Published:Updated:

`தமிழகத்தில் ரூ.60,000 கோடி முதலீடு எங்கே... வெள்ளை அறிக்கை வெளியிடுக!’- கனிமொழி எம்.பி

கனிமொழி
கனிமொழி

`தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட ரூ.60,000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் தொடர்ந்து சொல்லிவருகிறார். இது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்’ - கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார், எம்.பி., கனிமொழி. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டபட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். சில தினங்களுக்கு முன்புகூட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கனிமொழி
கனிமொழி

அவர் அ.தி.மு.க அமைச்சர்களுடன் பணியாற்றிய புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. குற்றாவளிகளைக் காப்பாற்றுவதில்தான் அ.தி.மு.க தொடர்ந்து அக்கறைகாட்டிவருகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தி.மு.க-வின் தொடர் போராட்டத்தின் காரணமாகத்தான் அந்தச் சம்பவம் குறித்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. ஏற்கெனவே ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கு விசாரணை வேகமாக நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிரடிகாட்டும் சி.பி.ஐ! - அ.தி.மு.க-வுக்கு நெருக்கடியா?

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில்கூடரூ.60,000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் தொடர்ந்து சொல்லிவருகிறார். தமிழகத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் என்னென்ன... எந்தெந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் எந்த ஊழல் வழக்கும் நிரூபிக்கப்படவில்லை.

கனிமொழி
கனிமொழி

தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்துமே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டவைதான். தோல்வி பயத்தின் காரணமாகத்தான் அ.தி.மு.க-வினர், தி.மு.க நடத்தும் கிராமசபைக் கூட்டங்களை விமர்சித்துவருகின்றனர். தி.மு.க நடத்தும் கிராமசபைக் கூட்டங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடும். இந்தக் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு தி.மு.க ஆட்சி அமைந்ததும் தீர்வுகாணப்படும். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க செய்யத் தவறியதை நாங்கள் செய்வோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு