Published:Updated:

`12-வது வார்டுக்கு ரூ.10 லட்சம் கேட்கிறார்!' -புதுக்கோட்டை உடன்பிறப்பைப் பதறவைத்த தி.மு.க

`என்னுடைய செலவுக்காக பணம் கொடுங்கள் என்று கட்சிக்காரர்களிடம், பணம் கேட்டு வாங்கும் பழக்கம் எனக்கு இல்லை. தி.மு.க தலைமைக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்" என எம்.எல்.ஏ ரகுபதியும் விளக்கம் அளித்திருந்தார்.

தி.மு.க அறிவிப்பு
தி.மு.க அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியின் 12-வது வார்டுக்கு சீட் தர தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி ரூ.10 லட்சம் கேட்பதாகவும் தன் மகனுக்குப் பணம் வாங்காமல் அந்த வார்டில் சீட் தரக்கோரி தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஆலவயல் சுப்பையா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க தலைமைக் கழகத்துக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.

இதற்கிடையே,``நான் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று யாரிடமும் கேட்கவில்லை. `என்னுடைய செலவுக்காக பணம் கொடுங்கள்' என்று கட்சிக்காரர்களிடம், பணம் கேட்டு வாங்கும் பழக்கம் எனக்கு இல்லை. தி.மு.க தலைமைக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்" என்று தன் மீதான குற்றச்சாட்டுக்கு தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதியும் விளக்கம் அளித்திருந்தார்.

முன்னாள் எம்எல்ஏ  ஆலவயல் சுப்பையா
முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா

இந்தநிலையில், `கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் முன்னாள் எம்.எல்.ஏ ஆலவயல் சுப்பையா மற்றும் அவரின் மகன் மற்றும் திருமயம் தொகுதி கழக தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் ஆகியோர் செயல்பட்டதால், தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்' எனத் தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில், `கழகத் தலைவர் அவர்களுக்கும் இனமான பொதுச்செயலாளர் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..! தலைவர் வாழ்க! தி.மு.கழகம் வெல்க!' என முகநூலில் பதிவிட்டிருந்தார், முரளிதரன்.

ஸ்டாலினுடன் முரளிதரன்
ஸ்டாலினுடன் முரளிதரன்

இதுபற்றி முரளிதரனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``தி.மு.க எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைக்குக் கட்டுப்படுகிறோம். அதே நேரத்தில், தி.மு.க தலைவரை உடனடியாக சந்தித்து எங்கள் தரப்பு விளக்கத்தைக் கூறி மீண்டும் கட்சியில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளோம். தி.மு.க மீது தீவிரப் பற்று வைத்திருக்கிறோம்" என்றார்.