Published:Updated:

ரஜினி ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் தி.மு.க மகளிரணி!- அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்த உடன்பிறப்புகள்

ரஜினி ரசிகர் மன்றம் தி.மு.க
ரஜினி ரசிகர் மன்றம் தி.மு.க

ரஜினி ரசிகர் மன்ற நிகழ்ச்சி மேடையில், தி.மு.க மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முரசொலி பத்திரிகையை வைத்திருப்பவர்கள் தி.மு.க-காரர்கள் என்றும் துக்ளக் பத்திரிகையை கையில் வைத்திருப்பவர் அறிவாளிகள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் உதிர்த்த வார்த்தைகள் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து தி.மு.க பிரமுகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

ரஜினி
ரஜினி

இந்த நிலையில், கோவையில் ரஜினி ரசிகர் மன்றம் நடத்திய ஓர் நிகழ்ச்சியில் தி.மு.க பிரமுகர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

கோவை, காமாட்சிபுரம் அன்புள்ள ரஜினிகாந்த் நற்பணி மன்றம் மற்றும் ஆடல் இளவரசன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், தி.மு.க மாநில மகளிர் தொண்டர் அணியின் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் தி.மு.க கோவை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மாலதி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தி.மு.க
தி.மு.க

ரஜினி மன்ற கொடி அலங்கரித்த மேடையில், இருவரும் அமர்ந்திருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே கொங்கு மண்டலத்தில் தி.மு.க பலவீனமாக இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில், 10 தொகுதியில் 1 தொகுதியில் மட்டுமே தி.மு.க வென்றது. அ.தி.மு.க ஸ்லீப்பர் செல்கள், தி.மு.க-வில் அதிகம் இருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலிலும், தி.மு.க பிரமுகர்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்து துரோகம் செய்தனர்.

தி.மு.க
தி.மு.க

இந்த நிலையில், தி.மு.க-வுக்கு எதிராக கருத்து கூறி வரும், ரஜினி மன்ற நிகழ்ச்சியில் இவர்கள் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன... இதுபோன்ற பிரச்னைகளுக்கெல்லாம் உடனடியாக தீர்வு கண்டால்தான், தி.மு.க இங்கு பலமாக முடியும் என்கின்றனர் கோவை தி.மு.க உடன்பிறப்புகள்.

இதுகுறித்து மீனா ஜெயக்குமார், ``அந்த நிகழ்ச்சியை நடத்தியது தி.மு.க வார்டு செயலாளர். அதில் பல்வேறு கட்சிப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துதான் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. எங்களுக்கும், அழைப்பு விடுத்திருந்தனர். அதனால்தான் கலந்துகொண்டோம். அது சமத்துவ பொங்கல். நான் எங்கு போனாலும் தி.மு.க பிரமுகராகத்தான் செல்வேன். செல்லும் இடத்தில் நான்கு பேரை தி.மு.க-க்கு அழைத்து வரத்தான் நான் பார்ப்பேன்.

மீனா ஜெயக்குமார்
மீனா ஜெயக்குமார்

அப்படி நடந்தால் அது நல்லதுதானே. ரஜினி படம் பார்க்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன. அவர் நடிகர் அவ்வளவுதான். அவர் என்ன கட்சியா நடத்துகிறார். நல்ல விஷயத்துக்காக அழைத்தார்கள். கலந்துகொண்டோம். அவ்வளவுதான்'' என்றார்.

மாலதியிடம் பேசினோம். ``அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அதில் கலந்துகொண்டோம். அதில், ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் நீதி மய்யத்தினர், தி.மு.க எல்லாரும் இணைந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.

மாலதி
மாலதி

விளையாட்டுப் போட்டிகளை எல்லாம் தி.மு.கதான் நடத்தியது. ரஜினி கொடியை எல்லாம் நாங்கள் கவனிக்கவில்லை’' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு