Published:Updated:

`அந்த அறிக்கையால் ஏற்பட்ட சேதம்!’- டெல்லி காங்கிரஸ் கூட்டத்தை தி.மு.க புறக்கணித்தது ஏன்?

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி

கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் புகைச்சல் தொடர்பாக சோனியா காந்தியைச் சந்தித்து கே.எஸ்.அழகிரி பேசுவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

நாடு முழுவதும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி, நேற்று மதியம் அனைத்துக் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ள உள்ளனர் எனக் கூறப்பட்டது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சி.ஏ.ஏ விவகாரத்தில் எதிர்கொள்வது குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. மேலும் மத்திய அரசுக்கு எதிராகக் கூட்டாகச் செயல்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின்
சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சோனியா காந்தியே அழைப்பு விடுத்ததால் பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதுவரை இந்தக் கூட்டத்தில் தி.மு.க கலந்துகொள்ளும் என்றே கூறப்பட்டுவந்தது. ஆனால், கூட்டம் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தி.மு.க சார்பில் யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிய வந்தது.

உதயநிதியின் டெல்லி ஜே.என்.யூ விசிட்... தி.மு.க. ரியாக்‌ஷன் என்ன?!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. கூட்டணி தர்மத்தை தி.மு.க மதிக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தி.மு.க-வைக் குற்றம்சாட்டியிருந்தார். இதை மையமாக வைத்துதான் சோனியா கூட்டத்தை தி.மு.க புறக்கணித்தது என்று விவாதம் எழுந்தது. இதற்கிடையே, கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் புகைச்சல் தொடர்பாக சோனியா காந்தியைச் சந்தித்து கே.எஸ்.அழகிரி பேசுவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அநேகமாக இன்று அவர் சோனியாவைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், துரைமுருகன்
டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், துரைமுருகன்

இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பது தொடர்பாக இந்து ஆங்கில நாளிதழுக்கு டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார். அதில், ``கூட்டணி தர்மத்திற்கு தி.மு.க கட்டுப்படவில்லை என்று கே.எஸ். அழகிரி எங்கள் தலைவர் ஸ்டாலினைக் குற்றம்சாட்டிய பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும். வெளிப்படையான அறிக்கையை வெளியிட அவருக்கு என்ன ஆனது?. கூட்டணியில் பிரச்னை இருந்தால் ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி நேரில் தெரிவித்திருக்க வேண்டும். அவர்கள் எங்களை கேலி செய்துள்ளனர்.

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டு... தி.மு.க கூட்டணிக்கு காங்கிரஸ் வேட்டு?!

கே.எஸ்.அழகிரி அறிக்கைக்குப் பிறகு கூட்டத்தில் பங்குபெற போவதில்லை என்ற தி.மு.கவின் முடிவை உடனடியாக குலாம்நபி ஆசாத்திடம் தெரிவித்துவிட்டோம். அழகிரி அறிக்கையையும் அவருக்கு நான் அனுப்பினேன். பின்னர், அஹ்மத் படேலும் என்னிடம் பேசினார். அவர்கள் அழகிரி வருத்தம் தெரிவித்ததை அவர்கள் எங்களிடம் கூறினர். ஆனால் அவரின் அறிக்கையால் ஏற்பட்ட சேதத்தை தவிர்க்க எதுவும் செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

மேலும், டெல்லி காங்கிரஸ், தி.மு.கவிடம் நல்ல உறவைப் பேணும்போது தி.மு.க இந்த விஷயத்தை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள என்ன காரணம் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு, ``தமிழகம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். ஏனெனில் எங்கள் கட்சிக்கு தமிழ்நாடு மிகவும் முக்கியமானது. டெல்லி அல்ல. அழகிரியின் அறிக்கையால் எங்கள் தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். உண்மையில், நாங்கள் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸை மரியாதையுடன் நடத்தினோம்" என்று டி.ஆர்.பாலு விளக்கம் கொடுத்துள்ளார்.

கூட்டணிக்குள் குழப்பம்... காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க?
அடுத்த கட்டுரைக்கு