அலசல்
சமூகம்
Published:Updated:

மீண்டும் அடாவடி பேச்சுகள்... அடங்காத அமைச்சர்கள், நிர்வாகிகள்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால், தி.மு.க-வினர் பேசுவது மட்டும் பெரிதாக்கப்படுகிறது. எடப்பாடி பேசுகிறார், அண்ணாமலை கண்டபடி பேசுகிறார். அதையெல்லாம் யாருமே எதுவும் சொல்வதில்லை

‘அடாவடி அமைச்சர்கள்... அதிகாரத் திமிர்... அடக்குவாரா முதல்வர்?’ என்ற தலைப்பில் 02.10.2022 தேதியிட்ட ஜூனியர் விகடனில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ‘அடாவடி அமைச்சர்களின் செயல்பாட்டுக்கு இனியேனும் கடிவாளம் போடுவாரா ஸ்டாலின்?’ என்ற கேள்வியையும் கட்டுரையின் இறுதியில் கேட்டிருந்தோம்.

மீண்டும் அடாவடி பேச்சுகள்... அடங்காத அமைச்சர்கள், நிர்வாகிகள்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் அக்டோபர் 9-ம் தேதி நடந்த தி.மு.க பொதுக்குழு மேடையில், “உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. மிக மிக எச்சரிக்கையாகப் பேசுங்கள். நாம் பயன்படுத்தவேண்டிய சொற்கள் மிக மிக முக்கியமானவை. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்... அதனால் அடுத்தவர்களிடம் பேசும்போது மிக மிக எச்சரிக்கையாகப் பேசுங்கள். என்னைத் துன்பப்படுத்துவதுபோல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது... யாரிடம் போய் சொல்வது... நாள்தோறும் காலையில், நம்மவர்கள் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் கண்விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்கவிடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்! அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தைத் தொலைக்கிறேன்” என வேதனையோடு பேசியிருந்தார்.

அதன் பிறகு நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் சிலரை அழைத்து முதல்வர் எச்சரித்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனாலும் இப்போது வரை தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் சர்ச்சையாகப் பேசுவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

மீண்டும் அடாவடி பேச்சுகள்... அடங்காத அமைச்சர்கள், நிர்வாகிகள்!

“பாத்திரம் துலக்கவா முடியும்?”

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் பங்க் திறப்புவிழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘‘அரசுமீதும், நிர்வாகம் மீதும், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள்மீதும் பொதுமக்களிடமிருந்து விமர்சனங்கள் வருவது இயல்பு. அதற்காக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் என்ன செய்ய வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும். விமர்சனம் செய்கிறார்கள் என்பதற்காக வீட்டுக்கு வீடு சென்று பாத்திரங்களைத் துலக்க முடியாது” எனப் பேசியிருக்கிறார். ஏற்கெனவே, அரசு அதிகாரியைச் சாதியரீதியில் அவமரியாதை செய்ததாக எழுந்த புகாரில் துறை மாற்றப்பட்ட ராஜகண்ணப்பன், அதன் பிறகு பொதுவெளியில் எதுவும் பேசாமல் இருந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு பொதுவெளியில் பேசிய ராஜகண்ணப்பன், தனது இந்தப் பேச்சின் மூலம் மீண்டும் சர்ச்சை வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார்.

மீண்டும் அடாவடி பேச்சுகள்... அடங்காத அமைச்சர்கள், நிர்வாகிகள்!

“துண்டிக்கப்படும்!”

நாகர்கோவிலில் நடந்த இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில், பேசிய நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், தி.மு.க-வின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், “நான் இந்த மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தும்போது, ஊறுவிளைவிக்க வேண்டும் என்று நினைத்து பா.ஜ.க கொடியை அல்ல... எதை நீட்டினாலும் (கழுத்தைக் காண்பித்து) துண்டிக்கப்படும்” என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

மீண்டும் அடாவடி பேச்சுகள்... அடங்காத அமைச்சர்கள், நிர்வாகிகள்!

“போடா மயிரு...”

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாகப் பிரிப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அங்கே சமாதானம் பேசச் சென்ற அமைச்சர் பொன்முடியால் எவ்வளவு முயன்றும் பொதுமக்களைச் சமாதானம் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அமைச்சர் பொன்முடி அங்கிருந்த பொதுமக்களில் சிலரைப் பார்த்து, ‘‘போடா மயிரு...” என்று தடித்த வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார். ஏற்கெனவே, ‘ஓசி’ விவகார அலையில் சற்று ஓய்ந்திருந்த பொன்முடி, இப்போது ‘முடி’யை வைத்து மீண்டும் சர்ச்சை வண்டியில் வாலன்டியராக ஏறியிருக்கிறார்.

மீண்டும் அடாவடி பேச்சுகள்... அடங்காத அமைச்சர்கள், நிர்வாகிகள்!

“கவனமாக இருக்கச் சொல்லுவோம்!”

அமைச்சர்களின் அடாவடிப் பேச்சு, மூத்த நிர்வாகிகளின் அதிகார தோரணை தொடர்வது குறித்து அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். “நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால், தி.மு.க-வினர் பேசுவது மட்டும் பெரிதாக்கப்படுகிறது. எடப்பாடி பேசுகிறார், அண்ணாமலை கண்டபடி பேசுகிறார். அதையெல்லாம் யாருமே எதுவும் சொல்வதில்லை. ‘கவனமாகப் பேசுங்கள்’ எனத் தலைவரே சொல்லிவிட்டார். அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அதை மீறுபவர்களை அழைத்து கவனமாக இருக்கச் சொல்லி அறிவுரை வழங்கப்படும்” என்றார் சுருக்கமாக...

பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்த கட்சிக்கு, இப்போது எப்படிப் பேச வேண்டும் என்பது மறந்துவிட்டதுபோலும்!