Published:Updated:

"இதையேதான் அப்பவும் சொன்னீங்க..."- வெளுத்து வாங்கிய ஸ்டாலின்; சிக்கலில் மா.செ-க்கள்

ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சமீபத்தில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் பேசியிருக்கும் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் வெற்றியைத் தேடி தரவில்லையென்றால், அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்று கடுமையாகவே எச்சரித்திருக்கிறார்.

"இதையேதான் அப்பவும் சொன்னீங்க..."- வெளுத்து வாங்கிய ஸ்டாலின்; சிக்கலில் மா.செ-க்கள்

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சமீபத்தில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் பேசியிருக்கும் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் வெற்றியைத் தேடி தரவில்லையென்றால், அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்று கடுமையாகவே எச்சரித்திருக்கிறார்.

Published:Updated:
ஸ்டாலின்

தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதன்படி, வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. மார்ச் 4-ம் தேதி மாநகராட்சிகளுக்கான மேயர், நகராட்சி சேர்மன் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கடந்த ஜனவரி 27-ம் தேதி தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையேற்ற முதல்வர் ஸ்டாலின், கழக நிர்வாகிகளை வெளுத்து வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலர், ``இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் அதிக நேரம் பேசினார். 'கோயம்புத்தூர், திருப்பூர், சேலம்... இந்த மூன்று மாநகராட்சியும் நமக்கு வீக்காக இருக்குனு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. உண்மையிலேயே அங்க நிலவரம் என்ன?' என்று முதல்வர் கேட்டபோதே, மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள் பலருக்கும் உதறல் எடுத்துவிட்டது. 'அப்படியெல்லாம் நம்ம வீக்காக இல்லைங்க தலைவரே. மக்களுக்கு நம்ம மேல நல்ல அபிப்ராயம் இருக்கு. அதனால, கொங்கு ஏரியா மாநகராட்சிகள் அனைத்தையும் நாம தான் பிடிக்கப் போறோம்' என்று சில மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்து உத்தரவாதம் அளித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட ஸ்டாலின், `இதையேத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் சொன்னீங்க. ஆனா, கோயம்புத்தூர் மாவட்டத்துல ஒரு தொகுதியில கூட தி.மு.க ஜெயிக்கல. கொங்கு ஏரியாவையே அ.தி.மு.க துடைச்சு எடுத்துட்டு போய்டுச்சு' என்று வெளுத்து வாங்கினார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் கொங்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள் தடுமாறினார்கள். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 'பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்துல தவறு நடந்திருக்கிறதாகவும், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் நிதியுதவி வழங்க நாம தவறிட்டதாகவும் அ.தி.மு.க-காரங்க பிரசாரம் செய்றாங்க. இந்த உள்ளாட்சித் தேர்தல்ல அதைத்தான் வீதி வீதியா பேசப் போறாங்க. அதை முறியடிக்குற அளவுல நம்ம பிரசாரம் இருக்கனும். நம்ம ஆட்சி மேல மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்ல. அதை காப்பாத்திக்குற மாதிரி, இந்த உள்ளாட்சித் தேர்தல்ல 21 மாநகராட்சியையும் தி.மு.க புடிச்சாகனும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதிகாரமிருக்குங்கற தைரியத்துல அசால்ட்டா இருந்துடாதீங்க. வார்டு கவுன்சிலர் சீட் கிடைக்காதவங்களை அழைச்சுப் பேசி, கட்சி வேலையைப் பார்க்கச் சொல்லுங்க. எதிர்கட்சியாக இருந்தப்பவே நாம 50 சதவிகித ஊரகப் பகுதி ஊராட்சிப் பதவிகளைப் பிடிச்சோம். இப்ப நாம ஆளுங்கட்சி. நம்ம ஆட்சி இன்னும் நாலு வருஷத்துக்கு மேல இருக்கு. அதை மனசுல வச்சுகிட்டு வேலைப் பார்க்கணும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்ல நமக்கு எந்த ஏரியாவுல பின்னடைவு வந்தாலும் சரி, அந்த ஏரியாவுக்கு பொறுப்பான மாவட்டச் செயலாளர் மேல கடும் நடவடிக்கை இருக்கும். குறிப்பா, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளை தி.மு.க பிடிச்சுடுச்சுங்கற மகிழ்ச்சியான செய்தி எனக்கு வந்தாகணும்' என்று கண்டிப்பான குரலில் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை செயல்படுத்துவதில், கொங்கு ஏரியா மாவட்டச் செயலாளர்களுக்குத்தான் சில இடர்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவை மாவட்டத்திற்குள் கரூரிலிருந்து ஆட்களை அழைத்துவந்து கட்சிப் பணிகளை மேற்பார்வையிட சொல்லியிருக்கிறார் கொங்கு மண்டலத்திற்கு பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜி. இது, லோக்கலிலுள்ள தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 'நம்ம ஏரியாவுல வந்து அவங்க நாட்டாமை பண்றதா?' என பொருமுகிறார்கள். கவுன்சிலர் சீட் எதிர்பார்ப்பவர்களிடம் வசூல் வேட்டையும் நடக்கிறது. முட்டைக்குப் பெயர்போன மாவட்டம் ஒன்றில், கவுன்சிலர் சீட்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வசூலித்திருக்கிறார் மாவட்ட பிரமுகர் ஒருவர். நகராட்சி சேர்மன் பதவியை தன் தந்தைக்கு ஒதுக்கவும் அவர் ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார். ஏற்கெனவே, கீழ்மட்ட கட்சி நிர்வாகிகளிடம் பணப்புழக்கம் எதுவுமில்லை. இந்தச் சூழலில், சீட்டுக்கு நோட்டு எதிர்பார்ப்பது கட்சிக்குள் கனலை உருவாக்கியிருக்கிறது. மூன்று மாவட்டங்களில் தி.மு.க பின்னடைவாக இருப்பதாக உளவுத்துறை மூலமாக அறிந்திருக்கும் முதல்வர், கட்சி நிர்வாகிகள் படும் சிரமத்தையும் உளவுத்துறை மூலமாக ஆய்ந்தறிய வேண்டும்" என்றனர்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க கூட்டணியிலுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு வார்டு கவுன்சிலர் சீட்டுகளை மட்டும் ஒதுக்க அறிவாலயம் முடிவெடுத்திருக்கிறது. அந்தந்த கட்சித் தலைவர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில், 'மேயர் பதவிகள் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். முதல்ல வார்டு கவுன்சிலராக ஜெயிச்சு வாங்க. பிறகு பேசிக்கலாம்' என்று கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவுரை வழங்குகிறதாம் அறிவாலயம். ஜனவரி 31-ம் தேதிக்குள் வேட்பாளர்களை இறுதி செய்து பட்டியலை அறிவிக்க தீவிரமாகியிருக்கிறது தி.மு.க தலைமை. கட்சியின் மகளிரணிக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டி, ஆட்சிக்கு எந்த அவப்பெயரும் இல்லை என்பதை நிறுவிட முயற்சிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் முயற்சி வெற்றிப் பெறுவது கட்சி நிர்வாகிகளின் செயல்பாட்டில்தான் இருக்கிறது. பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism