Published:Updated:

அடிப்படையே புரியாமல் பேசுகிறார் அண்ணாமலை! - போட்டுத் தாக்கும் மருத்துவர் எழிலன்

எழிலன்
பிரீமியம் ஸ்டோரி
எழிலன்

ஒன்றிய அரசு நடத்திவருகிற யூ.பி.எஸ்.சி தேர்விலும்கூட, ‘மாணவர், தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்துள்ளாரா’ என்ற விவரம் கேட்கப்படுவதில்லை

அடிப்படையே புரியாமல் பேசுகிறார் அண்ணாமலை! - போட்டுத் தாக்கும் மருத்துவர் எழிலன்

ஒன்றிய அரசு நடத்திவருகிற யூ.பி.எஸ்.சி தேர்விலும்கூட, ‘மாணவர், தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்துள்ளாரா’ என்ற விவரம் கேட்கப்படுவதில்லை

Published:Updated:
எழிலன்
பிரீமியம் ஸ்டோரி
எழிலன்

நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பியனுப்பியதை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டம், மறுபடியும் சட்டமன்றத் தீர்மானம்... எனத் தமிழக அரசியல் களம் தடதடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ-வும், மருத்துவருமான எழிலனிடம் பேசினோம்...

“நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட மசோதா, ஏழை, எளிய மாணவர்களுக்கு விரோதமானது எனக் கூறுகிற ஆளுநரின் கூற்றை எப்படி மறுக்கிறீர்கள்?’’

“நீட் தேர்வு முறை, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது குறித்து, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்தக் குழுவில், மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்துறை நிபுணர்களும் உண்டு. மாநில மருத்துவக் கல்வியை நிர்வகித்துவருகிற ‘மருத்துவக் கல்வி இயக்குநரக’மும் மருத்துவக் கல்வி தொடர்பான பல்வேறு புள்ளிவிவரத் தகவல்களை இந்தக் குழுவுக்கு அளித்திருக்கிறது. அடிப்படையான இந்தத் தகவல்களை ஆதாரமாகக்கொண்டே, தமிழக அரசும் ‘நீட் தேர்வு விலக்கு’ தீர்மானத்தை இயற்றியது. இந்தச் சட்ட முன்வரைவை முழுமையாகப் படித்தறியாமலேயே, ‘ஏழை எளிய மாணவர்களுக்கு ஆதரவாக நீட் தேர்வு இருக்கிறது’ என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஆளுநர் சொல்கிறார்?’’

அடிப்படையே புரியாமல் பேசுகிறார் அண்ணாமலை! - போட்டுத் தாக்கும் மருத்துவர் எழிலன்

“தமிழக அரசின் கவனத்துக்கு இது குறித்த கூடுதல் தகவல்களை அளித்திருப்பதாக ஆளுநரே பத்திரிகைச் செய்திகளில் குறிப்பிட்டிருக்கிறாரே?’’

“ஆமாம்... தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் கவனத்துக்கு, கூடுதல் தகவல்களை அளித்திருப்பதாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்து சட்டமன்றம் கூடி, இந்தச் சட்ட முன்வரைவு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்போதுதான், ஆளுநர் அப்படி என்னென்ன தகவல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதையெல்லாம் சட்டப்பேரவைத் தலைவர் சபையில் முன்வைப்பார். நீட் தேர்வு விலக்குக்கு எதிராக ஆதாரபூர்வத் தகவல்களை ஆளுநர் கொடுத்திருப்பாரேயானால், அவற்றைப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடாமல் விட்டது ஏன் என்பதுதான் எங்கள் கேள்வி.’’

“ ‘நீட் தேர்வில் வெற்றிபெறுகிற 99% மாணவர்கள், பயிற்சி வகுப்பில் பயின்றவர்கள்’ என்று தமிழக அரசு கொடுத்திருக்கும் புள்ளிவிவரத்துக்கு ஆதாரம் கிடையாது என்பது ஆர்.டி.ஐ கேள்வியின் மூலம் அம்பலப்பட்டிருக்கிறதே?’’

“மருத்துவக் கல்வியானது ப்ளஸ் டூ தேர்வின் அடிப்படையில் நடைபெற்று வந்தபோது, ‘மாணவர்கள் எந்தப் பள்ளியில், எந்தப் பாடத்திட்டத்தில், எந்த ஆண்டு படித்தார்கள், எந்த சமூகப் பின்னணியிருந்து வந்துள்ளனர்’ என்பது போன்ற விவரங்களையெல்லாம் தெரிந்துகொள்ளும் வகையில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். எனவே, இது குறித்த முழு விவரங்களும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வசம் இருக்கும்.

ஆனால், இப்போது ஒன்றிய அரசின் கீழ் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ‘மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் படித்துள்ளனரா’ என்ற விவரம் விண்ணப்பத்தில் கேட்கப்படுவதில்லை. எனவே, இது குறித்த தகவல்களையும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுப் பெற இயலாது.

ஒன்றிய அரசு நடத்திவருகிற யூ.பி.எஸ்.சி தேர்விலும்கூட, ‘மாணவர், தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்துள்ளாரா’ என்ற விவரம் கேட்கப்படுவதில்லை. எனவே, இது குறித்த விவரம் ஒன்றிய அரசிடமும் இருக்காது.

‘எங்கள் பயிற்சி நிறுவனத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள்’ என்று பிரபல பயிற்சி நிறுவனங்கள் வெளியிட்டுவரும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்தாலே, தமிழக அரசு கூறியிருப்பதில் உள்ள உண்மைத்தன்மை வெளிப்படையாகத் தெரியும். எனவே, இதையறிய பொது அறிவே போதுமானது.’’

அடிப்படையே புரியாமல் பேசுகிறார் அண்ணாமலை! - போட்டுத் தாக்கும் மருத்துவர் எழிலன்

“தமிழக பா.ஜ.க கேட்பதுபோல், நீட் தேர்வு விவகாரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவதில், தமிழக அரசுக்கு என்ன சிரமம்?’’

“ஆளுநர், தனிப்பட்ட வகையில் சட்டப்பேரவைத் தலைவருக்குத்தான் தகவல்களை அனுப்பியுள்ளார். எனவே சட்டப்பேரவைத் தலைவர், சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் மேஜையில் இந்தத் தகவல்களை வைக்கும்போதுதான் அது என்ன என்பதெல்லாம் தெரியவரும். அதற்கு முன்னதாக சட்டசபை முதலில் கூட வேண்டும். இந்த அடிப்படை நடைமுறைகள் புரியாமலேயே, ‘வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என்று அண்ணாமலை பேசிக்கொண்டிருந்தால், நாம் என்ன சொல்வது? ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை எல்லோரும் படித்தறிகிற வகையில் இப்போதும் ஆன்லைனில்தான் இருக்கிறது. தேவைப்படுபவர்கள் டௌன்லோட் செய்து படித்துக்கொள்ளலாமே!’’

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் நீங்கள் தொடுத்திருக்கும் வழக்குக்கும், அதே கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கும் தனிநபர் மசோதாவுக்கும் என்ன வித்தியாசம்?’’

“நான் தொடுத்திருக்கும் வழக்கு என்பது, 1976 அவசரநிலை காலகட்டத்தில், கல்வியும் பொதுச்சுகாதாரமும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குச் சென்றது செல்லுமா, செல்லாதா என்பதற்கானதுதான். இதில் நீட் தேர்வு வராது. தி.மு.க எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கும் தனிநபர் மசோதா என்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நீட் தேர்வு விலக்குக்காக நாம் போராடிக்கொண்டிருக்கவேண்டிய தேவையில்லை. மாநில அரசே நேரடியாக முடிவெடுத்துக்கொள்ள முடியும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism