Published:Updated:

அத்திவரதர் சிறப்பு தரிசனத்துக்கு 'பாஸ்' கேட்கும் தி.மு.க வி.ஐ.பி-க்கள்!

அத்திரவரதர் சிறப்பு தரிசன டிக்கெட் கேட்டு தி.மு.க எம்.பி-க்கள் வரிசையில் இருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இக்கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருளி இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த சேவை நிகழ்ச்சி, ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 48 நாள்கள்வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கும் அத்திவரதர், முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற நிலையிலும் காட்சியளிப்பார் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர்
அத்திவரதர்

அத்திவரதரைத் தரிசிப்பதற்காக, வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காஞ்சிபுரம் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த வி.ஐ.பி-க்களும் அத்திரவரதரைத் தரிசிக்க முட்டி மோதுவதாகத் தெரியவந்துள்ளது. கடவுள் மறுப்புக் கொள்கையை வலியுறுத்தி வளர்ந்த இயக்கம் தி.மு.க அண்மைக்காலமாக அந்தக் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கோயில்களுக்குச் செல்வதும், காசிக்கு யாத்திரை மேற்கொள்வதும், காஞ்சிபுரம் அத்திரவரதரை தரிசிக்க டிக்கெட் கேட்டு வரிசையில் நிற்பதும் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, ஜூலை 8-ம் தேதியன்று அத்திவரதரை தரிசனம் செய்தார். இந்தச் சூழலில் தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி-க்கள் சிலர், தங்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு தரிசன டிக்கெட் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் மேல் கடிதம் எழுதியுள்ளனர்.

அத்திவரதரை தரிசிக்கும் துர்கா ஸ்டாலின்
அத்திவரதரை தரிசிக்கும் துர்கா ஸ்டாலின்

மாநிலங்களவை உறுப்பினரும் தி.மு.க கொறடாவுமான டி.கே.எஸ்.இளங்கோவன், ஜூலை 2-ம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என்னுடைய உறவினர் திருநாவுக்கரசு குடும்பத்தினர் 03.07.2019 அன்று, ஸ்ரீ அத்திவரதர் மூலவரை சிறப்பு தரிசனம் செய்ய 6 நுழைவு சீட்டுகளும் (வி.வி.ஐ.பி), ஒரு வாகன அனுமதி பாஸும் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரியுள்ளார்.

இதேபோல் அரக்கோணம் தொகுதி தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன், ஜூலை 4-ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருந்த கடிதத்தில், “என் மனைவி அனுசுயா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் (மொத்தம் 6 பேர்) 6.7.2019 அன்று ஸ்ரீ அத்திவரதர் மூலவரை சிறப்பு தரிசனம் செய்ய வி.வி.ஐ.பி நுழைவுச் சீட்டும், ஒரு கார் பாஸும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் கடிதம்
டி.கே.எஸ்.இளங்கோவன் கடிதம்

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினர் அத்திவரதர் தரிசனத்துக்காக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்வது பற்றி, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டண்டைனிடம் பேசினோம். " 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று அறிஞர் அண்ணா சொன்னார். அந்தக் கொள்கையில் நாங்கள் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க-வின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்துள்ள பலரும், ஜனநாயக முறைப்படி செயல்படுவதற்கு இந்த இயக்கம் அவர்களுக்கான உரிமையை வழங்குகிறது. கடவுளுக்கு எதிரான கட்சியல்ல தி.மு.க" என்றார்.

இந்து மக்கள் கட்சியின் பா.செந்தில் கூறுகையில், “இதுவரை ஆத்திகர்களை மட்டுமே ஏமாற்றி வந்த தி.மு.க-வினர், ஓட்டு அரசியலுக்காகத் தற்போது நாத்திகர்களையும் ஏமாற்றத் துணிந்துவிட்டனர். அவர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டிருக்குமானால், ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றபோது, நெற்றியில் வைக்கப்பட்ட திலகத்தை ஸ்டாலின் அழித்திருப்பாரா. இந்துக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இனிமேலும் தி.மு.க-வின் நாடகத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்றார்.

ஜெகத்ரட்சகன் கடிதம்
ஜெகத்ரட்சகன் கடிதம்

நாடகமோ... நடிப்போ, அத்திரவரதர் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கேட்டு தி.மு.க எம்.பி-க்கள் வரிசையில் இருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது என்னவோ உண்மை.