Published:Updated:

சபாநாயகர், துணை சபாநாயகர், கொறடா யார்யார்? - முதல்வர் ஸ்டாலின் போடும் கணக்கு என்ன?

ஸ்டாலின்
ஸ்டாலின்

சபாநாயகர், துணை சபாநாயகர், கொறடா பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்று தொடர் போட்டி நிலவுவதாக தி.மு.க வட்டாரங்கல் தெரிவிக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வென்று ஆட்சியமைத்துவிட்டது. மே 7-ம் தேதியான இன்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், சட்டமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடா ஆகிய பதவிகளுக்கான போட்டி துவங்கியுள்ளது.

இந்த மூன்று பொறுப்புகளுக்கும் யாரை ஸ்டாலின் நியமிக்கவிருக்கிறார் என்பது குறித்து தி.மு.க மூத்த அமைச்சர் ஒருவரிடம் கேட்டோம். ``தி.மு.க அமைச்சரவையில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கவுண்டர் சமூகத்துக்கும், தேவர் சமூகத்துக்கும் நான்கு அமைச்சர்கள், வன்னியர், நாடார் (இந்து மற்றும் கிறிஸ்தவ), நாயுடு மற்றும் பட்டியல் சமூகங்களுக்கு தலா மூன்று அமைச்சர்களும், முதலியார், முஸ்லிம், ரெட்டியார், யாதவர் ஆகிய சமூகங்களுக்கு தலா இரண்டு அமைச்சர்களும், முத்தரையர், மீனவர், செங்குந்தர், படுகர், செட்டியார் ஆகிய சமூகங்களுக்கு தலா ஒரு அமைச்சர்களும் கொடுக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை
அமைச்சரவை

இந்த நிலையில், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடா ரேஸில் சிலர் உள்ளனர். முதலில் அமைச்சரவைப் பட்டியலில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகியவற்றுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. மேற்கில் சேலம் மாவட்டத்துக்கும் பிரதிநிதித்துவமில்லை. மேலும், வன்னியர் சமூகத்துக்கு பொதுவாக நான்கு அமைச்சர்கள் கொடுப்பார்கள், இம்முறை மூன்றுதான் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒன்று கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது. பிள்ளைமார் சமூகத்துக்கு பிரதிநிதித்துவமே கொடுக்கப்படவில்லை. அதனால், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடா பதவிகள் இதனை ஒட்டியே இருக்கப்போகிறது.

வன்னியர் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக ஒருவரைச் சேர்க்க வேண்டும் என்று முடிவானால், சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் சேலம் வடக்கில் வென்றுள்ள ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு துணை சபாநாயகரோ, அரசு கொறடாவோ கொடுக்கப்படலாம். இதேபோல், 5-வது முறை எம்.எல்.ஏ-வாக ஆகியிருக்கும் உத்திரமேரூர் சுந்தருக்கு வன்னியர் கோட்டாவில் துணை சபாநாயகர் அல்லது அரசு கொறடா பதவி கொடுக்கப்படலாம்.

அடுத்து பிள்ளைமார் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாததால், அந்தக் குறையைப்போக்கவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு அமைச்சர் இல்லாத குறையைப்போக்கவும், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியனுக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் அல்லது அரசு கொறடா என மூன்றில் ஒன்று கிடைக்க வாய்ப்புள்ளது. 1989-ல் 24 வயதில் முதலில் எம்.எல்.ஏ ஆனவர் உதயசூரியன். அப்போது 25 வயதுக்கு மேலானோர்தான் எம்.எல்.ஏ-க்களாக ஆக முடியும் என்ற விதி இருந்ததால், உதயசூரியன் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கே நடந்தது. இவரும் தொடர்ச்சியாக 5-வது முறையாக தற்போது எம்.எல்.ஏ-வாக ஆகியிருக்கிறார் என்பது கூடுதல் தகுதி.

டெல்டாவுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க முடிவெடுத்தால், அங்கு நால்வர் இருக்கிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர் கோவி.செழியன், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த திருவையாறு துரை.சந்திரசேகர், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன்.

பொதுவாக கருணாநிதி பட்டியல் இனத்தவருக்கு துணை சபாநாயகர் பதவி கொடுப்பது வழக்கம். அந்த வகையில், கோவி செழியனுக்கு துணை சபாநாயகருக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாயுடுவுக்கு மூன்றும், முக்குலத்தோருக்கு நான்கும் என அமைச்சர்கள் உள்ளனர். இருந்தபோதும் டெல்டா கோட்டாவின்படி கொடுக்க முடிவெடுத்தால் துரை.சந்திரசேகர் அல்லது சாக்கோட்டை அன்பழகனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மீனவர் சமூகத்துக்கு சென்னையில் மா.சுப்ரமணியன் ஒருவருக்குத்தான் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் அமைச்சரவையில், அன்றைய ஜெயலலிதா விசுவாசி..! - யார் இந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்?

ஆக மொத்தத்தில், பிள்ளைமார் சமூக பிரதிநிதித்துவத்தில் உதயசூரியனும், வன்னியருக்கான கூடுதல் கோட்டாவில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் சுந்தர் ஆகியோரும், டெல்டா கோட்டாவில் கோவி செழியன், நிவேதா முருகன் ஆகியோரில் ஒருவரும் முதல்வர் ஸ்டாலினால் டிக் அடிக்கப்படலாம். இந்த ஐவரில் ஒருவர் சபாநாயகராகவும், ஒருவர் துணை சபாநாயகராகவும், ஒருவர் அரசு கொறடாவாகவும் நியமிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.

அதேநேரம், தற்போது அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கும் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., ரகுபதி போன்றோர் வயது முதிர்வு காரணமாகவும், கொரோனா பரவலாலும் ஃபீல்டுக்குச் சென்று வேலை செய்ய முடியாது. எனினும், கடைசி காலம் என மன்றாடியதால் இவர்களுக்கு ஸ்டாலின் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் மாற்றுவேன் என்று சொல்லித்தான் கொடுத்திருக்கிறார். அதனால், குறைந்தது ஆறு மாதத்தில் மந்திரி சபை ஜெயலலிதா பாணியில் மாற்றியமைக்கப்படும்!” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு