Published:Updated:

`இப்போதே மேடையேறி சொல்லுங்கள்?!'- ஸ்டாலின் உத்தரவால் செயற்குழுவில் கலங்கிய நீலகிரி மா.செ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முபாரக் - சிவப்பு துண்டு அணிந்தவர்
முபாரக் - சிவப்பு துண்டு அணிந்தவர்

நீலகிரி மாவட்டச் செயலாளர் முபாரக் தி.மு.க தொண்டர்களிடமே தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் பெற்றுக்கொண்டு பல லட்சம் ரூபாய் வசூலித்தே உள்ளாட்சித் தேர்தலில் சீட் வழங்கினார் எனச் செயற்குழுக் கூட்டத்தில் நேரடியாகக் குற்றச்சாட்டு வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி, தி.மு.கவின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் முபாரக். அரசு கொரடாவாக இருந்த இவர் முன்னாள் கதர் வாரியத் துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனை வீழ்த்திவிட்டு 2014ம் ஆண்டு நீலகிரி மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். தி‌.மு.க தலைவர் ஸ்டாலினின் அபிமானத்தைப் பெற்றதால் 2016 சட்டமன்றத் தேர்தலில், குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் மீறி போட்டியிட்டு அ.தி.மு.க-விடம் தோல்வியடைந்தார்.

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் தி.மு.கவிற்கு ஆதரவான சூழல் நிலவியதாலும் அ.தி.மு.க மீது இருந்த அதிருப்தியாலும் குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஊராட்சிகளில் எளிமையாக தி.மு.க வெற்றியை எட்டியது.

தி.மு.க செயற்குழு
தி.மு.க செயற்குழு

நீலகிரியில் தி.மு.க 80 சதவிகித வெற்றியைப் பெற்றது என மார்தட்டிக் கொண்ட மாவட்டச் செயலாளர் உட்பட சில மாவட்ட நிர்வாகிகள் இந்த வெற்றியை ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பதற்காக சென்னையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வெற்றி மிதப்பில் பங்கேற்றனர்.

தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலின், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் நிரம்பியிருந்த அரங்கில் சற்றும் எதிர்பாராத வகையில் நீலகிரி மாவட்டச் செயலாளர் முபாரக் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், ``கூட்டத்திலிருந்து எழுந்து நின்று பேசிய நீலகிரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர், 'நீலகிரியில் தி.மு.க 80 சதவிகித வெற்றியைப் பெற்றது எனச் சொல்லிக்கொள்வது உண்மை இல்லை. கணக்கிட்டுப் பார்த்தால் 30 சதவிகித இடங்களை மட்டுமே நாம் பிடித்திருக்கிறோம். முக்கியப் பதவியான ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை இழந்து நிற்கிறோம். தலைவர் பதவிக்கு தி.மு.க-வுக்குப் பிரகாசமாக இருந்தபோதும் உள்ளடி வேலைகள் காரணமாக தலைவர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுமட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளர் முபாரக் தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க ஆதரவு பெற்ற வேட்பாளர்களிடமும் தலா ரூ.10,000 பணமாகப் பெற்றுக்கொண்டே சீட் வழங்கினார். இதனால் கட்சியின் உண்மையான செயல்பாட்டாளர்களுக்கு சீட் கிடைக்காமல் போனது. கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.கவினர் பலரும் கடன் வாங்கிச் செலவு செய்தும் தேர்தலில் நின்று தோற்றுப் போயினர்' எனச் சொல்லி அமர்ந்துள்ளார்.

தி.மு.க நிர்வாகிகள்
தி.மு.க நிர்வாகிகள்

இந்தக் குற்றச்சாட்டிற்கு என்ன பதில் என ஸ்டாலின் கேட்க எழுத்து மூலம் பதில் தருகிறேன் என முபாரக் சொல்ல, இல்லை இப்போதே மேடையேறிச் சொல்லுங்கள் எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

மேடையேறிய முபாரக் வியர்த்துக் கொட்டி பதற்றத்தில் கண் கலங்கி கட்சி நிகழ்ச்சிகளுக்குத்தான் பணம் வாங்கினேன் விரைவில் கணக்குகளைச் சமர்ப்பிக்கிறேன் எனச் சொல்லி சூழலைச் சமாளித்தார்.

நீலகிரி தி.மு.கவில் இதுவரை புகைந்துகொண்டிருந்த கோஷ்டி மோதல் அனலடிக்கத் தொடங்கியுள்ளது. இனிதான் தலைமையிடம் மாறி மாறி போட்டுக்கொடுக்கும் படலம் தொடங்கவுள்ளது எனக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு