Published:Updated:

``ஜெயக்குமார் வெறும் 10 மணி பேட்டி அமைச்சர்தான்!" - வெடிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

சமீபத்தில் நடைபெற்ற மீன்வளத்துறை மீதான மானியக் கோரிக்கையில், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. என்ன பேசினார் அனிதா..? அவரிடம் ஒரு மினி பேட்டி.

மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த மார்ச் 17-ம் தேதி நடைபெற்றது. இவ்விவாதத்தில் பேசிய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் வாக்குவாதமாகி, சட்டமன்றமே தகித்துவிட்டது. விவாதம் முடிந்தவுடன் அனிதாவை அருகில் அழைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``கலக்கிட்ட அனிதா” எனத் தட்டிக் கொடுத்துள்ளார்.

சட்டமன்றத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏன் பாய்ந்தார் அனிதா ராதாகிருஷ்ணன்? அவரிடமே சில கேள்விகளை முன்வைத்தோம்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

``உங்களுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது?"

``மீனவர்கள் தங்கள் வலைகளைப் பின்னுவதற்குப் பயன்படுத்தும் மீன் வலைக்கூடமும் மீன்களைப் போட்டு ஏலம்விடும் விற்பனைக் கூடமும் கடலுக்கு அருகிலேயேதான் அத்தனை பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றன. காலப்போக்கில் கடல் அரிப்பு ஏற்பட்டு, இந்தக் கூடங்கள் அழிந்துவிடுகின்றன. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுகுறித்து பேசும்போதுதான் அமைச்சருக்கும் எனக்கும் விவாதம் ஏற்பட்டது."

சட்டமன்றத்தில் எந்தெந்த வயதில் எத்தனை பேர்? - ரஜினி சொன்னது உண்மையா?

``அப்படி என்றால் ஜெயக்குமார் மீனவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்கிறீர்களா?"

``அவர் எங்கே எங்கள் பகுதிக்கெல்லாம் வந்தார்? அவர் வெறும் 10 மணி பேட்டி அமைச்சர் தானே, மீன்வளத்துறை அமைச்சராக என்ன சாதித்தார்? மீனவர்கள் பயன்படுத்தும் படகுகளைக் கரையில் ஏற்றி நிறுத்தி வைப்பார்கள். கணநேரத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு, இந்தப் படகுகள் தரைக்குள் அமுங்கிவிடுகிறது. இப்பிரச்னையைக் களைவதற்காக, படகுகளை நிறுத்தும் வகையில் ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் மினி துறைமுகம் அமைத்துத் தர வேண்டி, பலமுறை மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை."

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

``அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளீர்களே?"

``ஆமாம். டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் நடத்தும் குரூப் 2-ஏ, குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து `ஜூனியர் விகடன்' இதழிலும் செய்தி வெளியாகியிருந்தது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்ததாக சி.பி.சி.ஐ.டி கூறுகிறது. ஆனால், முறைகேட்டில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பெரிய மீன்கள் யாரும் சிக்கவில்லை எனப் பத்திரிகைகளில் செய்தி வருகின்றன. எங்கள் தலைவர்கூட சி.பி.ஐ விசாரணை கோரியுள்ளார். உண்மை வெளிவர வேண்டுமென்றால், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டுக்கு தார்மிகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ஜெயக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் விசாரணை நேர்மையாக நடக்கும்."

கண்டிப்பு, காமெடி, கெடுபிடி...  `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி

``அமைச்சர் பதவியை ஜெயக்குமார் ராஜினாமா செய்துவிட்டால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா?"

``1956-ல் அரியலூரில் ரயில் விபத்து ஏற்பட்டு 144 பேர் இறந்தனர். விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று அப்போதைய மத்திய ரயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரியும் துணை மந்திரி ஓ.வி.அழகேசனும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இன்று ஜெயக்குமாருடைய டி.என்.பி.எஸ்.சி துறைக்குள் இப்படி ஒரு முறைகேடு நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், அதைத் தடுக்க தவறியதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். இந்த அமைச்சரை இத்தனை ஆண்டுக்காலம் கண்காணிக்க தவறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பதவி விலக வேண்டும். அப்போதுதான் விசாரணை எந்த இடையூறும் இல்லாமல் நடைபெறும், உண்மை வெளிச்சத்துக்கு வரும்."

அரசியல் வெடியைக் கொளுத்திப் போட்டுவிட்டு விடைபெற்றார் அனிதா ராதாகிருஷ்ணன்.

அடுத்த கட்டுரைக்கு