Published:Updated:

ஆலங்குளம் தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை தற்கொலை முயற்சி! - கடையம் கூட்டத்தில் நடந்தது என்ன?

முன்னாள் அமைச்சரும், ஆலங்குளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான பூங்கோதை மன அழுத்தம் காரணமாக, தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர், மருத்துவரான பூங்கோதை ஆலடி அருணா. தென்காசி மாவட்ட தி.மு.க-வில் பல்வேறு கோஷ்டிகள் செயல்பட்டுவரும் நிலையில், எந்த அணியிலும் சேராமல் தனித்துச் செயல்பட்டுவருபவர்.

`ஒரே இடத்தில் குவிந்த தி.மு.க - அ.தி.மு.க நிர்வாகிகள்!' -`திடீர்' பதற்றத்தால் கொதித்த நெல்லை எஸ்.பி

தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளரான சிவபத்மநாதனுக்கும் பூங்கோதைக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது. அதனால், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்டச் செயலாளரை அழைப்பதில்லை.

பூங்கோதை தன் தம்பி எழில்வாணனுடன் சில வருடங்களாகப் பேசிக்கொள்வதில்லை. அதனால் எழில்வாணன், மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனுடன் சேர்ந்து பூங்கோதையை எதிர்த்து ஆலங்குளம் தொகுதிக்குள் அரசியல் செய்துவந்தார்.

பூங்கோதை எம்.எல்.ஏ
பூங்கோதை எம்.எல்.ஏ

கடந்த வாரம் ஆலங்குளத்தில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் கட்சிக் கூட்டத்துக்கு எழில்வாணன் ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டம் நடந்த இடத்தின் முன்பாக பூங்கோதை, தன்னுடைய படம் போட்ட பேனரைவைக்கச் செய்தார். கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட கடையம் பகுதியில் நேற்று (18-ம் தேதி) கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு பூங்கோதைக்கு அழைப்பு கிடையாது. என்றாலும், தன் தொகுதிக்குள் கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சி என்பதால், அவர் அந்தக் கூட்டம் நடந்த அரங்கத்துக்குச் சென்றார்.

கடையத்தில் நடந்த தி.மு.க கூட்டம்
கடையத்தில் நடந்த தி.மு.க கூட்டம்

கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அவரை மேடையில் அமர அனுமதிக்காததால், மேடையின் எதிரில் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது அவரின் ஆதரவாளர்கள் இது பற்றி கூட்ட ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அந்தச் சமயத்தில் கடையம் ஒன்றிய நிர்வாகிகள் சிலர் அவரைக் கூட்டத்தைவிட்டு வெளியே செல்லுமாறு கோஷமிட்டிருக்கிறார்கள். அதனால் அவமானமடைந்த அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்ரிருக்கிறார். இது தொடர்பாக அவர் கட்சி மேலிடத்திலும் புகார் செய்திருக்கிறார். ஆனால், கட்சித் தலைமை நடந்த சம்பவத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், அவரையே கண்டித்ததாகத் தெரிகிறது.

மருத்துவ அறிக்கை
மருத்துவ அறிக்கை

அதனால், அதிருப்தியடைந்த பூங்கோதை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மயக்கமடைந்த அவரை இன்று நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சுயநினைவு இல்லாத நிலையில் அழைத்து வரப்பட்ட நிலையில், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு