Published:Updated:

அ.தி.மு.கவுக்குத் தூது விடுகிறாரா அனிதா? - நெருக்கும் மகன்கள்; இறுக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க., தி.மு.க எனக் கட்சி மாறினாலும் தன் செல்வாக்கால் தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏவாக இருந்து வரும் அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் வாழ்வையே கேள்விக் குறியாக்கிடும் வகையில் கழுத்தைச் சுற்றிய கத்தியாய்த் தொங்கிக்கொண்டிருக்கிறது அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.

அ.தி.மு.கவில் குறுகிய காலத்தில் எம்.எல்.ஏ., அமைச்சர், மாவட்டச் செயலாளர் என உச்சத்தை எட்டியவர் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவான அனிதா ராதாகிருஷ்ணன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களின் ஒருவராகவும் திகழ்ந்தவர். 2001-ல் கால்நடைத்துறை மற்றும் வீட்டுவசதி நகர்ப்புறத்துறையின் அமைச்சராக இருந்தார். 2009-ல் கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடு, அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகியதுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தி.மு.கவில் இணைந்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

2010-ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். ``அ.தி.மு.க., தி.மு.க என எந்தக் கட்சியானாலும் திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ அனிதாதான்” எனப் பேசப்படும் அளவிற்கு செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார். தி.மு.கவில் இணைந்த பிறகு அ.தி.மு.கவில் ஜொலித்த அனிதாவால், மறைந்த முன்னாள் தி.மு.க மாவட்டச் செயலாளரான பெரியசாமியை எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை.

அனிதா ராதாகிருஷ்ணன் அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்ததால், பெரியசாமி குறித்து சொல்லப்பட்ட புகார்கள் எதுவும் கட்சித் தலைமையில் எடுபடவில்லை. அனிதாவையும் ஒதுக்கியே வைத்திருந்தது கட்சித் தலைமை. தொடர்ந்து பெரியசாமி கொடுத்த குடைச்சல்களால் கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில், 2015-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையான போது, பகிரங்கமாக வரவேற்பு தெரிவித்தவுடன், ``ஜெயலலிதா திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பினால், எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என மீடியாக்களில் பேசியது தி.மு.க தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இதையடுத்து கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ``கட்சியிலிருந்து என்னை நிரந்தரமாக நீக்கினால் மகிழ்ச்சியடைவேன்” எனப் பதிலுக்கு மற்றொரு பேட்டியும் கொடுத்தார். மீண்டும் அ.தி.மு.கவில் இணைய கடிதம் அனுப்பியும், சில முக்கியப்புள்ளிகள் மூலம் பலமுறை தூது விட்டும் கடைசி வரையில் கார்டனின் கதவுகள் திறக்கப்படவில்லை. வேறுவழியில்லாமல்தான் பேசியதற்கு கருணாநிதி, ஸ்டாலினிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டபிறகு மீண்டும் தி.மு.கவில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அப்போதே அனிதாவையும் பெரியசாமியையும் இணைந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பிறகும் மோதல்கள் தொடந்தது தனிக்கதை.

உடல்நலக்குறைவால் பெரியசாமியின் இறப்பிற்குப் பிறகு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக பெரியசாமியின் மகளும், தற்போதைய தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவுமான கீதாஜீவனும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அனிதாவும் நியமிக்கப்பட்டார்கள். பெரியசாமி மறைந்தாலும், கீதாஜீவனுடன் தற்போது வரை மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஸ்டாலினுக்கு அனிதா மீது முழு நம்பிக்கை வரவில்லை என்பது அனிதாவுக்கே தெரியும். அதனால் மீண்டும் அ.தி.மு.கவில் இணைய காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் கசிந்தன. ஆறு மாதம் வரை ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள், கூட்டங்களில் தலை காட்டாமல் புறக்கணித்தார். அதன் பிறகு அவ்வப்போது தலைகாட்டினார்.

மறைந்த பெரியசாமியுடன் அனிதா ராதாகிருஷ்ணன்
மறைந்த பெரியசாமியுடன் அனிதா ராதாகிருஷ்ணன்

தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் அதிருப்தியிலேயே உள்ளார். இந்நிலையில், ``தற்போது மீண்டும், அ.தி.மு.கவில் இணைய தூது விட்டுள்ளார் அனிதா. அதற்குக் காரணமே சொத்துக்குவிப்பு வழக்குதான்” எனச் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம். ``அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.கவில் அமைச்சராக இருந்தபோது, அவர் வருமானத்திற்கு அதிகமாக, ரூ.4,90,29,040 அளவில் மதுரையில் சொத்துகள் வாங்கியதாக, அவரது மனைவி, மகன்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கிலிருந்து 7 பேரையும் விடுவிக்கக்கோரி அனிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ``அனிதா உள்ளிட்ட 7 பேரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க எந்த முகாந்திரமும் இல்லை” என மனுவை தள்ளுபடி செய்ததுடன், `இவ்வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதால் 6 மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும்’ என 22.09.17-ல் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது மதுரைக்கிளை. இருப்பினும் வழக்கை முடிக்கவிடாமல் மூன்று வருசமாக இழுத்தடித்து வருகிறார் அனிதா.

ஸ்டாலினுடன் அனிதா ராதா கிருஷ்ணன்
ஸ்டாலினுடன் அனிதா ராதா கிருஷ்ணன்

இதற்கு அனிதாவிற்கு ஆதரவாக நீதித்துறையைச் சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருவர் செயல்பட்டு வந்தார் என்ற தகவல் வெளியாகவே, சமீபத்தில் அந்தப்புள்ளி சேலத்திற்கு மாற்றப்பட்டாராம். அ.தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர் தலையீட்டின் பேரிலேயே இது நடந்ததாகச் சொல்கிறார்கள். தற்போது அந்த இடத்தில் பணியமர்த்தப்பட்டவர் மிகவும் கண்டிப்பானவராம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்ட பிரிவுகளின் படியேதான் இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் சொல்கிறார்கள். அதனால், அனிதா உள்ளிட்ட குடும்பத்தினருக்குத் தண்டனை கிடைப்பது உறுதி என்கிறார்கள்.

`எல்லாம் உங்களாலதான். எங்க எல்லார் பேருலயும் சொத்தை வாங்கிட்டு, இப்போ உங்களோட நாங்களும் சேந்து கோர்ட், ஜெயில்னு போகணுமா?’ என அனிதாவின் மகன்கள் கொந்தளித்து வருகிறார்களாம். `அண்ணன் எப்படியும் நம்மள காப்பாத்திடுவார்’ என அமைதி காத்து வருகின்றனர் அவரது சகோதரர்கள். தீர்ப்பு தனக்கு சாதகமாக வாய்ப்பில்லை. தீர்ப்பில் தண்டனை உறுதியானால் தனது அரசியல் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்பதை விட தனது குடும்பத்தினரும் தண்டனைக்குள்ளாவார்கள் என்பதை நினைத்து அனிதா கலங்குகிறார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இதற்கெல்லாம் ஒரே வழி,`அ.தி.மு.கவில் சம்பந்தப்பட்டவர்களிடம் சரணடைந்துவிடலாம். அ.தி.மு.கவில் இணையச் சொன்னாலும் சரி’ என முடிவெடுத்து முக்கிய அமைச்சர் ஒருவர் மூலம் ஈ.பி.எஸ்-ஐ சந்தித்து தன் நிலைமையை விளக்கிட முயன்று வருகிறார் அண்ணாச்சி. இதற்காக மற்றொரு முக்கிய நிர்வாகி மூலம் ரகசிய பேரங்களும் பேசப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைவரும் பிஸியாக இருப்பதால் கிரீன் சிக்னலுக்காக மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் அண்ணாச்சி” என்றனர்.

இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் பேசினோம், ``வழக்கு விசாரணை சரியாகத்தான் போய்க்கிட்டிருக்கு. இதுல எந்த இழுத்தடிப்பும் இல்ல. கோர்ட் விவகாரத்துல யாரும் இழுத்தடிப்பு செய்ய முடியாது. மக்களவை தேர்தலில் கனிமொழிக்கு அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்தது தெற்கு மாவட்டம்தான். அ.தி.மு.க கோட்டையான ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் 30 வருசத்துக்குப் பிறகு தி.மு.க வெற்றி பெற்றது அண்ணாச்சியாலதான். உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வெற்றியைக் கொடுத்திருக்கார். அண்ணாச்சி, கட்சியிலயும் மக்கள் மத்தியிலயும் செல்வாக்கோடதான் இருக்காருங்குறதுக்கு இதுவே சாட்சி. நடந்து முடிஞ்ச சட்டமன்றத்துல அமைச்சர் ஜெயகுமாருடனான நேருக்குநேர் விவாத்ததுல அண்ணாச்சி பேசிய பேச்சுல தளபதியார், `கலக்கிட்ட அனிதா’ ன்னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டு பாராட்டுனாங்க. `அனிதாவை மாதிரி நம்ம எம்.எல்.ஏக்கள் பேசி அமைச்சர்களை திணறடிக்கணும்’னு தளபதியார் சொன்னதே அண்ணாச்சிக்குக் கிடைச்ச அங்கீகாரம்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

இப்படி இருக்கும் போது, அ.தி.மு.கவுக்குத் தூதுவிடுறார்னு சொல்றதுல எந்த உண்மையுமில்ல. தேவையில்லாம மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுறாங்க” என்றனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தூசி தட்டப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கால் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல. அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த விவகாரத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவனின் ஆதரவாளர்கள் வேகமாகப் பரப்பி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு