Published:Updated:

திருவண்ணாமலை: `இது கட்சியா இல்லை அடிமைச் சாசனமா?’- தி.மு.க நிர்வாகியின் பதவிப் பறிப்பு பின்னணி

சுந்தரேசன்
சுந்தரேசன்

``கருணாநிதி புள்ளைக்கும் சேர்த்துதான் சொல்றேன். ரத்தம் சிந்தி சிறைக்குச் சென்றவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்க மாட்டாங்க. இது கட்சியா... இல்லை அடிமைச் சாசனமா எழுதிக் கொடுத்துட்டோமா?’’ என்று கேள்வி எழுப்பிய தி.மு.க நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

திருவண்ணாமலையை அடுத்துள்ள சாவல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞர் சுந்தரேசன். இவருக்கு வயது 68. தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இயக்கத்தில் பயணிக்கிறார். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியிடம் உதவியாளராகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னாளில் தி.மு.க-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாகவும் வலம்வந்தார். சாவல்பூண்டி ஊராட்சித் தலைவராக தொடர்ந்து ஆறு முறை தேர்வாகியிருக்கும் சுந்தரேசன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகித்தார். சிறந்த பேச்சாளர், பெரியாரியக் கொள்கைப் பிடிப்பாளர் என அறிவாலயம் வரை அறியப்பட்ட சாவல்பூண்டி சுந்தரேசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு.

மணக்கோலத்தில் சுந்தரேசன்
மணக்கோலத்தில் சுந்தரேசன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயதுடைய அபிதா என்ற இளம்பெண்ணைக் காதலித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். ஏற்கெனவே மனைவி, மகன், மகள் இருக்கிறார்கள். பேரப்பிள்ளைகள் இருக்கும் நிலையில் பேத்தி வயதுடைய பெண்ணை சாவல்பூண்டி சுந்தரேசன் காதல் திருமணம் செய்துகொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சாவல்பூண்டி சுந்தரேசன் பேசியதாக ஆடியோ உரையாடல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை ஒருமையில் அவன், இவன் என்று கண்டபடி கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் சுந்தரேசன்.

``மேடையில் எ.வ.வேலு, என் பெயரைச் சொன்னால் ஜால்ரா பசங்க எவனும் கைத்தட்ட மாட்டேங்கறானுங்க. எ.வ.வேலுவின் பையன் கம்பன் கட்சியில் வந்து எதையும் புடுங்கலை. அப்பன் நிழல்ல இருக்கிற அவனுடைய பெயரைச் சொன்னால் கைதட்டுறானுங்க. நாங்க உழைச்ச உழைப்பெல்லாம் வீண்தானே... `கையில் பணம் இருந்தால் கழுதைகூட அரசனடி. கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைக்கூட அழகனடி’னு சொல்ற மாதிரி இருக்கிறது. பள்ளிக்கூடம், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ-னு எட்டு கல்லூரிகள் நடத்துகிறார் எ.வ.வேலு. மருத்துவக் கல்லூரியும் கட்டிவருகிறார். தமிழ்நாடு முழுவதும் 6,000 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி, கரூரில் 500 கோடி ரூபாய் ஃபைனான்ஸ், சினிமா படத்துக்கு ஃபைனான்ஸ் மற்றும் விநியோகம் எனப் பல்வேறுத் தொழில்களுடன் டி.வி தொடரும் எடுக்கிறார்.

ஸ்டாலினுடன் எ.வ.வேலு
ஸ்டாலினுடன் எ.வ.வேலு

இங்கு கட்சித் தொண்டன் கொடி எடுத்து ஓடுறான், குதிக்கிறான், ரத்தம் சிந்துறான், ஒரு பொறுப்புக்குக்கூட வராமல் அப்படியே செத்துப்போறான். வேலு மகன் கட்சிக்கு வரட்டும். வேணாம்னு சொல்லலை. அந்த நாற்காலியில இன்னிக்கே போய் உட்காரணுமா? ஏதாவது கல்லூரி நிர்வாகத்தைப் பார்க்கட்டும். அப்பன் மந்திரியா இருப்பாரு, மாவட்டச் செயலாளராக இருப்பாரு. அப்புறம் நீ வருவ. கருணாநிதி புள்ளைக்கும் சேர்த்துதான் சொல்றேன். பொழப்பைக் கெடுக்கிறானுங்க. ரத்தம் சிந்தி சிறைக்குச் சென்றவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்க மாட்டானுங்க. இது கட்சியா இல்லை அடிமைச் சாசனமா எழுதி கொடுத்துட்டோமா?

வேலு மகனை `கலியுக கம்பன், கலசப்பாக்கத்தைக் காப்பாற்ற வந்த கடவுள்’னு ஜால்ரா பசங்க சொல்றானுங்க. என்ன கொடுமை பாரு இந்த நாட்டுல. கட்சி எவ்வளவு கேவலமாப் போய்க்கிட்டிருக்கு...’’ என்று கடும் சொற்களால் நீள்கிறது சாவல்பூண்டி சுந்தரேசனின் ஆடியோ உரையாடல். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சாவல்பூண்டி சுந்தரேசனை கட்சியிலிருந்து ஓரங்கட்ட முடிவு செய்தார். நிர்வாகிகளுடன் ஆலோசித்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார். அதோடு, சாவல்பூண்டி சுந்தரேசன் கூறியிருந்த சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளையும் மறுத்து பேட்டி கொடுத்திருந்தார் எ.வ.வேலு. இதையடுத்து, அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார் சாவல்பூண்டி சுந்தரேசன்.

முரசொலி அறிவிப்பு
முரசொலி அறிவிப்பு

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் `முரசொலி’ நாளிதழில் வெளியாகியிருக்கும் அறிவிப்பில், சுந்தரேசன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவந்ததால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து, சாவல்பூண்டி சுந்தரேசனிடம் பேசினோம். ``கட்சி என்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது, உட்கட்சி விவகாரம். அப்பா, அம்மா கண்டிப்பதைப் போன்று கட்சி என்னைக் கண்டிக்கிறது. அதற்கான காரணம் குறித்து பத்திரிகைகளுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தலைமை என்னை அழைத்து விளக்கம் கேட்டுக்கொள்ளும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு