Published:Updated:

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்கிறோம்!

ஆர்.எஸ்.பாரதி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.எஸ்.பாரதி

- மின்கட்டண உயர்வுக்கு ஆர்.எஸ்.பாரதியின் ‘பலே’ விளக்கம்

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்கிறோம்!

- மின்கட்டண உயர்வுக்கு ஆர்.எஸ்.பாரதியின் ‘பலே’ விளக்கம்

Published:Updated:
ஆர்.எஸ்.பாரதி
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி, பரபரத்துக்கொண்டிருக்கிறது அறிவாலயம். பரபரப்புகளுக்கு நடுவே தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிக்கொண்டிருந்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தேர்தல் குறித்தும், அரசின்மீதான விமர்சனங்கள் குறித்தும் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“அ.தி.மு.க ஒரே அறிவிப்பில் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்தது. ஏன் தி.மு.க-வுக்கு மூன்று மாதங்கள்?”

“மூன்று மாதங்கள் அல்ல... ஒரு வருடத்துக்கு மேல்கூட தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் நடக்கும். இது விதிகளைப் பின்பற்றுவதால் எடுக்கும் கால அவகாசம். புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி, கிளைக் கழகம் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரையில் அடுக்கடுக்காகத் தேர்தல் நடத்துவோம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கீழ்மட்டப் பொறுப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்துவிட்டோம். சட்டமன்றத் தேர்தல், கொரோனா தொற்றின் தீவிரம் எனப் பல்வேறு இடையூறுகள் இருந்ததால், உடனே அடுத்தகட்ட தேர்தலை நடத்த முடியவில்லை. தற்போது இயல்புநிலை திரும்பிவிட்டதால், தேர்தல் ஆணையத்திடம் கூடுதல் கால அவகாசம் வாங்கி, மேல்மட்டப் பொறுப்புகளுக்கான தேர்தலை நடத்திக்கொண்டிருக்கிறோம்.”

“எல்லாம் விதிப்படி சரியாக நடக்கின்றன என்றால், ஏன் மாவட்டம் மாவட்டமாக நிர்வாகிகள் அறிவாலயத்துக்குப் புகாரோடு படையெடுத்து வந்தார்கள்?”

“பிரச்னைக்குரிய இடங்களில் இரண்டு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்துவைப்பது அண்ணா, கலைஞர் காலத்திலிருந்து நடைமுறையில் இருப்பதுதான். இப்போதும் அதுதான் நடக்கிறது.”

“பலருக்கும் பணம் வாங்கிக்கொண்டே பதவி கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தனவே?”

“எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்கள்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுதான். ஆனால் யார், எங்கே, எப்போது பணம் வாங்கினார்கள் என்று யாரும் சொல்லவில்லையே. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.”

“தி.மு.க தலைமைக் கழகப் பொறுப்பில், ஏன் பெண் உறுப்பினர்களுக்குப் பெரிய அளவில் இடமே கொடுப்பதில்லை?”

“துணைப் பொதுச்செயலாளராக சத்தியவாணி முத்து இருந்திருக்கிறார். எஸ்.பி.சற்குண பாண்டியன் இருந்திருக்கிறார். சுப்புலட்சுமி ஜெகதீசன் இருந்திருக்கிறார். கிளைக் கழகத்திலிருந்து தலைமைக் கழகம் வரை கட்டாயம் ஒரு பெண் இருக்க வேண்டும் எனச் சட்டமே இருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்தக் குற்றச்சாட்டு தவறானது.”

“சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகுவதற்கான உண்மையான காரணம் என்ன?”

“உடல்நிலை சரியில்லை என்பதால் விலகுவதாக அவரே சொல்லியிருக்கிறார்கள். அதில் நான் மேற்கொண்டு எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.”

“கனிமொழி, துணைப் பொதுச்செயலாளராக வாய்ப்பு இருக்கிறதா?”

“அது குறித்து ‘தலைவர் தேர்தல்’ முடிந்த பிறகு தலைமை முடிவெடுக்கும். அது நியமனப் பதவி என்பதால், அதில் யாரும் தலையிட முடியாது.”

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்கிறோம்!

“மின்கட்டணம், சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது எனப் புகார்கள் குவிகின்றனவே?”

“மின்கட்டணம், சொத்து வரி போன்றவற்றை உயர்த்தவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால், அது ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் செய்யப்பட்டுள்ளது. ‘இருப்பவர்களிடம் எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்க வேண்டும்’ என அண்ணா சொன்னதைப்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் தி.மு.க அரசு வந்த பிறகுதான் குற்ற வழக்குகள் குறித்து உண்மையான தகவல்கள் வெளியில் சொல்லப்படுகின்றன. கடந்த ஆட்சியில் எல்லாவற்றையும் மறைத்து, உண்மைக்குப் புறம்பான தகவல்களையே மக்களிடம் கொடுத்தார்கள். எனவே, இப்போது அதிகம் இருப்பதுபோலத் தெரிகிறது. விரைவில் எல்லாவற்றுக்கும் தீர்வு காணப்படும்.”

“ `தமிழ்நாட்டில் நான்கு முதல்வர்கள் இருக்கிறார்கள்’ என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறாரே?”

“பொய் சொல்வதற்காகவே பிறப்பெடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர் சொல்லும் எதையும் பொருட்படுத்தத் தேவையில்லை.”

“அமலாக்கத்துறையை மோடி பயன்படுத்துவதுபோல, லஞ்ச ஒழிப்புத்துறையை ஸ்டாலின் பயன்படுத்தி முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களை மிரட்டுகிறாரா?”

“ஒன்றிய அரசு அமலாக்கத்துறை மூலம் ஆயிரக்கணக்கான வழக்குகள் போட்டிருக்கிறது. அவற்றில் 0.5 சதவிகிதத்தைக்கூட நிரூபிக்க முடியவில்லை. ஆனால் தி.மு.க., ஜெயலலிதா மீது சுமத்திய புகாரில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். பல முன்னாள் அமைச்சர்களும் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். தி.மு.க எப்போதும் ஆதாரமின்றி புகார் கொடுத்ததே இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்போதே தொடுக்கப்பட்ட புகார்களில்தான் இந்த நடவடிக்கைகளெல்லாம் எடுக்கப்படுகின்றன. இது எப்படி மிரட்டலாகும்?”

“தி.மு.க ஆட்சியில் மதரீதியிலான சர்ச்சைகள் அதிகரித்திருக்கின்றனவே?”

“தமிழ்நாட்டில் மதத்தை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடலாம் என முயல்கிறார்கள். 1971 தேர்தலிலேயே இதை முயன்று பார்த்து மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தார்கள். அதே மாதிரி இப்போதும் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களால் பதப்படுத்தப்பட்ட மண் இது. இங்கே மத அரசியல் எடுபடாது.”

“பா.ஜ.க-வைப் பார்த்து தி.மு.க பயப்படுகிறது என்கிறார்களே?”

“ `நானும் ரௌடிதான்... நானும் ரௌடிதான்’ என்று வடிவேலு சினிமாவில் சொல்வாரே... அதுபோலத்தான் பா.ஜ.க சொல்லி வருகிறது. அதற்கெல்லாம் யாராவது பயப்படுவார்களா?”