Published:Updated:

`ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மீது ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவாகவில்லை?!' -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த கனிமொழி

கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க எம்.பி கனிமொழி
தி.மு.க எம்.பி கனிமொழி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை நடக்கவுள்ளது. புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்குச் சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல் நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை, வேலையின்மை போன்ற விவகாரங்களை முன்வைக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

சென்னை ஐ.ஐ.டியில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 52 தற்கொலைகள் பற்றியும் அக்கல்வி நிறுவனங்களில் சாதி, மத பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்தார்.

`கயிறு எங்கிருந்து கிடைத்தது?' - கேரள மாணவி ஃபாத்திமா தற்கொலையில் தந்தை சந்தேகம்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசிய தூத்துக்குடி தி.மு.க எம்.பி கனிமொழி, ``மெட்ராஸ் ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 52 மாணவர்கள் 10 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு நிலவுவதாக 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு என்ன கற்பிக்கப்படுகிறது. ஃபாத்திமா லத்தீப் நம்பிக்கையுடன் ஐ.ஐ.டி சென்றார். ஆனால், ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்டார். இதில் பல மர்மங்கள் நிலவி வருகின்றன. ஃபாத்திமாவின் பெற்றோர்கள் அவர் தங்கியிருந்த விடுதி அறைக்குச் சென்றபோது அந்த அறை முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

அவர் தூக்கிட்டுக் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஃபாத்திமா தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறும் நிலையில் அந்தக் கயிற்றைக்கூட அப்புறப்படுத்தியிருந்தார்கள்.

ஃபாத்திமா தன் செல்போனில் சில ஸ்கீரின் ஷாட்டுகளை எடுத்து வைத்திருந்தார். அதில் சில பேராசிரியர்களின் பெயர்களைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை அந்தக் குறிப்பிட்ட பேராசிரியர்களுக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. யாரைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள். ஐ.ஐ.டி-யில் நடக்கும் தற்கொலைகளுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சாதி ரீதியிலான பாகுபாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சாதி, மத பாகுபாடுகளுடன் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதை அனுமதிக்கக் கூடாது'' என்றார் கொதிப்புடன்.