Published:Updated:

`தி.மு.க-வில் இளம் மகளிர் அணி!’ - ராஜினாமா கொந்தளிப்பில் கனிமொழி?

கனிமொழி
கனிமொழி

உதயநிதி தனியாகச் செயல்பட, முடிவெடுக்க தலைமை எந்தத் தடையும் நெருக்கடியும் கொடுப்பதில்லை. ஆனால், கனிமொழி தரப்பு எந்த விவகாரத்தில் பெயரெடுத்தாலும், அங்கு உதயநிதியும் வந்துவிடுகிறார் எனக் கனிமொழி தரப்பு கடும் அப்செட்.

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு இடையே ஆன்லைன் அரசியலும் வேகமெடுத்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா குறித்து மட்டும் நடந்த விவாதங்கள் தற்போது அரசியல் பக்கமும் திரும்பியுள்ளது. காரணம், 2021 சட்டப்பேரவை தேர்தல். மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சில அரசியல் நகர்வுகளைக் காண முடிகிறது.

தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்
தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

தி.மு.க-வில் தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமடைந்திருக்கிறது. ஒருபுறம் சீனியர்கள் தங்களின் செல்வாக்கைத் தக்க வைக்க பல்வேறு விஷயங்களைச் செய்து வருகிறார்கள். மறுபுறம் ஐபேக் நிறுவனமும் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதனிடையே தி.மு.க-வில் இளம் பெண்களைக் கவரும் பொருட்டு புதிய அணி உருவாக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய அணிக்கு திட்டமிட்டது தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்தான் என்கிறார்கள். இதற்குத் தலைமையின் ஒப்புதலும் கிடைத்துவிட்டதாம்.

இளம் பெண்கள் பேரவை - பின்னணி என்ன?

உதயநிதி ஸ்டாலினின் `இளம் பெண்கள் பேரவை’ திட்டத்துக்கு பின்னால், கனிமொழியை ஓரங்கட்டும் திட்டமும் இருப்பதாக கூறுகிறார்கள் சிலர். இது தொடர்பாக தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். `இளம் பெண்கள் பேரவையின் முக்கிய நோக்கமே தி.மு.க மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை ஓரங்கட்டுவதுதான். இந்தியாவில் கொரோனா பரவலுக்கு முன்னதாகவே இந்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

டெல்லி ஜே.என்.யு மாணவர்கள் விவகாரத்திலே இது வெளிப்பட்டது. பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டபோது கனிமொழி எம்.பி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். `தி.மு.க உங்களுக்குத் துணை நிற்கும்' என்று உறுதியையும் அந்த மாணவர்களிடம் வழங்கினார். ஆனால், அவர் சந்தித்த அடுத்த சில நாள்களில் தமிழகத்திலிருந்து புறப்பட்டு டெல்லி சென்ற உதயநிதியும் மாணவர் சங்க பிரதிநிதிகளைச் சந்தித்தார். அப்போதே, கனிமொழி அதிருப்தி அடைந்தார் என்று செய்திகள் வெளியானது.

முகக்கவசமே `அரசியல்' ஆயுதம்! - உதயநிதிக்கு கனிமொழி ரியாக்‌ஷன் என்ன?

இதனிடையேதான் கொரோனா பரவல் தொடங்கியது. கொஞ்ச நாளைக்கு அரசியல் நிகழ்வுகள் தடைபட்டது. பின்னர், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் காவல்நிலையத்தில் அடித்து கொல்லப்பட்ட விவகாரம் வெடித்தது. அப்போது தூத்துக்குடி எம்.பி என்கிற முறையிலும் கட்சி சார்பாகவும் கனிமொழி, களத்தில் இறங்கி பணி செய்தார். இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு சாத்தான்குளம் சென்று வந்தார். இது கனிமொழி தரப்பை மீண்டும் கடுப்பேற்றியது. உதயநிதி தனியாகச் செயல்பட, முடிவெடுக்க தலைமை எந்தத் தடையும் நெருக்கடியும் கொடுப்பதில்லை. ஆனால், கனிமொழி தரப்பு எந்த விவகாரத்தில் பெயரெடுத்தாலும், அங்கு உதயநிதியும் வந்து விடுகிறார் எனக் கனிமொழி தரப்பு கடும் அப்செட்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஒருபுறம், `உதயநிதியை வைத்து கனிமொழியைக் காலி செய்யும் திட்டங்கள் இது' என்ற குற்றசாட்டுகள் பறக்க, மறுபுறம் அது எதையும் கண்டு கொள்ளாமல் அடுத்த அடுத்த திட்டங்களுக்கு உதயநிதி தயாராகி வருகிறார். அதன்படி தி.மு.க மகளிர் அணியை டம்மி அணியாக்கவே, உதயநிதி தலைமையில் இளம் பெண்கள் பேரவை தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. கனிமொழி கட்சியில் இருக்கலாம். எம்.பி-யாகச் செயல்படலாம். ஆனால், ஆளுமை செலுத்தக் கூடாது என்பதில் குடும்பத்தில் ஒரு சிலர் உறுதியாக இருக்கிறார்களாம். முன்னாள் தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உயிருடன் இருந்தவரை, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதில்லை என வேதனை குரல்கள் மகளிர் அணி பக்கத்தில் இருந்து வெளிப்படுகிறது.

ராஜினாமா கொந்தளிப்பில் கனிமொழி?

இதுவரை பனிப்போர் மாதிரி நடந்து வந்த மோதல் விவகாரம் தற்போது வெளிப்படையாக மகளிர் அணியை ஒட்டுமொத்தமாக முடக்கும் வகையில் செய்யப்படுவதாக மகளிர் அணியைச் சேர்ந்த சிலர் வருத்தம் தெரிவிக்கிறார்கள். `இளம் பெண்கள் பேரவை தொடங்கப்பட்டாலும், மகளிர் அணியின் ஒரு அங்கமாக தானே இருக்க வேண்டும். ஏன் மகளிர் அணி விவகாரங்களில் உதயநிதி உள்ளே வருகிறார்?' என அப்செட்டின் உச்சத்தில் இருக்கிறது கனிமொழி தரப்பு.

கனிமொழி
கனிமொழி

இது தொடர்பாக எம்.பி கனிமொழி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர்கள், ``இளம் பெண்கள் பேரவை என்ற பெயரில் புதிய அணிக்கான முயற்சி நடப்பதாக எங்களுக்கும் தகவல் வந்தது. நாங்களும் தலைமையிடம் இது தொடர்பாகப் பேசினோம். ஆனால், இந்த விவகாரத்துக்கு தலைவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். மீண்டும் இப்படியான முயற்சி நடந்தால், மகளிர் அணிச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய கனிமொழி தயாராக இருக்கிறார்” என்றனர். உதயநிதியை வைத்து நடத்தப்படும் இந்த ஆடு புலி ஆட்டம் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் அதிகமாகும் என்றே அறிவாலய வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு