Published:Updated:

தி.மு.க இளைஞரணிப் புலம்பல் முதல் வருத்தத்தில் சசி உறவுகள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்

``அமித் ஷாவின் வருகையையொட்டி தமிழக அரசியல் களைகட்டுகிறது. கோட்டைக்குச் சென்று வருகிறேன். தகவல்கள் டெலிகிராமில் வந்து சேரும்’’ - படபடவெனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் கழுகார்.

தி.மு.க இளைஞரணிப் புலம்பல் முதல் வருத்தத்தில் சசி உறவுகள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

``அமித் ஷாவின் வருகையையொட்டி தமிழக அரசியல் களைகட்டுகிறது. கோட்டைக்குச் சென்று வருகிறேன். தகவல்கள் டெலிகிராமில் வந்து சேரும்’’ - படபடவெனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் கழுகார்.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
சலுகை மறுப்பு... வருத்தத்தில் சசி உறவுகள்!

பெங்களூரு சிறையில், தீபாவளி சமயத்தில் சசிகலா ரொம்பவுமே சோகத்தில் இருந்திருக்கிறார். தீபாவளியன்று சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். அதற்கு இரண்டு நாள் முன்னதாக, நவம்பர் 12-ம் தேதியன்று சசிகலாவின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்னீர்செல்வம் திடீரென இறந்துபோனார்.

சசிகலா
சசிகலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெருக்கமான இரண்டு பேர் அடுத்தடுத்து மறைந்தது சசிகலாவை ரொம்பவே பாதித்துவிட்டது என்கிறார்கள். இவை போதாதென்று, நவம்பர் 20-ம் தேதி பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ‘‘சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது” என்று கூறியிருப்பது, சசிகலாவுக்கு நெருக்கமான உறவுகளை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 2021, ஜனவரி 27-ம் தேதி சிறைத் தண்டனை முடிவுற்ற பிறகே சசிகலா விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவாசல் மூடினால்... மறுவாசல் திறக்காமலா போகும்!

``கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செஞ்சிருக்கலாம்!’’
தி.மு.க இளைஞரணியில் புலம்பல்...

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு, நடிகர் என்கிற வகையில் தனி ரசிகர் மன்றம் உண்டு. இந்த மன்றத்தில் சென்னை மத்திய மாவட்டத்தின் பொறுப்பில் இருந்தவர் சுப்ரமணி. கடந்த வாரம், அவரை தி.மு.க இளைஞரணியின் சென்னை மேற்கு மாவட்டத் துணை அமைப்பாளராக நியமித்திருக்கிறார்கள். ரசிகர் மன்றம் என்பதைத் தாண்டி சுப்ரமணி தி.மு.க உறுப்பினராம்.

உதயநிதி
உதயநிதி

இவரைப்போல, ரசிகர் மன்றத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் மேலும் பலரை கட்சிக்குள் இணைப்பதற்கு ஆயத்தமாகிறது உதயநிதி தரப்பு. இதையொட்டி பதவி கிடைக்காமல் புலம்பும் கட்சியின் இளைஞரணி உடன்பிறப்புகள், ``இத்தனை வருஷமா கட்சி போஸ்டர் ஒட்டி, கூட்டத்துக்கு ஆள் சேர்த்ததுக்கு பதிலா, உதயநிதியோட கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செஞ்சிருக்கலாம்” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்களாம். இன்னொரு விஷயம்... இதே மேற்கு மாவட்டத்திலிருந்துதான் உறுப்பினர்கள் பலரும், சமீபத்தில் உதயநிதியின் வாரிசு இன்பநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, ‘குட்டி ஐயா’ ராஜ்ஜியம்தான்னு சொல்லுங்க!

முதல்வரைப் புறக்கணித்தாரா செல்லப்பாண்டியன்!?

தூத்துக்குடி அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், தற்போது மாநில அமைப்புச் செயலாளராக இருக்கிறார். “தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளை உள்ளடக்கிய மாநகர் மாவட்டத்தை உருவாக்கி, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி தர வேண்டும்” என்று அவர் தரப்பில் பலமுறை கட்சித் தலைமையிடம் கேட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

செல்லப்பாண்டியன்
செல்லப்பாண்டியன்

ஆனால், அதற்கு வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூவும், தெற்கு மாவட்டச் செயலாளரான ஶ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதனும் கடுமையாக முட்டுக்கட்டை போடுவதால், காரியம் கைகூடவில்லை. இந்தநிலையில்தான், முதல்வர் பழனிசாமி சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்தபோது முதல்வரை வரவேற்க செல்லப்பாண்டியன் வரவில்லை.

“அண்ணன் கொரோனா பாதிப்பால் ரெஸ்ட்டில் இருக்கிறார்” என்று செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்கள் சொன்னாலும்... முதல்வர் வந்து சென்ற நான்காவது நாளே தூத்துக்குடியிலுள்ள குரூஸ் பர்னாந்து சிலைக்குத் தன் ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்திருக்கிறார் செல்லப்பாண்டியன். இதை முன்வைத்து “பதவி கிடைக்காத அதிருப்தியில் இருக்கிறார் செ.பா அண்ணாச்சி” என்கின்றனர் தூத்துக்குடியின் ரத்தத்தின் ரத்தங்கள்.

செல்லப்பாண்டியனை, செல்லாத பாண்டியன்னு நினைச்சிடுச்சோ கட்சித் தலைமை!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நிர்வாகி இடத்தில் தோழி...
சிக்கலில் மனோ தங்கராஜ்!

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க மகளிரணி நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட அமைப்பாளர் கிளாடிஸ் டில்லி தலைமையில் நவம்பர் 16-ம் தேதி நடந்தது. இதில், மகளிரணிச் செயலாளர் கனிமொழி காணொளிக் காட்சி மூலம் பேசினார். இந்தக் கூட்டத்திலிருந்து, சுருளகோடு பஞ்சாயத்து மகளிரணி அமைப்பாளரும், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அனிதாவை வெளியேற்றினால்தான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன் என்று அடம்பிடித்தாராம் மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

அனிதாவை வெளியேறச் சொல்லிவிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தன் தோழி ஒருவரை அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வைத்திருக்கிறார் மனோ தங்கராஜ். அனிதாவும், மகளிரணியின் வேறு சில நிர்வாகிகளும் இந்த விவகாரம் குறித்து தலைமைக்குப் புகார் தட்டிவிட்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இந்த விஷயம் மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்குத் தெரியுமா, தெரியாதா என்று புலம்புகிறார்கள் அனிதா தரப்பினர்.

உள்ளே... வெளியே எல்லாம் அரசியல்ல சகஜமப்பா!

அன்புச்செழியன் ஒதுங்கும் மர்மம்!

சர்ச்சைக்குரிய சினிமா ஃபைனான்ஸியராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படும் மதுரை அன்புச்செழியன், மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர். 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு வழக்குகள் பாய்ந்ததால், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நெருக்கமாகி, கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செலவு செய்துவந்தார்.

அன்புச்செழியன்
அன்புச்செழியன்

இதனால், கட்சியின் இளைஞரணியில் மாவட்டப் பொறுப்பு பெற்றுக்கொடுத்தார் செல்லூர் ராஜூ. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மதுரை வரும்போது அவர்களைத் தனியாகச் சந்தித்துப் பேசும் அளவுக்கு செல்வாக்கு பெற்ற அன்புச்செழியன், சமீபகாலமாக அ.தி.மு.க-வில் பட்டும்படாமல் இருக்கிறாராம். அதை உறுதிசெய்வதுபோல், தீபாவளியன்று மதுரையில் தனது நிறுவனம் சார்பில் மூன்று திரைகள் கொண்ட மல்டி ஃபிளெக்ஸ் தியேட்டரை அன்புச்செழியன் திறந்தார்.

தி.மு.க இளைஞரணிப் புலம்பல் முதல் வருத்தத்தில் சசி உறவுகள் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

திறப்பு விழாவுக்கு அமைச்சர்கள் யாரையும் அழைக்காமல், தன் மகளைவைத்தே தியேட்டரை திறந்துவிட்டாராம். ‘ஆட்சி முடியும் தறுவாயில், அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அந்தப் பக்கம் சாய்வதற்கு வசதியாகவே அன்புச்செழியன் இப்படியெல்லாம் செய்கிறார்’ என்கிறது மதுரை அ.தி.மு.க வட்டாரம்.

ஆயிரம் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கணுமப்பு!

கதருக்குக் கிடைக்குமா காரைக்குடி?

சிவகங்கை மாவட்ட தி.மு.க-வினர் தலைமைக் கழகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில், `1989 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 31 வருடங்களாக மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்களே காரைக்குடி எம்.எல்.ஏ பதவியை வகித்திருக்கிறார்கள். எனவே, இந்த முறை காரைக்குடியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது’ என்று கோரியிருக்கிறார்கள். சிவகங்கை உடன்பிறப்புகளின் இந்த போர்க்கொடிக்குப் பின்னணியில், காரைக்குடி காங்கிரஸ் எம்.எல்.ஏ, கே.ஆர்.ராமசாமி மீதான கோபம்தான் இருக்கிறது என்கிறது தி.மு.க வட்டாரம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

`உள்ளாட்சித் தேர்தலின்போது, தி.மு.க-வுக்குக் கிடைக்க வேண்டிய சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய சேர்மன் பதவி, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தயவுடன் அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டது. அதை கே.ஆர்.ராமசாமி கண்டுகொள்ளவில்லை. அவரின் சொந்த ஊரான கண்ணங்குடி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியிலும் தி.மு.க-வுக்கு ஓர் இடத்தைக்கூட வழங்கவில்லை’ என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள். காரைக்குடி தொகுதிக்கு, சிவகங்கை மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூஸோ, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சி.இலக்குவன் ஆகியோர் பலமாக முட்டிமோதுவதால், காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்படுவது கஷ்டம்தான் என்கிறார்கள்.

காரைக்குடியில கதருக்கு `வெதர்’ சரியில்லைன்னு சொல்லுங்க!

சொந்தச் சமூகத்தினருக்கு முன்னுரிமை!
சர்ச்சையில் நீலகிரி கல்லூரி...

உயர்கல்விக்கான போதிய அளவு வசதி வாய்ப்புகள் இல்லாத நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிதான் ஓரளவுக்கு அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறது. இதே கல்லூரியில் பயின்று, தற்போது கல்லூரியின் முக்கியப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் ஒருவர். இவர் தனது சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து, பழங்குடியின மக்களை ஓரங்கட்டுவது சர்ச்சையாகியிருக்கிறது.

பணம்
பணம்

தற்போது, கெளரவ விரிவுரையாளர் பணி நியமனத்திலும் தனது சமூகத்தினருக்கு முன்னுரிமை அளித்திருக்கிறாராம். அதிலும், `பசை’யாக விளையாடியதுதான் கொடுமை. சொந்தச் சமூகத்தினரிடமே ஒரு ‘ஸ்வீட் பாக்ஸ்’ பெற்ற பிறகே பணி நியமனம் செய்கிறாராம்.``என்னங்கண்ணே... நம்மாளுங்ககிட்டயே வாங்கலாமா?” என்று யாரேனும் கேட்டால், ``மத்தவங்களுக்குன்னா மூணு பாக்ஸ் தெரியுமா?” என்று கேட்டு அதிரவைக்கிறாராம்.

ஓவர் ஸ்வீட் உடம்புக்கு நல்லதில்லைங்க!

அழுத்தம் தந்த அமைச்சர்
லாங் லீவில் போன அதிகாரி

புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷாவுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குமான மோதல் உச்சத்தில் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்திருந்த அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையிலேயே நகராட்சி ஆணையரை வறுத்தெடுத்த கதையையெல்லாம் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.

இந்தநிலையில், அமைச்சர் தரப்பிலிருந்து அடுத்தடுத்து அழுத்தங்கள் வரவே... சொல்லாமல் கொள்ளாமல் நீண்ட விடுமுறையில் ஜஹாங்கீர் பாட்ஷா சென்றுவிட்டாராம். அமைச்சரின் தீவிர விசுவாசியான ஜீவா சுப்பிரமணியன் என்கிற அதிகாரியிடம் ஆணையருக்கான பொறுப்புகள் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் அக்கப்போர் எப்போது முடியும் என்று தவிக்கிறது புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம்.

அமைச்சரே... உங்க ரேஞ்சுக்கு நகராட்சியிடமெல்லாம் மோதலாமா...

செங்கோட்டைப் பக்கம் காட்டலாமுல்ல உங்க வீரத்தை!