Published:Updated:

`குடிநீருக்கு 150 அடி அணையா?’ - கர்நாடக அரசுக்கு எதிராகக் கொதித்த எ.வ.வேலு

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தாமல், அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. என்று கூறி, திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தி.மு.க-வினர்.

கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குவது தென்பெண்ணையாறு. இந்த ஆற்றின் குறுக்கே 150 அடியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கியுள்ளது. கர்நாடக அரசின் இந்தச் செயலால் தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைவார்கள். கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தாமல், தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக தி.மு.க குற்றம் சாட்டுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டத் தலைநகரில், அ.தி.மு.க அரசைக் கண்டித்து தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

`குடிநீருக்கு 150 அடி அணையா?’ - கர்நாடக அரசுக்கு எதிராகக் கொதித்த எ.வ.வேலு

திருவண்ணாமலையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு , ``கர்நாடக மாநிலம் நந்திமலையில் தென்பெண்ணையாறு உற்பத்தியாகிறது. சிக்கபள்ளாபூர், கோலார், பெங்களூர் வழியாக 110 கி.மீட்டரும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 320 கி.மீட்டரும் பயணிக்கிறது. தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கும் 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு உள்ளது. கர்நாடகத்தைவிட தமிழகத்தில்தான் இந்த ஆறு அதிக தூரம் பயணிக்கிறது.

தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கேண்டய நதியில் குடிநீர்த் தேவைக்கென்று அணை கட்டுகிறோம் என்று கூறி, மத்திய அரசை ஏமாற்றி அனுமதி பெற்றுள்ளது கர்நாடக அரசு. இதை எதிர்த்து 2013-ல் ‘ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவு கேட்டது’. ஆனால் என்ன நடந்தது... ‘மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான்’ என்ற கதையாகிவிட்டது. குடிநீர்த் தேவைக்கென கர்நாடக அரசு பொய்யான வாக்குறுதியை உச்ச நீதிமன்றத்தில் அளித்தது. ரூ.240 கோடியில் 150 அடி உயரம் அணையை கட்டும்போதே இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஜெயலலிதா அரசு தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. பெயருக்கென்று ஒரு வழக்கை மட்டும் தொடர்ந்தது. அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமியின் அரசாவது தடுத்திருக்க வேண்டாமா?

சாத்தனூர் அணை
சாத்தனூர் அணை

குடிநீருக்காக 150 அடி அணையா? குடிநீருக்கென்றால் நம்முடைய சாத்தனூர் அணை -119 அடி தான், கிருஷ்ணகிரி அணை - 117 அடி கொள்ளளவு கொண்டது. ஆனால், 150 அடி உயரம் கட்டுவது எதற்கு? கட்டவேண்டிய அவசியம் என்ன? 1892-ம் ஆண்டு, மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறுகிறது கர்நாடகம். 1956-ம் ஆண்டு நதிநீர் சட்டப்படி, நடுவர் மன்றம் அமைத்து, கர்நாடகத்திற்கு எவ்வளவு தண்ணீர், தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் என்பதை முறைப்படுத்த வேண்டும். அதன் பின்பே அணை கட்டியிருக்க வேண்டும்.

மத்திய அரசு புதிய அணையைக்கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சொல்கிறது. நதிகளைப் பொறுத்தவரை கடைமடை உரிமையைத் தடுக்க முடியாது. இது, உலகம் ஏற்றுக்கொண்ட சட்டம். எனவே, 3 அல்லது 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசிடம் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டும்” என்றார். மேலும் அவர் கூறுகையில், கம்பராமயணத்தை எழுதியது கம்பர் என்றுகூடத் தெரியாத முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும் நம் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள் இவர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை” என்றார்.