Election bannerElection banner
Published:Updated:

பேரிடர் காலத்தில் தாராள உதவி..! - பூம்புகார் தொகுதியை தி.மு.க வெற்றிகொண்டது எப்படி?

பூம்புகார் தொகுதி நிவேதா.எம். முருகன்
பூம்புகார் தொகுதி நிவேதா.எம். முருகன்

சுனாமி, கஜா போன்ற பேரிடர் காலங்களில் தொகுதி மக்களுக்கு தாராளமாக உதவி செய்த நிவேதா. எம்.முருகன், மக்கள் மனதில் நின்றிருப்பதால், கடுமையான போட்டிக்கிடையே சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகார் தொகுதியில் கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அ.தி.மு.க-வைச் சேர்ந்த பவுன்ராஜை, இம்முறை தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் செம்பனார்கோயில் ஒன்றியப் பெரும் தலைவருமான நிவேதா.எம். முருகன் தோற்கடித்து வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டசபைக்குச் செல்லவிருக்கிறார்.

பவுன்ராஜ்
பவுன்ராஜ்

பவுன்ராஜ், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டு, கடந்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகத் தொகுதியில் பேச்சு அடிப்பட்டது. அதனால் இந்த முறை பணத்தை வாரி வீசியது அ.தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல.... விலைபோன தி.மு.க-வினருக்கும்தானாம். ஓட்டுக்கு ரூ.1,000 வீதம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பவுன்ராஜ்தான் வெற்றிபெறுவார் என்ற பேச்சு தொகுதியில் வலம்வந்தது.

ஆனால் அமைதியாக இருந்து, சுனாமி, கஜா போன்ற பேரிடர் காலங்களில் தொகுதி மக்களுக்கு தாராளமாக உதவி செய்த நிவேதா. எம்.முருகன், மக்கள் மனதில் நின்றிருப்பதால் கடுமையான போட்டிக்கிடையே சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்.

நிவேதா.எம். முருகன்
நிவேதா.எம். முருகன்

இது பற்றி நிவேதா. எம். முருகனிடம் பேசியபோது, ``தொகுதி மக்கள் அவர்களுக்காகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். இதை நான் செவ்வனே செய்வேன். எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நல்லது நடக்க நான் பாடுபடுவேன் என்பதை உறுதியளிக்கிறேன்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு