Published:Updated:

`பிள்ளையார் சுழி போட்டதே தமிழக அரசுதான்!'- ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக கொதித்த திமுக எம்.பி

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தி.மு.க-வினர் போராட்டம்
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தி.மு.க-வினர் போராட்டம்

கதிராமங்கலம் முழுவதும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஏழு கிணறுகள் அமைத்து காஸ் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டிருக்கிறது. தினமும் 600 மெட்ரிக் டன் எடுப்பதாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி லாபம் அடைவதாகவும் சொல்லப்படுகிறது.

எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்றும் பிள்ளையார் சுழி போட்டது தமிழக அரசு. தற்போது மத்திய அரசு அதையே பின்பற்றுகிறது என தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழநிமாணிக்கம் தெரிவித்தார்.

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தி.மு.க-வினர் போராட்டம்
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தி.மு.க-வினர் போராட்டம்

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை மற்றும் மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தேவையில்லை என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு டெல்டா மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்ததுடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி தஞ்சாவூரில் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வந்தனர். ஆனால், காவல்துறையினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து, தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகர் அறிவித்தார். அடுத்த சிறிது நேரத்தில் போராட்டத்துக்கு அனுமதி வழங்கினர் காவல்துறையினர்.

தஞ்சையில் நடைபெற்ற போராட்டம்
தஞ்சையில் நடைபெற்ற போராட்டம்

இந்த நிலையில், தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ராமலிங்கம், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். `மத்திய மாநில அரசுகளே விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே', `டெல்டா பகுதியை பாலைவனம் ஆக்காதே', `கார்ப்பரேட் நிறுவனத்துக்கு துணை போகாதே', `தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு' என கோஷமிட்டனர்.

பின்னர் ராமலிங்கம் பேசுகையில், ``என் தொகுதிக்குள் இருக்கிற கதிராமங்கலம் முழுவதும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஏழு கிணறுகள் அமைத்து காஸ் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டிருக்கிறது. தினமும் 600 மெட்ரிக் டன் எடுப்பதாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி லாபம் அடைவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஒரு வருடத்துக்கு ரூ.720 கோடி வணிகம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதற்கான ராயல்டி தொகை கூட தமிழக அரசுக்குத் தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வேதாந்தா போன்ற நிறுவனங்கள்தான் இதற்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதை முற்றிலுமாக கைவிட வேண்டும். அது வரை போராட்டங்கள் தொடரும்" என்றார்.

தஞ்சையில்  நடைபெற்ற போராட்டம்
தஞ்சையில் நடைபெற்ற போராட்டம்

பிறகு செய்தியாளர்களிடம் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் கூறுகையில், ``எட்டு வழி சாலை திட்டத்துக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்றும் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழக அரசு. தற்போது மத்திய அரசு அதையே பின்பற்றுகிறது. பெட்ரோலியத் துறை அமைச்சர் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது தமிழக அரசாங்கத்தை கலந்து ஆலோசிக்காமல், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் புதிதாக எந்த ஓர் ஒப்பந்தமும் போட மாட்டோம் என வாக்குறுதி அளித்திருக்கிறார். ஒரு அமைச்சர் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்குறுதி அளித்துவிட்டு அது தொடர்பாக மாற்றுக் கருத்து கூறினால் அவை உரிமை மீறல் பிரச்னைக்கு உரியதாகும்" என்றார்.

பின் செல்ல