Published:Updated:

மோசடிக்காக கைதானவருடன் பிறந்த நாள் கொண்டாட்டமா?! - வெடிக்கும் தென் சென்னை தி.மு.க.

நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறித்த குற்றச்சாட்டில், சிறை சென்ற தமிழ்ச்செல்வன் என்பவர் தி.மு.க பிரமுகர். இவரின் அண்ணன் திருநாவுக்கரசுவும் தி.மு.க-வைச் சேர்ந்தவர். இருவருமே, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரின் தீவிர ஆதரவாளர்கள்.

தனசேகரனுடன் தமிழ்ச்செல்வன், திருநாவுக்கரசு.
தனசேகரனுடன் தமிழ்ச்செல்வன், திருநாவுக்கரசு.

சென்னையில் பணத்துக்காகத் தொழிலதிபரைக் கடத்தி, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த குற்றச்சாட்டில், கடந்த செப். 2-ம் தேதி மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் கே.கே.நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்கிற தி.மு.க. பிரமுகரும் ஒருவர். சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த இவர், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரின் பிறந்தநாளை படாடோபமாகக் கொண்டாடியிருப்பது தி.மு.க-வினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் 8-வது செக்டாரைச் சேர்ந்தவர் ஶ்ரீகுமார். ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் இவர், ஆகஸ்ட் 31-ம் தேதி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ``எனது வீட்டிலிருந்து வடபழனியிலுள்ள வணிக வளாகத்துக்குச் செல்வதற்காக, `ரேபிடோ’ ஆப் மூலம் பைக் டாக்ஸிக்குப் பதிவுசெய்தேன். நீண்டநேரமாகியும் வண்டி வரவில்லை. அப்போது, காரில் வந்த சிலர் என்னருகே காரை நிறுத்தி, `மழை நேரமா இருக்குறதால, பைக் டாக்சி இல்லை. அதுனால கம்பெனில இருந்து கார் அனுப்பியிருக்காங்க. ஏறுங்க’ என்றனர். இதை உண்மை என நம்பி, நானும் காரில் பயணமானேன்.

கார் வடபழனி செல்லாமல் கிண்டி நோக்கிச் சென்றது. நான் எதிர்த்துக் கேட்டதற்கு, கத்தியைக் காட்டி மிரட்டி, என்னிடமிருந்து 11,000 ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டார்கள். எனது ஆடைகளைக் களைந்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தனர். பின்னர் என் வீட்டருகே இறக்கிவிட்டு, `எங்களுக்கு 50,000 ரூபாய் தந்தா, இந்த வீடியோவ அழிச்சிருவோம். இல்லைனா, நெட்லவிட்டு அசிங்கப்படுத்திடுவோம்’ என மிரட்டினர்” என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்ச்செல்வன், வட்டமிட்டு காட்டப்பட்டு இருப்பவர்.
தமிழ்ச்செல்வன், வட்டமிட்டு காட்டப்பட்டு இருப்பவர்.

இதுதொடர்பாக வழக்கு பதிந்த கே.கே.நகர் போலீஸார், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன், கே.கே.நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய மூவரைக் கைது செய்தனர். இதில், சரவணன் `ரேபிடோ’ ஆப் நிறுவனத்தில் பணியாற்றுவதும், ஶ்ரீகுமார் பைக் டாக்ஸிக்காக நிற்பது தெரிந்துகொண்டு, மூவரும் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இம்மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்செய்தி நாளேடுகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறித்த குற்றச்சாட்டில், சிறை சென்ற தமிழ்ச்செல்வன் தி.மு.க பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அண்ணன் திருநாவுக்கரசுவும் தி.மு.க-வைச் சேர்ந்தவர். இருவருமே, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரின் தீவிர ஆதரவாளர்கள். இரண்டு நாள்களுக்கு முன்னர் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த தமிழ்ச்செல்வன், தனசேகரனுக்குப் பணமாலை சூட்டி, நள்ளிரவில் கேக் வெட்டி, ஏரியாவையே அமளிதுமளி ஆக்கியிருப்பதுதான் தென்சென்னை தி.மு.க-வில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தனசேகரனுக்குப் பணமாலை சூடும் தமிழ்ச்செல்வன்
தனசேகரனுக்குப் பணமாலை சூடும் தமிழ்ச்செல்வன்
தனசேகரனுக்கு பணமாலை சூட்டும் தமிழ்ச்செல்வன்
தனசேகரனுக்கு பணமாலை சூட்டும் தமிழ்ச்செல்வன்
கேக் வெட்டி கொண்டாடும் தனசேகரன், தமிழ்ச்செல்வன்
கேக் வெட்டி கொண்டாடும் தனசேகரன், தமிழ்ச்செல்வன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்சென்னை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், ``கே.கே.நகர் தனசேகரன் பிறந்தநாளின்போது, தமிழ்ச்செல்வன் சிறைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. ஊரெங்கும் அவர் பேனர் அடித்தும், தனசேகரனின் பிறந்தநாளைக் கொண்டாட முடியவில்லை. தமிழ்ச்செல்வனை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு தனசேகரன்தான் உதவியுள்ளார். இந்த உதவிக்குப் பிரதிபலனாக, சிறையிலிருந்து வெளியே வந்ததும் தனசேகரனின் பிறந்தநாளையும், தாம் சிறையிலிருந்து வெளியே வந்ததையும் சேர்த்து பிரமாண்டமாக தமிழ்ச்செல்வன் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டார். கொலை மிரட்டல்விடுத்து, ஆபாச வீடியோ எடுத்து, பணம் பறித்து குற்றச்சாட்டில் சிறைசென்ற ஒருவருக்கு இவ்வளவு வரவேற்பு தேவையா? இப்படியிருந்தால், பொதுமக்களிடம் ஏன் தி.மு.க. மீது அதிருப்தி உருவாகாது” எனக் கொந்தளித்தனர்.

இதுகுறித்துப் பேசிய தனசேகரன் ஆதரவாளர்கள், ``பிறந்தநாள் கொண்டாட வேண்டும் எனக் கட்சியினர் விருப்பப்பட்டதால்தான் தனசேகரன் கொண்டாடினாரே தவிர, தமிழ்ச்செல்வனுக்காக எதுவும் செய்யவில்லை. தவிர, தமிழ்ச்செல்வனுக்கும் புகாரளித்த ஶ்ரீகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், அதற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இப்புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. தமிழ்ச்செல்வன் மீது கட்சியே நடவடிக்கை எதுவும் எடுக்காதபோது, தனசேகரன் மீது குற்றம்சுமத்துவது அபத்தமானது” என்று விளக்கமளித்தனர்.

Tamilselvan With M K Stalin
Tamilselvan With M K Stalin

இதுகுறித்து தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "சில மாதங்களுக்கு முன்னர், புதிதாக இரண்டாயிரம் பேரைக் கட்சியில் இணைத்தோம். அவ்வகையில், தமிழ்ச்செல்வன் தி.மு.க-வில் இணைந்ததாகவும், கட்சியில் இலக்கிய அணி பகுதி அமைப்பாளராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. நான் விசாரித்த வகையில், சம்பந்தப்பட்ட தமிழ்ச்செல்வன் தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர்கூடக் கிடையாது. கட்சியில் இருந்திருந்தால், முன்னரே நீக்கியிருப்பேன். அவர், கே.கே.நகர் தனசேகரனின் உறவினர் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்" என்றார்.

எது எப்படியோ, தமிழ்ச்செல்வனும், தனசேகரனும் ஒன்றாக இருக்கும் கொண்டாட்டப் படங்கள் தி.மு.க. வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாகி தென்சென்னை தி.மு.க-வையே பரபரப்பாக்கி இருப்பது உண்மை.

`இதைத்தான் பெரியார் எதிர்த்தார்; தி.மு.க-வும் எதிர்க்கும்!’ - இந்தித் திணிப்பு குறித்து ஸ்டாலின்