Election bannerElection banner
Published:Updated:

எடப்பாடியில் யார் போட்டி? 25 தொகுதிகளுக்கு தி.மு.க வேட்பாளர் பட்டியல் ரெடி!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

ஒருபக்கம் தி.மு.க-வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடந்துவரும் வேளையில், இன்னொரு பக்கம் கட்சித் தலைமையும், ஐபேக்கும் இணைந்து வேட்பாளர் பட்டியலையே தயார் செய்திருக்கின்றன.

நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தல் அ.தி.மு.க-வுக்கு வந்தால் மலை என்கிற நிலைதான். ஆனால் தி.மு.க-வுக்கோ வாழ்வா சாவா பிரச்னை. மத்தியில் ஆளும் பா.ஜ.க மீதும், மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இதுதான் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க சரியான தருணம் என நம்பும் பலர், தி.மு.க சார்பில் போட்டியிட முடிவெடுத்து விருப்ப மனுவும் அளித்திருக்கிறார்கள்.

அதற்கு முன்பாகவே ஐபேக் தமிழகத்தையே ஒன்றுக்கு மூன்று முறை ரவுண்ட் அடித்து மூவர் பட்டியல், ஐவர் பட்டியல் என உத்தேசப் பட்டியலை தலைமைக்கு அனுப்பிவிட்டது. ஐபேக் மீது நிறைய பணப் புகார்கள் எழுந்ததால், அவர்கள் கொடுத்த பட்டியலில் உள்ளவர்கள் சரியான தேர்வாக இருப்பார்களா என்று ஆராய தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனியாக ஒரு குழுவை அனுப்பிவைத்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தநிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் நேர்காணல் நடத்திவருகிறார்கள். நாளை சனிக்கிழமையுடன் நேர்காணல் முடிவடைகிறது. மார்ச் 10-ம் தேதி புதன்கிழமை தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் ரிலீஸாகவிருக்கிறது. பொதுக்குழு கூட்டப்படும் முன்பாக தீர்மானத்தை ரெடி செய்வதுபோல, கூட்டணிக் கட்சிகளிடம் இத்தனை தொகுதிகள்தான் என்று டைப் செய்துகொண்டு வலுக்கட்டாயமாகக் கையெழுத்து பெறுவதுபோல, போட்டியிடும் வேட்பாளர்களை முன்னரே தேர்வு செய்துவிட்டு, கண்துடைப்புக்காக, தொண்டர்கள் தலைவரைச் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்வதற்காக நேர்காணல் டிராமா நடக்கிறது என்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், 10-ம் தேதி வெளியாகப்போகும் வேட்பாளர் பட்டியலின் காப்பி ஒன்று ரகசியமாக நமக்குக் கிடைத்தது. இதுதான் உண்மையான பட்டியலா அல்லது இறுதிக்கட்ட மாற்றம் இருக்குமா என்பது முழுப் பட்டியல் வெளியாகும்போது தெரியவரும். அதனால், தற்போது இதை உத்தேசப் பட்டியல் என்றே சொல்லலாம். முதற்கட்டமாக 25 வேட்பாளர்கள் அடங்கிய `ரேண்டம்’ பட்டியலை நம்மிடம் கொடுத்து, அது குறித்துப் பேசினார் அறிவாலய முக்கியப்புள்ளி ஒருவர். ``இதுவரை கிருஷ்ணகிரி, தருமபுரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருவண்ணாமலை, சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் பற்றிச் சொல்கிறேன். இதில் சில தொகுதிகளில் இருவருக்குள் பலத்த போட்டி இருப்பதால், மார்ச் 9-ம் தேதிதான் ஸ்டாலின் ஃபைனல் செய்வார்” என்று கூறியவர், பட்டியலை நீட்டினார்.

வேட்பாளர் நேர்காணல்
வேட்பாளர் நேர்காணல்

உத்தேசப் பட்டியல்:

1) கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் முருகனே போட்டியிடுகிறார்.

2) அதே கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதியில், அங்கு சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஒய்.பிரகாஷ்தான் வேட்பாளர்.

3) தருமபுரி மாவட்டம், தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கு, மாவட்டப் பொறுப்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான தடங்கம் சுப்ரமணியனே வேட்பாளர்.

4) தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் இன்பசேகரன்தான் மீண்டும் போட்டியிடுகிறார்.

5) செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் வரலட்சுமி மதுசூதனன், மீதுஏகப்பட்ட புகார்கள் இருப்பதாதால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்தி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்படவிருக்கிறார்.

அரசியலிலிருந்து விலகிய சசிகலா: தி.மு.க-வுக்கு லாபமா... நஷ்டமா?

6) தூத்துக்குடி மாவட்டம்,ஓட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதியில் மாணவரணியைச் சேர்ந்த தாமஸ் என்பவர் போட்டியிடுகிறார்.

7) திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் போட்டியிட விரும்புகிறார். எனினும், வயது முதிர்வு காரணமாக அவரருடைய மகன் பிரபாகரை களமிறக்க முடிவெடுத்திருக்கிறார்.

8) திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெறும் 47 வாக்குகளில் தோல்வியுற்ற அப்பாவு மீண்டும் களம் காண்கிறார்.

9) விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான தங்கம் தென்னரசுவே போட்டியிடவிருக்கிறார்.

10) தேனி மாவட்டம், போடி சட்டமன்றத் தொகுதியில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸை எதிர்த்துக் களம்காண அவருடைய பரம எதிரியும், மாவட்ட பொறுப்பாளருமான, தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனை நிறுத்த ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

11) சென்னை மாவட்டம், ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து மாவட்டப் பொறுப்பாளர் இளைய அருணா போட்டியிடவிருக்கிறார்.

12) சென்னை மாவட்டம், திருவொற்றியூர் தொகுதிக்கு அங்கு எம்.எல்.ஏ-வாக இருந்து சமீபத்தில் காலமான கே.பி.பி.சாமியின் சகோதரர், கே.பி.பி.சங்கர் களமிறங்கவிருக்கிறார்.

13) சென்னை மாவட்டம், தியாகராய நகர் தொகுதியில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் மகனும், சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ராஜா அன்பழகன் போட்டியிடவிருக்கிறார்.

14) சென்னை மாவட்டம், அண்ணாநகர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ எம்.கே.மோகனின் மகனும், தி.மு.க ஐடி விங் முக்கிய நிர்வாகியுமான எம்.கே.எம்.கார்த்தி களமிறக்கப்படவிருக்கிறார்.

15) சென்னை மாவட்டம், வேளச்சேரி தொகுதியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சைதை மகேஷ்குமார் நிறுத்தப்படவிருக்கிறார்.

16) சென்னை மாவட்டம், மதுரவாயல் தொகுதிக்கு கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. தந்தை ஸ்டாலின் கோட்டாவில் பகுதிச் செயலாளர் காரம்பாக்கம் கணபதியும், மகன் உதயநிதி கோட்டாவில் இளைஞரணியைச் சேர்ந்த மணிகண்டனும் மோதுகிறார்கள். 10-ம் தேதிதான் இதற்கான விடை கிடைக்கும்.

17) திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் மகன், எ.வ.வே.கம்பன் நிறுத்தப்படவிருக்கிறார்.

18) திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியில் அம்பேத்குமார் நிறுத்தப்படவிருக்கிறார்.

19) திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான கு.பிச்சாண்டியே நிற்கிறார்.

20) நீலகிரி மாவட்டம், குன்னூரில் உதகமண்டலம் தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளர் முபாரக் போட்டியிட முடுவெடுத்திருக்கிறார்.

21) சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. எடப்பாடி காவேரி களம் இறக்கப்படவிருக்கிறார்.

22) சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தி.மு.க சார்பில் காசி மாணிக்கம் நிறுத்தப்படவிருக்கிறார்.

23) சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ மாறன் போட்டியிடவிருக்கிறார்.

24) சேலம் மாவட்டம், சேலம் மேற்கு தொகுதியில் தாமரைக்கண்ணன் போட்டியிடவிருக்கிறார்.

25) சேலம் மாவட்டம், சேலம் வடக்கு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ ராஜேந்திரனே நிறுத்தப்படவிருக்கிறார்.

இது முதற்கட்ட பட்டியல்தான். அடுத்தகட்ட உத்தேசப் பாட்டியல் விரைவில் கிடைக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு