Published:Updated:

ஒன் பை டூ

இராஜீவ் காந்தி,கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
இராஜீவ் காந்தி,கரு.நாகராஜன்

“திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்!” என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேச்சு சாத்தியமா?

ஒன் பை டூ

“திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்!” என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேச்சு சாத்தியமா?

Published:Updated:
இராஜீவ் காந்தி,கரு.நாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
இராஜீவ் காந்தி,கரு.நாகராஜன்

இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க.

“சாத்தியம்தான்! இந்தியா முழுவதும் திராவிட மாடலை எடுத்துச் செல்வது மிகவும் எளிது. பல்வேறு மாநிலங்கள் இட ஒதுக்கீட்டையும் சமூகநீதியையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இதேபோல மாநில சுயாட்சி, சுகாதாரம், கல்வி குறித்தும் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கும், மதத்துக்கும், மொழிக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ‘முதலில் சம நீதி வேண்டும், அதற்குச் சம வாய்ப்பு வேண்டும்’ என்பதுதான் தந்தைப் பெரியார் சொல்வது. அதையொட்டி எல்லோருக்கும் எல்லாம் என்பதைத்தான் திராவிட மாடலாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறோம். ‘ஒரு சாமானியனும் அரசைக் கேள்வி கேட்க முடியும், சாமானியனின் குரலுக்கும் அரசு பதில் சொல்ல வேண்டும்’ என்ற நிலையை அடைய வேண்டும் என்பதுதான் முதல்வர் நமக்குச் சொல்வது. அதை நாம் இப்போது அடைந்திருக்கிறோம். கருத்தியல்ரீதியாக தி.மு.க-வுடன் முரண்பட்டு நிற்கும் இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகள்கூட எங்களின் கருத்தியலைப் பின்தொடர முயல்கிறார்கள். திராவிட மாடல்தான் தீர்வு என்று சொல்லவில்லை. நாங்கள் பெற்ற அனுபவங்களை, அரசியல் விடுதலையை, ஏற்கெனவே வெற்றிபெற்ற ஒரு கோட்பாட்டைப் பிறருடன் பகிர்ந்துகொள்கிறோம். மற்றவர்களிடமிருந்து நாங்களும் கற்றுக்கொள்கிறோம். இது ஒரு கருத்துருவாக்கம்தான். இதுதான் தீர்வு எனச் சொல்லவில்லை!”

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி
கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க.

“சாத்தியமா, இல்லையா என்பதைத் தாண்டி, இது தேவையில்லாதது. `திராவிட மாடல்’ என்று சொல்லி, தமிழர்கள் யார் என்ற உண்மையை மறக்கச் செய்வதுதான் தி.மு.க-வின் திட்டம். இவர்கள் சொல்லும் இந்த மாடல் ராஜஸ்தான், குஜராத், பீகார், காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு எப்படிப் பொருந்தும்? முதலில் நம் அருகிலிருக்கும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களே ‘திராவிடம்’ என்றால் என்னவென்று கேட்பார்கள். இப்படி யிருக்கும்போது இந்தியா முழுமைக்கும் எடுத்துச்செல்வேன் என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. ஒருகாலத்தில் தி.மு.க-வின் பதவியை நீக்கிய கட்சி காங்கிரஸ். அவர்களை மேடையில் வைத்துக்கொண்டே திராவிட மாடல், ஜனநாயகம், மாநில சுயாட்சி பற்றி ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆட்சிக்கு வருவார்கள், ஊழல் செய்வார்கள், விசாரணை நடக்கும். பள்ளிகளைத் தனியார் நடத்தும், டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தும். எதிர்க்கட்சியாக ஒன்று பேசுவார்கள், ஆளுங்கட்சியாக வேறொன்று பேசுவார்கள். இதைத்தான் திராவிட மாடல் என்கிறார்களா? திராவிடம் என்றால் என்னவென்று இங்கிருப்பவர்களுக்கே தெளிவில்லாதபோது இந்தியா முழுமைக்குமான திராவிட மாடல் கோட்பாடு என்று எதைச் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. திராவிடம் என்ற ஒரு கொள்கையே இல்லை. முதலில் தமிழன், அடுத்து இந்தியன் இதுதான் நமது கொள்கை. வாரிசுகள் தொடர்ந்து அதிகாரத்துக்கு வருவதுதான் இவர்கள் சொல்லும் திராவிட மாடல் என்றால், அது காங்கிரஸிலும் இருக்கிறது. தி.மு.க-விலும் இருக்கிறது. அது இந்தியா முழுமைக்கும் தேவையில்லாதது!”