Published:Updated:

`அடுத்த பொதுச் செயலாளர், பொருளாளர் யார்?’ - அறிவாலயத்தில் தொடங்கிய விவாதம்

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

`ஒருவேளை துரைமுருகன், பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டால், அவர் வகிக்கும் பொருளாளர் இடம் காலியாகிவிடும். அந்த இடத்துக்கு யார் என்றும் அடுத்த கேள்வி எழுகிறது.’

தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவு அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியான அவர், கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே உடல்நலன் குன்றியிருந்தார். அவரது மறைவு தி.மு.க-வினரை குலைத்துப் போட்டிருக்கிறது.

க.அன்பழகன்
க.அன்பழகன்

குறிப்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்... என்ன சொல்லித் தேற்றுவது..? எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை... பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்! முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்! எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர்..! என்ன சொல்லி என்னை நானே தேற்றிக்கொள்வது...’’ என்று உருக்கமாக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

`பேராசிரியர் க.அன்பழகனுக்கு வந்த கடைசிக் கடிதம்' - மாலையோடு வந்த போஸ்ட்மேன்!

பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு வேலங்காடு மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்துகையில் ஸ்டாலின் உடைந்து அழுதார். பொருளாளர் துரைமுருகனோ கதறி அழுதார். இந்தக் காட்சி உடன்பிறப்புகளை உலுக்கியது. ஏறக்குறைய 43 ஆண்டுகள் தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியரின் மறைவுக்கு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்க தி.மு.க முடிவு செய்திருக்கிறது. இந்த நாள்களில் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருக்கும் தி.மு.க தலைமை, உட்கட்சி தேர்தல் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்திருக்கிறது.

ஸ்டாலின், துரைமுருகன்
ஸ்டாலின், துரைமுருகன்

அதேநேரம் 1977-ம் ஆண்டு முதல் பேராசிரியர் அன்பழகன் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவி இப்போது காலியாக இருக்கிறது. அந்த இடத்தில் அடுத்து அமரப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வியும் தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை நிலவுகிறது. இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், ``தி.மு.க-வில் இப்போதைய சூழலில் பொருளாளர் துரைமுருகன்தான் சூப்பர் சீனியர். அதனால், பொதுச் செயலாளர் பதவிக்கு அவர்தான் சரியான சாய்ஸாக இருப்பார் என்பது நிர்வாகிகள் பலரது கணிப்பு.

பொதுச் செயலாளர் பதவிக்குரிய சீனியாரிட்டி, கட்சிப் பணி, அனுபவம், கழக சட்ட விதிகளில் தேர்ந்த அறிவு எனத் துரைமுருகனுக்கு சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஐ.பெரியசாமி பொதுச் செயலாளர் ஆவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அன்பழகன் இறுதி ஊர்வலம்
அன்பழகன் இறுதி ஊர்வலம்
`என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது?!'- தி.மு.க தலைவர் ஸ்டாலின் உருக்கம் #Anbazhagan

ஒருவேளை துரைமுருகன், பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டால், அவர் வகிக்கும் பொருளாளர் இடம் காலியாகிவிடும். அந்த இடத்துக்கு யார் என்றும் அடுத்த கேள்வி எழுகிறது. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன. முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட டி.ஆர்.பாலுவை பொருளாளராக்கி அவரை சமாதானப்படுத்த தலைவர் முயற்சி செய்யலாம். அதேநேரம், பட்டியலினத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆ.ராசா அல்லது மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கனிமொழி ஆகியோரின் பெயர்களையும் பொருளாளர் பதவிக்காக முன்மொழிபவர்கள் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுவை பொருளாளர் பதவியில் அமர்த்த ஒருபுறம் தீவிர முயற்சி நடக்கிறது. தலைமையோடு அவருக்கு இருக்கும் நெருக்கத்தைக் காரணமாகச் சொல்கிறார். ஆனால், அ.தி.மு.க-வில் இருந்து வந்தவர் என்ற பின்னணியை எதிர்த்தரப்பினர் தலைமைக்குச் சுட்டிக்காட்டுகின்றனர்’’ என்கின்றனர் உடன்பிறப்புகள்.

அடுத்த கட்டுரைக்கு