Published:Updated:

`6 பேரில் இருவரை டிக் அடித்த ஸ்டாலின்!' - 3வது ராஜ்ய சபா சீட்டுக்காக அறிவாலயத்தில் பஞ்சாயத்து

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

`தலைமுறை தலைமுறையாக இந்தக் கட்சிக்காக எங்கள் குடும்பம் உழைத்து வருகிறது. கண்ணில் தென்படுகிறவர்களுக்கே சீட் என்றால், எங்கள் உழைப்புக்கு இவ்வளவுதான் மரியாதையா?' என்ற அதிருப்தி குரல்களும் அறிவாலயத்தில் கேட்கின்றன.

`தி.மு.க-வில் யார் யாருக்கு ராஜ்ய சபா சீட்?' என்ற விவாதம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. `ஆறு பேர் பெயரை தி.மு.க தலைமை பரிசீலித்தது. அதில், இரண்டு பேர் பெயரை டிக் அடித்துவிட்டார் ஸ்டாலின். மூன்றாவது சீட் யாருக்கு என்ற ஆலோசனை தீவிரமாக நடந்து வருகிறது' என்கின்றனர் உடன்பிறப்புகள் வட்டாரத்தில்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தமிழகத்தில் உள்ள 6 ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, மார்ச் 26-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா மூன்று இடங்கள் கிடைக்க உள்ளன. அ.தி.மு.க தரப்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி என சீனியர்கள் பலரும் ராஜ்ய சபா சீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவும், `கூட்டணி தர்மத்துக்காக எங்களுக்கு ஒரு சீட்டை அ.தி.மு.க வழங்கும்' என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க தரப்பில் யாருக்கெல்லாம் சீட் என்ற பட்டியலை இறுதிப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. தி.மு.க தலைமையின் மனஓட்டத்தை அறிந்து, சீனியர்கள் பலரும் சீட் கேட்டு வருகின்றனர். `தலைமுறை தலைமுறையாக இந்தக் கட்சிக்காக எங்கள் குடும்பம் உழைத்து வருகிறது. கண்ணில் தென்படுகிறவர்களுக்கே சீட் என்றால், எங்கள் உழைப்புக்கு இவ்வளவுதான் மரியாதையா?' என்ற அதிருப்தி குரல்களும் அறிவாலயத்தில் கேட்கின்றன.

` இந்தமுறை ரேஸில் ஜெயிக்கப் போவது யார்?' என தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டோம். `` சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் 3 இடங்கள் தி.மு.க-வுக்குக் கிடைக்க உள்ளன. இந்தமுறையும் ராஜ்ய சபா சீட்டை எதிர்பார்த்தார் திருச்சி சிவா. `அவருக்கு மீண்டும் கொடுக்க வேண்டுமா?' எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த தி.மு.க தலைமை, `சி.ஏ.ஏ, என்.ஆர்.சி என மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து வேறு சில திட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தி.மு.க சார்பாக ராஜ்ய சபாவில் வலுவாக குரல் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு திருச்சி சிவா சரியான சாய்ஸாக இருப்பார்' என உறுதியாகக் கூறிவிட்டது. ஆக, 3 இடங்களில் ஒரு சீட், திருச்சி சிவாவுக்கு என உறுதியாகியுள்ளது.

நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின்
நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின்

அடுத்ததாக, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தி.மு.க தலைமை உறுதியாக உள்ளது. கடந்தமுறை மூத்த வழக்கறிஞர் வில்சனுக்குக் கொடுக்கும் நேரத்திலும் என்.ஆர்.இளங்கோ பெயர் அடிபட்டது. அந்தநேரத்தில், கருணாநிதி சமாதிக்கு இடத்தைப் பெற்றுக் கொடுத்ததில் வில்சனின் பங்கு முக்கியமானதாக இருந்ததால், அவரது பெயரை டிக் அடித்தார் ஸ்டாலின். மேலும், வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் சிக்கலான நேரத்தில், தி.மு.க சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் இளங்கோ.

இருப்பினும், ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்வானார் வைகோ. அப்போது ,` அடுத்தமுறை நிச்சயமாக உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பேன்' என இளங்கோவுக்கு உறுதியும் கொடுத்திருந்தார் ஸ்டாலின். அந்த வரிசையில், இரண்டாவது இடத்துக்கு என்.ஆர்.இளங்கோ பெயர் டிக் அடிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு தி.மு.க தலைமையின் குடும்பத்தினரின் ஆதரவு இருப்பதும் பெரிய பிளஸ். இதையடுத்து, மூன்றாவது சீட் யாருக்கு என்ற போட்டிதான் அதிகரித்துள்ளது" என விவரித்தவர்கள்,

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

``மூன்றாவது சீட்டை, சிறுபான்மையினர் சமூகம் அல்லது பட்டியலின சமூகம் என யாராவது ஒருவருக்குக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருப்பதால், சிறுபான்மையினருக்குக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கணக்குப் போடுகிறது தலைமை. அதேநேரம், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவருக்குக் கொடுத்தால், அந்தச் சமூகத்தின் அதிருப்தியைச் சரிக்கட்ட முடியும் எனவும் திட்டமிடுகின்றனர். காரணம், ஆர்.எஸ்.பாரதியின் அண்மைக்கால பேச்சுகள்.

இந்த வரிசையில் ராஜ்ய சபா ரேஸில், திருவல்லிக்கேணி மஸ்தான், வி.பி.துரைசாமி, ஏ.கே.எஸ்.விஜயன், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோரது பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. வி.பி.துரைசாமி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர், ஏ.கே.எஸ்.விஜயனும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களில் யாராவது ஒருவர் பெயரை தலைமை டிக் அடிக்கலாம் அல்லது சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் மஸ்தான் அல்லது அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்படலாம். தலைமையின் பார்வை யார் மீது விழப் போகிறது என்பதுதான் சஸ்பென்ஸ்" என்றனர் இயல்பாக.

`இதோடு அனைத்தையும் நிறுத்திக்கொள்ளுங்கள்!' - அவசர செயற்குழுவில் கொதித்த ஸ்டாலின்
அடுத்த கட்டுரைக்கு