Published:Updated:

கருணாநிதி படித்த பள்ளியில் ஜெயலலிதாவைப் பாராட்டிய உதயநிதி! - உடன்பிறப்புகள் அதிருப்தி

தனது தாத்தா படித்த 
வகுப்பறையில் உதயநிதி ஸ்டாலின்
தனது தாத்தா படித்த வகுப்பறையில் உதயநிதி ஸ்டாலின்

`இதைப் பெருந்தன்மையா பார்க்க முடியலை. கலைஞர் மறைஞ்ச பிறகும்கூட, இப்பவரைக்கும் அ.தி.மு.க-காரங்க, அவரைக் கடுமையா திட்டிக்கிட்டு இருக்காங்க.’

தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்,`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். நேற்று திருவாரூரிலுள்ள வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இந்தப் பள்ளி, மறைந்த தி.மு.க தலைவரும் உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவுமான கருணாநிதி படித்த பள்ளி. இங்கு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், மறைந்த தமிழக முதல்வரும், அ.தி.மு.க-வின் பொதுச்செயாளருமான ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து பாராட்டும்விதத்தில் பேசினார். இதனால் பொதுமக்களும் தொண்டர்களும் சற்றுக் குழப்பமடைந்தார்கள். தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளை ஒப்பிடுவதற்காக உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியிருந்தார். `ஆனாலும்கூட, இதை இங்கு வந்தா பேச வேண்டும்?’ எனக் கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், அதிராம்பட்டினம், மன்னார்குடி, வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரையும் சந்தித்தார். வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். மன்னார்குடி அருகேயுள்ள வடுவூருக்குச் சென்றார். அது விளையாட்டு வீரர்கள் அதிகம் நிறைந்த கிராமம். அங்குள்ள உள் விளையாட்டரங்கில் ,உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுவதற்காக, சிலம்பாட்டம், கபடி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, தென்பாதி கிராமத்தில் வசிக்கும் தி.மு.க கிளைச் செயலாளர் `மைக்’ ரவி என்பவரின் வீட்டுக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அவருக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் வழங்கினார். நேற்று திருவாரூரிலுள்ள வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதயநிதி ஸ்டாலினின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி படித்த பள்ளிக்கூடம்.

இங்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தா படித்த வகுப்பறையில் சற்று நேரம் அமர்ந்திருந்தார். இங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய உதயநிதி, ``எடப்பாடி பழனிசாமியும், தமிழக காவல்துறையும்தான், `விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ பிரசாரப் பயணத்துக்கு கூடுதலான விளம்பரம் பெற்றுதந்தவர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணிக்கு தமிழக மக்கள் தண்டனை கொடுத்தீர்கள். சட்டப்பேரவைத் தேர்தலிலும் தண்டனை கொடுப்பீர்கள் என நம்புகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமையாது என நினைத்திருந்தோம். ஆனால், அமித் ஷா தமிழகம் வந்து அந்தக் கூட்டணியை உறுதி செய்துவிட்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை. நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் இதுவரை 16 மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், சட்டப் போராட்டம் நடத்தி, நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாமல் செய்யப்படும்’ என்றார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஜெயலலிதாவைப் பாராட்டும் விதத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கட்சி நிர்வாகிகளை அதிருப்தி அடையவைத்தது. ``நம்ம தலைவர் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டு, அந்த அம்மாவை பாராட்டிப் பேசுறது சரியில்லை. இந்தப் பள்ளிக்கூடத்துல கலைஞர் மாணவப் பருவத்துல இருந்தப்பவும், அதுக்குப் பிறகும்கூட எவ்வளவோ உணர்வுபூர்வமான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு. இங்க இருக்கும் கட்சி சீனியர்கள்கிட்ட கேட்டிருந்தா நிறைய குறிப்புகள் கொடுத்திருப்போம். அதைப் பத்தியெல்லாம் பேசாமல், நீட் தொடர்பா ஜெயலலிதாவைப் புகழ்ந்துக்கிட்டு இருக்கார். இதை பெருந்தன்மையாப் பார்க்க முடியலை. கலைஞர் மறைஞ்ச பிறகு கூட, இப்போ வரைக்கும் அ.தி.மு.க-காரங்க அவரைக் கடுமையாகத் திட்டிக்கிட்டு இருக்காங்க. ஆனால் இவரே, ஜெயலலிதா ஆட்சியைப் பாராட்டினால், எப்படி மக்களுக்கு தி.மு.க மேல ஈர்ப்பு வரும்?!

அதுவும் இல்லாம, மத்திய அரசு இப்போதான் நீட் தேர்வை தீவிரமாக நடைமுறைப்படுத்தியிருக்கு. இப்போ ஜெயலலிதா இருந்திருந்தால், நீட் தேர்வை உறுதியா எதிர்த்திருப்பாங்களானு சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமியை டேமேஜ் செய்யறதுக்காக, ஜெயலலிதாவை புகழுறதை எந்தவிதத்துலயும் ஏத்துக்க முடியலை. அதுவும் கலைஞரோட சொந்த மாவட்டத்துல. அவர் படிச்ச பள்ளிக்கூடத்துல நின்னுக்கிட்டு நீட் தேர்வைப் பத்தி ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசலாமா?’ என மூத்த உடன்பிறப்புகள் சிலர் ஆதங்கப்பட்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு