கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க-வின் அடையாளமாக கடந்த 23 ஆண்டுகளாக வலம்வந்தவர் சுரேஷ் ராஜன். 1996-ல் எம்.எல்.ஏ-வாகி இளம் வயதிலேயே அமைச்சர் ஆனார். சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தார். முதலில் இளைஞரணிப் பொறுப்பில் இருந்தவர், பின்னர் 1998-ல் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரக ஆனார். அதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டதால் தலைநகர் நாகர்கோவில் அடங்கிய கிழக்கு மாவட்டத்துக்கு செயலாளராக ஆனார் சுரேஷ் ராஜன். முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சுரேஷ் ராஜனுக்கு கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு அரசியலில் இறங்குமுகமாக ஆகிவிட்டது. வெற்றிபெற்றால் அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க-வின் எம்.ஆர் காந்தியிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். இது சுரேஷ் ராஜனுக்கு முதல் சறுக்கலாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மாநகர மேயராக மகேஷ் வெற்றிபெற்றார். அப்போது சுரேஷ் ராஜனின் ஆதரவு கவுன்சிலர்கள் மகேஷுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். ஏற்கெனவே சுரேஷ் ராஜன் தனக்கு எதிராக காய்நகர்த்துவதாக மகேஷ் தரப்பு முதல்வருக்கு புகார் அளித்திருந்தது. இந்த நிலையில், மேயர் தேர்தலிலும் சுரேஷ் ராஜன் ஆதரவாளர்கள் சொந்தகட்சிக்கு எதிராக செயல்பட்டதால் தலைமையின் கோபம் அதிகமானது. மார்ச் 4-ம் தேதியே சுரேஷ் ராஜனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் – பாரதி தம்பதியின் மகன் நீல தமிழரசனுக்கும், முன்னாள் எம்.பி சங்கரலிங்கத்தின் பேத்தியும், தி.மு.க குமரி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வள்ளுவன் – மீனா தம்பதியின் மகள் டாக்டர் சஞ்சனா பகவதிக்கும் நாகர்கோவிலில் இன்று திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று சுரேஷ் ராஜன் அழைப்பிதழ் கொடுத்திருந்தார். ஆனால், முதல்வர் திருமணத்துக்கு வரவில்லை. அதேசமயம் முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் நேற்றே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்.

இன்று நடந்த திருமணத்திற்கு தலைமை வகித்து தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் துர்கா ஸ்டாலின். முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி, வாழ்த்து செய்தியை தன் மனைவி துர்காவிடம் கொடுத்து அனுப்பி வைத்திருந்தார். முதல்வரின் சகோதரி செல்வி செல்வம், மோகனா தமிழரசு, முதல்வரின் மருகள் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினர் பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்ளிட்டப் பலரும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

சுரேஷ் ராஜன் இல்லத் திருமணத்தை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் முன்னின்று நடத்தியது குறித்து சுரேஷ் ராஜன் தரப்பில் விசாரித்தோம். ``முதல்வர் மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தாருடன் சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி மிகவும் நெருக்கமான நட்பில் இருக்கிறார். குறிப்பாக துர்கா ஸ்டாலின் இந்தியாவில் பல ஆன்மிக தலங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தும்போது, அவருடன் சென்று வருபவர்களில் முக்கியமானவர் சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி. கட்சியையும் தாண்டி குடும்ப நண்பர்களாக ஆகிவிட்டதால் இந்த திருமண விழாவில் முதல்வரின் குடும்பமே கலந்துகொண்டது" என்கிறார்கள்.
பதவி பறிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் சுரேஷ் ராஜன் மகனின் திருமண நிகழ்வில் முதல்வரின் குடும்பத்தினர் கலந்துகொண்டது சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.