அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

ஆடல், பாடல், அன்புமுத்தம்!

தி.மு.க மகளிரணி கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
தி.மு.க மகளிரணி கூட்டம்

தி.மு.க மகளிரணி கூட்டக் கொண்டாட்டம்

‘தி.மு.க-வில் கனிமொழி ஓரங்கட்டியே வைக்கப்படுகிறார். அதனால், அவர் மனதளவில் ஒதுங்கியே நிற்கிறார்’ என்ற பேச்சுகள், கடந்த பல மாதங்களாகவே சுழன்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில், திடீரென வேகமெடுத்திருக்கிறார் கனிமொழி. சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் தொண்டரணிக் கூட்டத்தில் ஆடல், பாடல், அன்பு முத்தங்கள், தடபுடல் விருந்து என உற்சாகமாக நடத்தி முடித்துள்ளார், மகளிர் அணியின் செயலாளரான கனிமொழி. இது, கட்சிக்குள் அவருக்கு எதிராக காய்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்களை ரொம்பவே யோசிக்கவைத்திருப்பது தான் ஹைலைட்!

சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இது, வருடம்தோறும் நடைபெறும் கூட்டம்தான் என்றாலும், எம்.பி-யாக வெற்றிபெற்ற பிறகு கனிமொழி நடத்தும் முதல் கூட்டம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு.

மகளிரணி உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, அமைப்புச் செயல்பாடுகளை வேகப்படுத்துவது குறித்தெல்லாம் கனிமொழி விரிவாகப் பேசியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளருக்கும் நிறைகுறைகளைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்கப்பட, பலரும் வெளிப்படையாகவே பேசியுள்ளனர். குறைகளையெல்லாம் குறித்துக் கொண்ட கனிமொழி, விரைவில் சரிசெய்வதாக உறுதியளித்துள்ளார்.

தி.மு.க மகளிரணி கூட்டம்
தி.மு.க மகளிரணி கூட்டம்

மகளிரணி உறுப்பினர் சேர்க்கையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு, புடவையுடன் அன்பு முத்தத்தையும் சேர்த்தே கனிமொழி பரிசளிக்க, ஆனந்தத்தில் திக்குமுக்காடிப்போனார்கள் அந்த நிர்வாகிகள். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள், பிறப்பு - இறப்புச் சான்றிதழ் மற்றும் நிலப் பட்டா போன்றவற்றை வாங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கனிமொழியின் மாமியார் சுசீலா அம்மையார், நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்பட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்முறை செய்து உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கும் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

மட்டன் பிரியாணி, வஞ்சிரம் வறுவல், செட்டிநாடு சிக்கன், வெஜ் புலாவ், பனீர் பட்டர் மசாலா, பூரி, சாப்பாடு, சாம்பார், ரசம் என சைவ மற்றும் அசைவ உணவை அனைவருக்கும் வழங்கி அசத்தினார் கனிமொழி.

இவரின் இந்தத் திடீர் வேகம் குறித்துப் பேசும் மகளிரணி நிர்வாகிகள், ‘‘அவர் ஒதுங்கியே இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்படுவதில் உண்மையில்லை. ஆனால், இப்படிச் சொல்லிச் சொல்லியே ஒதுக்கிவிடலாம் என்று குடும்பத்துக்கு வெளியில் உள்ள சிலர் திட்டமிடுகிறார்கள். அதையெல்லாம் முறியடிக்கத்தான் கனிமொழி தற்போது களத்தில் இறங்கியுள்ளார். கட்சிக்குள் தூபம் போட்டுக்கொண்டிருக்கும் அவர்கள் எல்லோரும் சீக்கிரமே ஓட்டமெடுப்பார்கள்’’ என்று சீறலாகவே சொன்னார்கள்.