Published:Updated:

`உங்களுக்கு 20... எங்களுக்கு 80' - உள்ளாட்சித் தேர்தலில் திமுக வியூகம்!

அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியிருப்பதால், இப்போதே வெற்றிபெற்ற மனநிலையில் இருக்கிறதாம் திமுக.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2019, டிசம்பர் 27, 30 இரு தேதிகளில், இரு கட்டங்களாக 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நான்கு மாவட்டங்களைப் பிரித்து ஒன்பது மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், அவற்றுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது வரும் அக்டோபர் 6, 9 ஆகிய இரு தேதிகளில், மீண்டும் இரு கட்டங்களாக ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தலின்போது பொதுவாக கட்சிகள் கூட்டணியாக ஒன்று சேரும். ஆனால் இந்தத் தேர்தலில் கூட்டணிகள் உடைகின்றன. அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தற்காலிகமாக வெளியேறியிருக்கிறது. அமமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளிவந்துவிட்டது. `ராமதாஸுடன் துரைமுருகன் போனில் பேசியது; வன்னியர் அறக்கட்டளையை அரசுடைமை ஆக்குவோம் என திமுக சொன்னது; 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறோம்; இப்போது அதிமுக கூட்டணியிலிருந்து வெளிவந்து தனியே போட்டியிடுங்கள் எனக் கூறியது’ என்று பாமக வெளியேறியதற்கு திமுக-வுடனான உடன்பாடுதான் காரணம் எனத் தகவல்.

திமுக  - பாமக
திமுக - பாமக

பாமக வெளியேறியதால் அதிமுக-வும், பாஜக-வும் அதிர்ச்சியில் இருக்கின்றன. நாம் தமிழர், மநீம., தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடவிருக்கின்றன. அமமுக-வின் கதைதான் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு கட்சியும் பிரச்னையில் இருக்க, ஆளும் திமுக மட்டும் ரிலாக்ஸாக இருக்கிறது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம், ``ஆளுங்கட்சி என்கிற ஆயுதம் ஒருபக்கம் இருந்தாலும், தேர்தலைச் சந்திக்கவிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், மொத்தமுள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளை திமுக கூட்டணிதான் கைப்பற்றியிருக்கிறது. அதேபோல, திருநெல்வேலி, தென்காசியிலுள்ள 10 தொகுதிகளில், ஆறு தொகுதிகள் திமுக வசமுள்ளன. வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு மணிமண்டபம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் உள்ளிட்ட விஷயங்கள் வட தமிழகத்தில் திமுக-வின் செல்வாக்கை கணிசமாக உயர்த்தும். தவிர, அதிமுக-விலிருந்து பாமக வெளியேறியிருப்பதால், இப்போதே வெற்றிபெற்றுவிட்டதுபோல உணர்கிறோம்.

பாமக தனித்துப் போட்டி: தற்காலிகமா, ‘தற்காலிக' நிரந்தரமா?!

எனினும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு வாரிக் கொடுத்ததுபோல இந்தமுறை தாராள மனதுடன் திமுக இல்லை. அதேநேரம், 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளைக் கதறவிட்டதுபோலவே இம்முறையும் தலைமை நடந்துகொள்ளும் என்றுதான் தெரிகிறது. கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ், 20 சதவிகித இடங்களைக் கேட்கிறது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய நான்கு வகையான சுமார் 27,000 பதவியிடங்களில் 20 சதவிகிதம் எதிர்பார்க்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் விசிக-வுக்கு ஆதரவு இருப்பதால் பொது மற்றும் ரிசர்வ் இடங்களைச் சேர்த்து அந்தக் கட்சி 10 சதவிகிதத்துக்கும் குறைவில்லாமல் எதிர்பார்க்கிறது. மதிமுக., கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா ஐந்து சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களை எதிர்பார்க்கின்றன. ஆனால் திமுக மொத்தமாகவே கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து 20 சதவிகித இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் எனக் கறாராகச் சொல்லிவிட்டோம்" என்றனர். ஆளுங்கட்சி என்பதால், கூட்டணியிலிருந்து விலகும் எண்ணம் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்காது. எனினும், கட்சியில் கீழ்மட்டத்தில் வலுவான அடித்தளத்துக்காக அனைத்துக் கட்சிகளும் கடுமையாகப் போராடும் களம் உள்ளாட்சி தேர்தல் என்பதால், களத்தில் பல ட்விஸ்ட்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு