட்டத்திடமிருந்து ஆட்சி, கொள்கை உடையோரிடம் வர வேண்டும். அ.தி.மு.க மூலம் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது பா.ஜ.க. ஊழலை மறைக்க அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது.

டி.ராஜா, மு.க.ஸ்டாலின்
டி.ராஜா, மு.க.ஸ்டாலின்

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-ன் ஊழல் கரங்களை உயர்த்தி ஊழலுக்கு உதவி செய்வதை மோடி வெளிப்படுத்தியிருக்கிறார். மோடியின் ஒரு கரம் காவி, மற்றொரு கரம் கார்ப்பரேட். அதோடு ஊழலையும் கரம் கோத்திருக்கிறார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்த மோடி, ஔவையார் பாடலைக் கூறலாமா? மோடி ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதாரத் தாக்குதல் நடத்துகிறது. பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வுதான் மோடி அரசு மக்களுக்குத் தரும் பரிசு.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் பெட்ரோல் விலை உயர்கிறது. பெட்ரோல் விலை உயர்வால் காய்கறி, போக்குவரத்துக் கட்டணம் என அனைத்துப் பொருள்களின் விலையும் உயரும்.

கல்வி, வேளாண்மை, மின்சாரம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றில் மாநில அரசின் உரிமையைத் தாரைவார்த்துவிட்டனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மோடி நினைத்தால் வரும் என்பது மாறி, ஜப்பான் நினைத்தால் வரும் என்ற நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி எப்படி நடக்கிறது? - லைவ் ரிப்போர்ட்

வரும் தேர்தல், எதிர்காலத்துக்கான முக்கியத் தேர்தல். அ.தி.மு.க-வைப் பயன்படுத்தி காலுன்றப் பார்க்கும் பா.ஜ.க., அ.தி.மு.க-வைப் பயமுறுத்தி தன்னைப் பலப்படுத்தப் பார்க்கிறது. பெரியார், அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா, கலைஞரின் மண் இது என்பதை நிரூபிக்க வேண்டும். பாசிச பா.ஜ.க ஆட்சிக்கும், அடிமை அரசுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது'' என்றார்.

தி.மு.க கூட்டணிக் கட்சியினர்
தி.மு.க கூட்டணிக் கட்சியினர்

மு.க.ஸ்டாலினைப்போலவே டி.ராஜா, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், தா.பாண்டியன், ஈஸ்வரன் போன்றோர் மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் முன் சிபிஐ நடத்திய இந்த மாநாடு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு