Published:Updated:

`எல்லா மாநிலங்களிலும் உங்கள் தலைமையில்தான் அமைச்சரவை அமையணுமா?' - கனிமொழி

``மகாராஷ்ட்ராவில் ஜனநாயகத்துக்கு பா.ஜ.க துரோகம் செய்துள்ளது” எனத் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி
கனிமொழி

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ கீதாஜீவன் தலைமையில் நடந்த இந்த மருத்துவ முகாமை, தூத்துக்குடி எம்.பி கனிமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டு, முகாமில் கலந்துகொண்டவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மருத்துவ முகாமில் கனிமொழி
மருத்துவ முகாமில் கனிமொழி

``மகாராஷ்ட்ரா அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு, பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் விளைவித்ததுடன், ஜனநாயகத்துக்கும் துரோகம் செய்துள்ளது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றாலும் பா.ஜ.க தலைமையில்தான் அமைச்சரவை அமைய வேண்டும் என்ற மனோபாவ நிலையில்தான் மத்திய அரசு செயல்படுகிறது.

மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற அநீதி குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்திய வங்கிகள், உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். முதலில் நாட்டில் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் சரிவடையாமல் பாதுகாத்தாலே போதும்.

மருத்துவ முகாமில்
மருத்துவ முகாமில்

அதன்பின்னர், வங்கிகளை உலகத்தரத்துக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். தேசிய அளவில் மருத்துவ, நீட் பி.ஜி தேர்வில் ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய அநீதி. இது குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க சார்பில் நிச்சயமாகக் கேள்வி எழுப்பப்படும்” என்றார்.