Published:Updated:

தி.மு.க-விடமிருந்து சிறுபான்மையினரை பிரிக்க சதி! - எழிலன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

டாக்டர் எழிலன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் எழிலன்

கலைஞரை வெறும் தி.மு.க தலைவராக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். அவர் பொது வாழ்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்

தி.மு.க-விடமிருந்து சிறுபான்மையினரை பிரிக்க சதி! - எழிலன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

கலைஞரை வெறும் தி.மு.க தலைவராக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். அவர் பொது வாழ்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்

Published:Updated:
டாக்டர் எழிலன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் எழிலன்

பீஃப் அரசியல், ஆளுநர் தேநீர் விருந்து, பா.ஜ.க-வுடனான உறவு, கருணாநிதி பேனாவுக்கு நினைவுச்சின்னம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தி.மு.க-வைச் சுற்றி எழுந்து கொண்டிருக்கின்றன. இவை குறித்து, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“பீஃப் உணவு சர்ச்சையில் தி.மு.க தொடர்ந்து சிக்கிக்கொண்டேயிருக்கிறதே?”

“பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கு சமரசம் செய்யும் ஒரு கட்சியாக தி.மு.க மாறியிருந்தால், பீஃப் விற்பனைக்குத் தடைகளைக் கொண்டு வந்திருக்கும். ஆனால், இதுவரையில் அப்படி எதையும் செய்யவில்லை. `தி.மு.க., பா.ஜ.க-வுடன் சேர்ந்துவிட்டது’ என்று சிறுபான்மை மக்களிடம் ஒரு புரளியை ஏற்படுத்தி, எங்களிடமிருந்து அவர்களைப் பிரிக்க சதி செய்கிறார்கள் எதிர்த்தரப்பினர். தி.மு.க-வுக்குக் கிடைக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குவங்கியைத் தடுக்கவே இதுபோன்ற பிரச்னையை ஏற்படுத்து கிறார்கள். உணவு அரசியல் செய்வது யாரென்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.”

“ஆனால், ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொண்டது, பா.ஜ.க-வுடன் தி.மு.க சமரசம் செய்துகொண்டதாக விமர்சனத்துக்கு உள்ளாகி யிருக்கிறதே?”

“நீட் மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பாததால், கடந்த முறை ஆளுநர் விருந்தைப் புறக்கணித்தோம். இப்போது அனுப்பிவிட்டார். அதனால், கலந்துகொண்டோம். ‘ஜனநாயக அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்ட ஒரு முதல்வராக, தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமை, சமூகநீதி காக்கும் பணியைச் செய்து வருகிறார். அரசியல் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. ‘தி.மு.க தலைவர் என்பது வேறு, அனைத்து மக்களுக்கு மான முதல்வர் என்பது வேறு. நான் காவடி தூக்க டெல்லிக்குச் செல்லவில்லை’ என்று முதல்வரே திட்டவட்டமாகக் கூறிவிட்டாரே!”

“தி.மு.க ஆட்சியிலும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கின்றனவே?”

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து சுதந்திர தினத்துக்கு முன்பாக ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். உடனடியாக அதிகாரிகளை அழைத்த நமது முதல்வர், எங்கெல்லாம் பிரச்னை நடந்ததோ அங்கெல்லாம் பட்டியலின மக்களை தேசியக்கொடியை ஏற்றவைத்து அழகு பார்த்திருக்கிறார். சாதியக் கொடுமைகளை ஒழிப்பதில், தி.மு.க அரசைத் தவிர வேறு எந்த அரசும் முனைப்பு காண்பித்தது இல்லை. சாதிய வன்கொடுமையை உடனே தீர்க்க முடியாது. சமூகத்தில் மாற்றம் ஏற்படும்போதுதான் சாதிய வன்கொடுமைகள் குறையும்”.

தி.மு.க-விடமிருந்து சிறுபான்மையினரை பிரிக்க சதி! - எழிலன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

“ `அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது’ என்று தி.மு.க-மீது குற்றச்சாட்டு இருக்கிறது. புகார் கொடுக்கவந்த நபர்மீது மின் மீட்டரை எறிந்த அரசு அலுவலரின் செயல் அதை மெய்ப்பிக்கிறதா?”

“அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மக்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காமலிருந்தது. தி.மு.க அரசு வந்த பின்னர் விரும்பத் தகாத நிகழ்வு எது நடந்தாலும், அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தாலும் சரி... மக்களிடம் தவறாக நடந்துகொண்டால் அதைச் சரிசெய்யும் நடவடிக்கையில் அரசு உடனடியாக இறங்குகிறது. 100 சதவிகிதம் லஞ்சம், ஊழல் இல்லாத அரசாக மாற்றுவதுதான் எங்களின் இலக்கு. சில விரும்பத்தகாத விஷயங்கள் நடப்பது ஒரு வெள்ளைப் பலகையில் கறுப்பு மை போன்று பளிச்செனத் தெரிகிறது. இது போன்ற கரும் புள்ளிகளை அழிக்க, தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுத்துவருகிறார்.”

“நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறிவரும் அரசு, கருணாநிதியின் பேனாவுக்கு 80 கோடி ரூபாயில் நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமா?”

“கலைஞரை வெறும் தி.மு.க தலைவராக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். அவர் பொது வாழ்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அப்படித்தான் தமிழக மக்கள் அவரைப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கொண்டே பல பிரதமர்கள், ஜனாதிபதிகளை உருவாக்கியவர் தலைவர் கலைஞர். மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம் வைக்க தி.மு.க மட்டும் இல்லை, மக்களே தன்னெழுச்சியாக ஆதரவு கொடுத்தார்கள். சர்தார் வல்லபாய் படேலுக்கு 3,000 கோடியில் சிலை வைத்தார்கள். யாராவது கேள்வி கேட்டோமா... தலைவருக்கு வைக்கும் சிலையால் நிதி மேலாண்மை கவிழ்ந்துவிடுமா என்ன?”

“அரசுமீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் அண்ணாமலை. அவருக்கு பதில் சொல்ல பயப்படுகிறதா தி.மு.க?”

“(சிரிக்கிறார்) தமிழகத்தில் தங்களைப் பிரதான எதிர்க்கட்சியாக முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக பா.ஜ.க தொடர்ந்து முயல்கிறது. வெறும் நான்கு உறுப்பினர்களை வைத்திருக்கும் பா.ஜ.க-வையும், அதன் தலைவரையும் பார்த்து அச்சப்படும் நிலையில் நாங்கள் இல்லை. எதிர்க்கட்சி அந்தஸ்தை விட்டுக்கொடுத்துவிட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் அ.தி.மு.க-தான் பா.ஜ.க-வைப் பார்த்து பயப்பட வேண்டும். அண்ணாமலையை பா.ஜ.க-வினரே ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களும்கூட, அண்ணாமலை ஏதோவொரு குழப்பமான மனநிலையில்தான் இருக்கிறார் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.”

“டாஸ்மாக்கை மூடாமல், போதையற்ற சமூகத்தை அரசால் உருவாக்க முடியும் என்று நம்புகிறீர்களா?”

“நான் இந்தப் பிரச்னையை ஒரு மருத்துவ ராகவும் பார்க்கிறேன். போதைப்பொருள் இளைஞர்களிடையே பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை முழுவதுமாக முதல்வர் ஆய்வுசெய்து போதை ஒழிப்பு என்பதையே ஓர் இயக்கமாக முன்னெடுத்திருக்கிறார். பஞ்சாப்பில் போதை என்பது எல்லை கடந்து செல்கிறது. மது ஒழிப்பு என்ற நிலையை நோக்கித்தான் நாம் பயணித்துவருகிறோம். ஆனால், மதுவைவிட போதைப்பொருள் பழக்கம்தான் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துவருகிறது. அதனாலேயே முதலில் போதை ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.”