Published:Updated:

`ஸ்டாலின் முதல்வராகி இங்கே நன்றி சொல்ல வருவார்!' - ஆரூடம் சொல்லும் கரூர் சின்னசாமி

 தி.மு.க நிகழ்ச்சியில் கரூர் சின்னசாமி
தி.மு.க நிகழ்ச்சியில் கரூர் சின்னசாமி

`வரும் தேர்தலில் முதல்வரே வந்தாலும், அ.தி.மு.க மண்ணைக் கவ்வப்போவது உறுதி. தேர்தல் முடிந்த பிறகு, இதே இடத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்று, மக்களுக்கு நன்றி தெரிவிப்பார்.’

``அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் இங்கே போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக முதல்வர் தொடங்கி, பல அமைச்சர்களும் கடுமையாகப் பிரசாரம் பண்ணினாங்க. ஆனால், செந்தில் பாலாஜிதான் ஜெயித்தார். வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவில் மு.க.ஸ்டாலின்தான் முதல்வராவார். அதன் பிறகு, இதே இடத்தில் நன்றி சொல்ல வருவார்" என்று முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி பேசினார்.

 தி.மு.க நிகழ்ச்சியில் கரூர் சின்னசாமி
தி.மு.க நிகழ்ச்சியில் கரூர் சின்னசாமி

கரூர் மாவட்ட தி.மு.க சார்பில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலம்பாடி ஊராட்சி, அண்ணா நகரிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது.

`பூத்துக்கு ஒன்று; அ.தி.மு.க-வினரிடம் 4 வாக்காளர் அட்டைகள்!’- பகீர் கிளப்பும் கரூர் தி.மு.க

பின்னர், பள்ளப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய சமூக உலமாக்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க-வின் மாநில விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கரூர் ம.சின்னசாமி கலந்துகொண்டு, பிரசாரத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.

தி.மு.க நிகழ்ச்சி
தி.மு.க நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.மணியன், பள்ளப்பட்டி பேரூர் கழகச் செயலாளர் தோட்டம் பசீர் அகமது, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பரணி மணி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி இஸ்லாமிய உலமாக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வியபாரிகள் என அனைவரிடமும் பிரசாரம் மேற்கொண்டனர்.

கரூர்:`4 தொகுதி; 50,000 வாக்குகள் வித்தியாசம்!' - அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சவால்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி, ``தி.மு.க சார்பில் கரூர் மாவட்டத்தில், 'விடியலை நோக்கி ஸ்டாலின்' என்ற தலைப்பில் பொதுமக்களைச் சந்தித்துக் குறைகளை கேட்டறிந்து, உடன் தமிழகத்தை மீட்போம் என்ற கோஷத்தை மையப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறோம். முதல் நாளிலேயே, மக்கள் தி.மு.க-வைத்தான் வரும் தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கக் காத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். அரவக்குறிச்சியில் தி.மு.க சார்பில் நிற்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைப்போம். தற்போது, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் செந்தில் பாலாஜி. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின்போது, தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் உட்பட பலரும் செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டனர்.

கரூர் சின்னசாமி
கரூர் சின்னசாமி

செந்தில் பாலாஜியைத் தோற்கடிக்கக் கடுமையாக முயன்றார்கள். ஆனால், தோற்றது முதலமைச்சரும், அ.தி.மு.க வேட்பாளரும்தான். அதனால், வரும் தேர்தலிலும் முதல்வரே வந்தாலும், அ.தி.மு.க மண்ணைக் கவ்வப்போவது உறுதி. தேர்தல் முடிந்த பிறகு, இதே இடத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்று, மக்களுக்கு நன்றி தெரிவிப்பார். இது உறுதி" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு