Published:Updated:

`சலவைத் தொழிலாளர்களை தவறாகப் பேசினாரா?' - அடுத்த சர்ச்சையில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

சமூக ஊடகங்களில், தி.மு.க `சமூக நீதிக்கு எதிரான கட்சி' என்றும் `தலித் விரோத கட்சி' என்றும் அ.தி.மு.க-பா.ஜ.க-பா.ம.க ஆகிய கட்சியினர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

சலவைத் தொழிலாளிகளை தவறாகப் பேசியதாகக் கூறி, தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனைக் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது, அ.தி.மு.க, பா.ஜ.க ஐடி-விங்க் டீம். தி.மு.க நிர்வாகிகளும் இதற்குப் பதில் கொடுக்க, உச்சக்கட்ட மோதல் வெடித்துக்கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ் பாரதி
ஆர்.எஸ் பாரதி

தி.மு.க அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை இரண்டு நாள்களுக்கு முன்பு போலீஸார் திடீரெனக் கைதுசெய்தனர். இது, தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பட்டியல் இனத்தவர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரங்களை முன்வைத்து சமூக ஊடகங்களில், தி.மு.க `சமூக நீதிக்கு எதிரான கட்சி' என்றும் `தலித் விரோத கட்சி' என்றும் அ.தி.மு.க-பா.ஜ.க-பா.ம.க ஆகிய கட்சியினர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். குறிப்பாக, பா.ஜ.க-வினர் மிகத் தீவிரமாக தி.மு.க-வை விமர்சித்துவருகின்றனர்.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

இந்நிலையில், பா.ஜ.க-வில் இணைந்த வி.பி.துரைசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், `குற்றச்சாட்டுகளை மொத்தமாகச் சொல்வது, இது மூட்டையாகக் கட்டி வண்ணானுக்கு துணி போடுற கதையா இருக்கு' என்று பேசியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஜெ.அன்பழகனின் வார்த்தைகளைவைத்தே, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துவருகின்றனர், அ.தி.மு.க-பா.ஜ.க ஐ.டி விங்க் நிர்வாகிகள்.

ஜெ.அன்பழகனிடம் பேசினோம். ``சலவைத்தொழிலாளர்கள் குறித்து நான் எந்த இடத்திலும் தவறாகப் பேசவில்லை. ஒரு இணையதள பத்திரிகையாளர், செய்தி சம்பந்தமாக என்னிடம் பேசினார். அவரிடம் பேட்டி கொடுத்தேன், அவ்வளவுதான். யாரோ ஒரு சிலர், அதில் உள்ள வாசகங்களைத் திருத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டு கெட்டபெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

இதுதொடர்பாக, சலவைத் தொழிலாளர்களின் சங்கத் தலைவர் ஒருவர் என்னிடம் பேசினார். அவரிடம் நடந்தவற்றை முழுமையாக எடுத்துக்கூறினேன். அவரும் நான் கூறியதை ஏற்றுக்கொண்டார். இல்லாத ஒன்றை சமூக வளைதளங்களில் திரித்து வெளியிடும் வேலைவெட்டி இல்லாதவர்களுக்கெல்லாம் பதிலளிக்கத் தேவையில்லை" என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு