Published:Updated:

அரசியல்... அப்போ அப்படி -1: திருச்சியும் திருப்புமுனை மாநாடும்; கருணாநிதியின் ஒரு ஷாக் ஃப்ளாஷ்பேக்!

தலைமை மாறிவிட்டது, தலைமுறையும் மாறிவிட்டது. தி.மு.க., முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், திருச்சியில் தனது 11-வது மாநில மாநாட்டை நடத்தத் தயாராகிக்கொண்டிருக்கிறது தி.மு.க.

அரசியல்... அப்போ அப்படி
அரசியல்... அப்போ அப்படி

சோதனைகள் சூழ்ந்து நின்றபோதெல்லாம், உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்த மாநாடுகள், பொதுக்கூட்டங்களை அறிவித்துவிடுவார் அக்கட்சியின் முன்னாள் தலைவரான கருணாநிதி. அதிலும் `திருச்சி மாநாடு என்றால், அது திருப்புமுனை மாநாடு அல்லவா?' என்ற உற்சாகம் கருணாநிதிக்குத் தொற்றிக்கொள்ளும். மாநாட்டுக்குப் பல வாரங்களுக்கு முன்பிருந்தே உடன்பிறப்புகளுக்கு உற்சாக மடல்களை வரைந்து, அவர்களை உசுப்பேற்றத் தொடங்கிவிடுவார்.

இப்போது கருணாநிதி இல்லை. ஆனாலும், கருணாநிதி காலத்து உற்சாகமும் பிரமாண்டமும் துளியும் குறையாமல், அதே திருப்புமுனை மாநாட்டை நடத்திக் காட்டிவிட வேண்டும் எனக் களத்தில் பம்பரமாக சுற்றிச் சுழன்றுவருகிறார் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.

அது ஒருபுறம் இருக்கட்டும், கருணாநிதியும் சரி... தி.மு.க-வினரும் சரி... `திருச்சி மாநாடு என்றாலே ஏன் `தி.மு.க-வுக்கு திருப்புமுனை மாநாடு...' என்கிறார்கள்? இதைத் தெரிந்துகொள்ள ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்...

1949-ல் சென்னை ராபின்சன் பூங்காவில் உதயமான தி.மு.க-வின் முதல் மாநாடு, 1951-ல் சென்னையில் நடந்தது. அதன் பின்னர் 1956-ம் ஆண்டு மே மாதம், திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேர்தல் களத்துக்குள் அடியெடுத்துவைத்தது தி.மு.க. அதுதான் தி.மு.க வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அரசியல்... அப்போ அப்படி -1:  திருச்சியும் திருப்புமுனை மாநாடும்; கருணாநிதியின் ஒரு ஷாக் ஃப்ளாஷ்பேக்!

இது தொடர்பாக கருணாநிதி 2013, டிசம்பர் 29-ல் உடன்பிறப்புகளுக்கு எழுதிய மடலில், `அண்ணா காலத்தில், திருச்சியிலே நடைபெற்ற மாநாட்டிலேதான், கூடியிருந்த மாநில மாநாட்டு மக்களிடத்திலே, `மக்கள் வாக்களிப்பது பிறகு இருக்கட்டும்; நாம் தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா என்பதற்கு, இந்த மாநாட்டிலே இருக்கின்ற கழகத்தோழர்களே! நீங்கள் உங்களுடைய முடிவை அறிவியுங்கள்’ என்று மாநாட்டுப் பந்தலிலே பெட்டிகளைவைத்து வாக்களிக்கச் செய்தார்கள். அந்தப் பெட்டிகளிலே விழுந்த வாக்குகளிலே, `தேர்தலில் நிற்கலாம், தேர்தலிலே ஈடுபடலாம்’ என்பதற்காக விழுந்த வாக்குகள்தான் அதிகமாக இருந்த காரணத்தால், திருச்சியில் நடந்த அந்த மாநில மாநாட்டிலேதான், அண்ணா இருந்து நடத்திய அந்த மாநாட்டிலேதான், தி.மு.க தேர்தலிலே நிற்கலாம் என்ற ஜனநாயகரீதியான முடிவு மேற்கொள்ளப்பட்டது’ எனக் குறிப்பிட்டு, திருச்சி மாநாடு என்றாலே ஏன் தனது மனது குதூகலம் அடைகிறது என்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டிருந்தார்.

கருணாநிதி சொன்ன ஷாக் ஃப்ளாஷ்பேக்

அதே மடலில், அண்ணா மறைந்த பிறகு, மீண்டும் அதே திருச்சியில் 1970-ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தான் மயிரிழையில் உயிர் பிழைத்த ஒரு சம்பவத்தையும் விவரித்திருந்தார் கருணாநிதி.

``அந்த மாநாட்டின் ஊர்வலத்தின் தொடக்கத்திலேயே நான் ஒரு பெரும் ஆபத்திலேயிருந்து தப்பிப் பிழைத்தேன். ஊர்வலத்தில் தலைவர்கள் அமர்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ரதம், திருச்சி சிந்தாமணியிலுள்ள அண்ணா சிலைக்குப் பின்புறமாக இருந்தது. அதில் நாங்கள் அமர்ந்திருந்தோம். ஊர்வலத்தின் முகப்பு கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் நீடித்திருந்தது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு, அங்கேயிருக்கும், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க என்னை அன்பிலும், பராங்குசமும், எம்.எஸ்.மணியும், ராபியும் அழைத்தார்கள்.

அண்ணா சிலைக்கு மாலை என்றதும், ரதத்திலிருந்து குதித்து, அண்ணா சிலை நோக்கி வேகமாகச் சென்றேன். சிலை அருகே நின்றுகொண்டு, மிகப்பெரிய மாலை ஒன்றை அண்ணா சிலையின் கழுத்திலே அணிவித்தேன். ஓர் இமைப்பொழுதுதான். என்ன நடந்தது என்றே தெரியவில்லை! என் கையை வேகமாக நான் இழுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால், அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்த நிலையிலேயே, அவரது சிலையைக் கட்டித் தழுவியபடியே மின்சார `ஷாக்’குக்கு பலியாகி, அன்றைக்கே போய்ச் சேர்ந்திருப்பேன்.

அரசியல்... அப்போ அப்படி -1:  திருச்சியும் திருப்புமுனை மாநாடும்; கருணாநிதியின் ஒரு ஷாக் ஃப்ளாஷ்பேக்!

ஆம், மாநாட்டை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்திருந்தார்கள். மிக நுண்ணிய மின்கம்பிகள் அந்தச் சிலை மீதும், பீடத்திலும் சுற்றப்பட்டிருந்திருக்கின்றன. ஈரமான மாலையை நான் அணிவித்த மாத்திரத்தில் பயங்கரமான `ஷாக்’ அடித்து, என்னை வேகமாக இழுத்தபோது, நான் வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டதால் தப்பிப் பிழைத்தேன் என்பதைப் புரிந்துகொண்டேன். அன்பில் போன்றவர்கள் அதிர்ச்சியால் என்னவோ நடந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு, வாயடைத்து, வருந்தித் தவித்தார்கள்.

ஒரு நிமிட நேரம்தான்! பிறகு நான் ரதத்தில் அமர்ந்து ஊர்வலத்தைப் புறப்படச் சொன்னேன். மக்கள் வெள்ளம் என்னை ஊர்வலப் பந்தலுக்கு இட்டுச் சென்றது. அன்று நடைபெற்றது மாவட்ட மாநாடா... மாநில மாநாட்டைப்போல அல்லவா மக்கள் குழுமியிருந்தார்கள்! மாநாட்டின் பொருளாளர், கழகப் பொருளாளராக இருந்த அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல் நாளே மாநாட்டுத் திறப்பு விழா உரையை நிகழ்த்திவிட்டு, மறுநாள் காலையில் அவசரப் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுவிட்டார். மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக நான் ஆற்றிய நிறைவுரை இன்னமும் என் நினைவில் நிற்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மெட்ராஸ் வரலாறு:  “கூவம் ஆற்றில் பயணம் செய்த ரோமாபுரி மன்னர்கள்”| பகுதி-1
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு