Published:Updated:

`3 தளங்கள்; 27 அறைகள்!' - புதுச்சேரி சொகுசு விடுதியில் தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர்கள்

தி.மு.க தான் ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிக்கும் என்ற சூழல் நிலவி வருகிறது. அதேசமயம், அ.தி.மு.க-வின் குதிரை பேரத்திற்குத் தங்களது ஒன்றிய கவுன்சிலர்களை புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்க வைத்திருக்கிறது, தி.மு.க தரப்பு.

தி.மு.க கவுன்சிலர்கள்
தி.மு.க கவுன்சிலர்கள்

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அதில் வெற்றிபெற்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், நாளை 11-ம் தேதி, துணைத் தலைவர்களைத் தேர்வுசெய்ய இருக்கின்றனர். இந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநில அளவில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் சமமாக அறுவடை செய்திருக்கும் நிலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கு பல இடங்களில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேபோல, சுயேட்சைகளும் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

தனியார் விடுதி
தனியார் விடுதி

அதனால் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காத இடங்களில், வெற்றிபெற்ற சுயேட்சைகளையும் எதிரணியினரையும் தங்கள் பக்கம் இழுக்க, அ.தி.மு.க குதிரை பேரம் நடத்திவருகிறது. அதனால் தங்களது ஒன்றியக் கவுன்சிலர்களை அலேக்காகத் தூக்கி கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்கவைத்திருக்கிறது, தி.மு.க.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில், 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், 9 இடங்களை தி.மு.க-வும், 7 இடங்களை அ.தி.மு.க-வும், சுயேச்சைகள் 5 இடங்களையும் பெற்றிருக்கின்றன. இந்த சுயேச்சைகளைத் தங்கள் பக்கம் இழுக்க, அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் பேரம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

அதனால் அங்கு தி.மு.க-தான் ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிக்கும் என்ற சூழல் நிலவிவருகிறது. அதேசமயம், அ.தி.மு.க -வின் குதிரை பேரத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக, தங்களது ஒன்றியக் கவுன்சிலர்களை புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கவைத்திருக்கிறது தி.மு.க தரப்பு. நகர்ப்புறங்களிலோ அல்லது பெரிய விடுதிகளிலோ தங்க வைத்தால் விஷயம் கசிந்துவிடும் என்பதால், கிழக்குக் கடற்கரை சாலை விடுதி ஒன்றில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் அந்த தனியார் விடுதியில், 3 தளங்களிலுள்ள 27 அறைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் சகிதமாக அங்கு தங்கியிருக்கும் தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர்களுக்கு, 3 வேளையும் கடல் சார்ந்த அசைவ உணவுகள் பறிமாறப்பட்டு வருகிறது.

தனியார் விடுதி
தனியார் விடுதி

அதேபோல, மூன்று வேளையும் வஞ்சிரம் மீன் ஃபிரையும், இறால் வறுவலும் கண்டிப்பாக வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களாம்.