Published:Updated:

`தி.மு.கவை மக்கள் வெற்றிபெற வைப்பார்கள்!' - புதுக்கோட்டையில் ஸ்டாலின் பேச்சு

போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் சார்ஜ் சீட்டில் தமிழ் இல்லாமல், ஆங்கிலம் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டியில் வெண்ணாவல்குடியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி வடிவேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது, ``இடையில் நடந்த இடைத்தேர்தலில் வேண்டுமென்றால் ஆளும் கட்சி வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், இன்னும் சில காலங்களில் வரக்கூடிய நிரந்தரத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெறும். தி.மு.கவை மக்கள் வெற்றிபெற வைப்பார்கள். தற்போது நடைபெற்றுவரும் ஆட்சி எடுபிடி ஆட்சி, எடப்பாடியை விமர்சனம் செய்யவில்லை பா.ஜ.க-வின் எடுபிடி ஆட்சியாக உள்ளது என்று கூறுகிறேன்.

திருமண விழா
திருமண விழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமைச்சர் `குட்கா புகழ்' என்று பெயர் எடுத்தவர். வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது வருமானவரித் துறை சோதனை செய்தபோது ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதில் முதல்வருக்கு எவ்வளவு? மற்ற அமைச்சர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று தெளிவாக உள்ளது. இதுகுறித்தும் வழக்கு நடந்து வருகிறது. இப்படி இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் ஊழல் செய்துவருகின்றனர். ஈரோட்டில் சமீபத்தில் நடந்த கான்ட்ராக்டர் அசோக்குமார் வீட்டில் ரூ.450 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில், ஓர் அமைச்சருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. கழக ஆட்சி வந்தவுடன் தவறு செய்பவர்கள் மக்கள் முன் சுட்டிக்காட்டப்படுவார்கள்.

போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் சார்ஜ் சீட்டில் தமிழ் இல்லாமல், ஆங்கிலத்தில் உள்ளது. அந்த நிலையை உடனடியாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றப்படவில்லை என்றால் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை தி.மு.க நடத்தும்" என்றார்.

` பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு?!'-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்

விழாவில், தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.