அலசல்
Published:Updated:

காரில் கரன்சி எண்ணும் மெஷின்... மலைக்கவைக்கும் மவுன்ட் ரோடு வசூல்... ‘உற்சாகம்’ பொங்கும் கொள்முதல்..

 வசூல் ராஜா வாரிசுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வசூல் ராஜா வாரிசுகள்!

வசூல் ராஜா வாரிசுகள்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதன்மையானவர் தொடங்கி ‘மணி’யானவர்களின் வாரிசுகள் வரை அதிகாரத்துடன் வலம்வந்ததை அப்போது எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் குற்றம்சாட்டினார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், அதே பாணியைத்தான் கையிலெடுத்திருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில், மூத்த அமைச்சர்கள் தொடங்கி முதன்முறையாக அமைச்சரானவர்கள் வரை அவர்களின் வாரிசுகளும், உறவுகளுமே துறைக்குள் கோலோச்சுகிறார்கள்!

வெயில் மாவட்டத்தில் தன் வாரிசுக்கு பட்டாபிஷேகத்தை முடித்துவிட்ட மூத்த அமைச்சர், இனிமேல் கட்சி மற்றும் ஆட்சியின் உயர்மட்ட விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக சொல்லிவிட்டதால், துறையின் டெண்டர் தொடங்கி டிரான்ஸ்ஃபர் வரை மொத்தமாகக் கையிலெடுத்துவிட்டார் வாரிசு. சமீபத்தில் அவரது துறையில் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் புனரமைப்புப் பணிகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டன. ஒப்பந்ததாரர்கள் பலரும் அமைச்சரைச் சந்திக்க சென்னை வீட்டுக்குப் படையெடுக்க... அமைச்சரோ, “இங்க எதுக்கு வந்தீங்க? ஊர்ல இருக்குற புள்ளையைப் பாருங்க...” என்று கூலாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் மொத்த கரன்சி விவகாரங்களையும் வாரிசுதான் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

கொங்கு மண்டலத்தின் பவர்ஃபுல் அமைச்சரின் சகோதரர்தான் துறையில் ஆல் இன் ஆல் என்கிறார்கள். இவரது துறை டெண்டர்களில் கடந்த ஆட்சியில் கோலோச்சிய நிறுவனங்களே இப்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதையெல்லாம் டீல் செய்வது சகோதரர்தான். அண்ணன் கைவசம் இருக்கும் மற்றொரு துறையில் எந்தெந்தத் தனியார் நிறுவனத்திடமிருந்து எவ்வளவு கொள்முதல் செய்யலாம் என்று ‘உற்சாகம்’ பொங்க முடிவுசெய்வது இவரும், துறையிலிருக்கும் ‘ஜோதி’யான பிரமுகரும்தானாம்.

தன் வாரிசை அரசியலில் இறக்க நினைத்த இனிஷியல் அமைச்சர், அது கைகூடாததால் வசூலை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை வாரிசுக்குக் கொடுத்துவிட்டார் என்கிறார்கள். கரன்சி எண்ணும் மெஷினை காரிலேயே கொண்டு செல்லும் வாரிசு, கமிஷன் தொகையை கச்சிதமாகக் கரை சேர்த்துவிடுகிறதாம். சமீபத்தில், “சுமக்க முடியலை... நம்பிக்கையான ஆள் தேவை” என்று வாரிசு கேட்கவே... கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இன்னோர் உறவையும் உள்ளே கொண்டுவந்திருக்கிறார் அமைச்சர். ஜெயமான அந்த நபர்தான் இப்போது வெளிநாடு முதலீடுகளை கவனித்துக்கொள்கிறார்.

காரில் கரன்சி எண்ணும் மெஷின்... மலைக்கவைக்கும் மவுன்ட் ரோடு வசூல்... ‘உற்சாகம்’ பொங்கும் கொள்முதல்..

“நான் அந்தக் காலத்திலேயே அமைச்சரவையில் ராஜா மாதிரி வலம்வந்தவன்” என்று தற்புகழ் பாடும் மாண்புமிகுவின் வாரிசு, அம்பத்தூரில் தனி அலுவலகம் அமைத்து மண்டலவாரியாக டார்கெட் நிர்ணயித்து ஸ்வீட் பாக்ஸ் வாங்கிவந்தார். விவகாரம் மேலிடத்துக்குப் புகாரானதை அடுத்து, கடந்த சில வாரங்களாக அடக்கியே வாசிக்கிறாராம் அந்த வாரிசு. துறைக்குள்ளிருந்து பணத்தை மட்டும் தனியாக உறிஞ்சி எடுக்கும் வித்தை தெரிந்தவரை வாரிசாகப் பெற்றதில் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறாராம் வெண்மைத்துறை அமைச்சர். மாலையானால் மவுன்ட் ரோடு அலுவலகத்தில் மூன்று மணி நேரம் முகாமிடுபவரிடம் தினசரி வசூலை மாவட்ட அதிகாரிகள் கொண்டுவந்து செட்டில் செய்துவிடுகிறார்கள். கடந்த ஆட்சியில் சர்ச்சையில் சிக்கிய உணவுப்பொருள் சப்ளை நிறுவனத்துக்கே டெண்டர் கொடுக்க, இவர் நகர்த்திவரும் காய்நகர்த்தல்கள் மலைக்கவைக்கின்றன.

தென் மாவட்ட மூத்த அமைச்சர் காலையில் மகள் முகத்தில் முழித்துவிட்டுத்தான் வெளியே கிளம்புவார். இதனால், தன் மருமகனையே வாரிசாக வைத்திருக்கிறார். புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களைக்கூட பொன்னாக மாற்றும் வித்தை தெரிந்த மாப்பிள்ளையால் வருவாய்க்குப் பஞ்சம் இல்லாமல் போகிறதாம். மற்றொரு தென் மாவட்ட மீசைக்கார அமைச்சர் தனது ‘பெரிய’ இடத்து சம்பந்தியையே வசூல் ராஜாவாக்கியிருக்கிறார். டெண்டர் விவகாரத்தில் பழுத்த அனுபவம் மிக்க சம்பந்தி, கூடல் நகரில் வைத்து மொத்த டீலிங்குகளையும் பக்குவமாக முடிக்கிறாராம்.

கொங்கு மண்டலத்தின் மற்றோர் அமைச்சர் ஒருவர் பொதுவாக உறவுகளை நம்புவதில்லை. நீண்டகாலமாக அவரிடம் பணிபுரியும் இருவர்தான் மொத்தத் துறைகளையும் ‘சதுரஅடி’ விடாமல் கணக்கு பண்ணிக்கொடுக்கிறார்கள். கோயம்பேட்டிலிருந்து மட்டுமே வாரம்தோறும் பெரிய ஸ்வீட் பாக்ஸ் ஒன்று ஆம்னி வண்டியில் பார்சலாகிவிடுகிறதாம். மூன்றெழுத்து இனிஷியல் அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாததால் துறைக்குள் நுழைந்த வாரிசு, இப்போது துறையை மொத்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். கோட்டை நகர் அமைச்சருக்கு வாரிசு மட்டுமல்லாமல், சகோதரரும் வரிந்துகட்டிக்கொண்டு துறைக்குள் வேலைகளை முடித்துத் தருகிறார்கள். சர்க்கரையாகப் பேசும் மலையடிவாரத்து மாவட்ட அமைச்சர் தனது பங்காளிகளுக்குத் தனது துறையின் உப துறைகளுக்கு தனித்தனியாக பிரித்து, பொறுப்பு கொடுத்திருக்கிறார்.

“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்”


என்கிற குறளைத் தவறாக புரிந்துகொண்டு விட்டார்கள்போலிருக்கிறது!