Published:Updated:

`வைரலான சர்ச்சை ஆடியோ!' - தி.மு.க `குடியாத்தம்' குமரன் பதவி பறிப்பின் பின்னணி

தி.மு.க பேச்சாளரான குடியாத்தம் குமரனின் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டதற்கு, `துரைமுருகனைப் பற்றி அவர் தாறுமாறாக திட்டும் செல்போன் உரையாடல் பதிவே காரணம்’ என்று தி.மு.க தரப்பில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.

துரைமுருகன்
துரைமுருகன்

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர் குமரன். தி.மு.க-வில் பேச்சாளராகவும், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராகவும் இருந்துவந்தார். தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராகத் தன்னை எப்போதுமே அடையாளப்படுத்திக்கொள்வார். 

குடியாத்தம் குமரன்
குடியாத்தம் குமரன்

இந்த நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டதைப் பல நிர்வாகிகளைப் போல குடியாத்தம் குமரனும் விரும்பவில்லை என்கிறார்கள். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கதிர் ஆனந்தை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.

மறு முனையில் கட்சியினரிடம் மறைமுகமாக விமர்சனமும் செய்ததாகச் சொல்கிறார்கள். கதிர் ஆனந்த் வெற்றிபெற்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாத குமரன், பல நிர்வாகிகளிடம் புலம்பியிருக்கிறார். இந்த நிலையில், ஓரிரு நாள்களுக்கு முன்பு குடியாத்தத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் குமரன் போனில் பேசியிருக்கிறார்.

துரைமுருகன், கதிர் ஆனந்த்
துரைமுருகன், கதிர் ஆனந்த்

அவரிடம், துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்தைப் பற்றி தாறுமாறாக ஒருமையில் பேசியதாகவும், எதிரே பேசியவர் உரையாடலைப் பதிவுசெய்து துரைமுருகன் தரப்பிடம் குமரனை போட்டுக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. முழு ஆடியோவைக் கேட்ட துரைமுருகன் கொந்தளித்ததாக சொல்கிறார்கள்.

அறிவாலயத்துக்கும் அந்த ஆடியோ அனுப்பப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளரைப் பற்றி இது மாதிரி பேசுவது தவறு என்று தலைமை கடிந்துகொண்டுள்ளது. `மன்னித்துவிடலாம்’ என்று தலைமை யோசித்த நிலையில், கட்சியை விட்டே அவரைத் தூக்கி எறியுமாறு துரைமுருகன் கண்டிப்போடு கூறியிருக்கிறார்.

ஒழுங்கு நடவடிக்கை
ஒழுங்கு நடவடிக்கை

உடனே, ``கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் குடியாத்தம் குமரன் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’’ என்று பொதுச்செயலாளர் அன்பழகன் பெயரில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.