Published:Updated:

`டெல்டா மாவட்டங்கள் குறி!’ - உதயநிதியின் 100 நாள் பரப்புரைப் பயணத்தின் பின்னணி என்ன?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

`` `முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தன்னை விவசாயி என்று சொல்லிக்கொண்டே விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறார்’ என்று பரப்புரை செய்யும்போது, விவசாயப் பெருமக்களின் வாக்குகள் எங்கள் பக்கம் திரும்பும்.’’

``வரும் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று திருவாரூரிலிருந்து 100 நாள் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார் உதயநிதி ஸ்டாலின்" என்கிறார்கள் தி.மு.க இளைஞரணியினர்.

ஒருபக்கம், பா.ஜ.க எல்.முருகன் வேல் யாத்திரையை நடத்திவர, மறுபக்கம், உதயநிதி ஸ்டாலின் போட்டிப் பயணத்தை தொடங்கிவிட்டார். `எதற்காக திடீரென்று இந்தப் பயணம்?’ என்ற கேள்வியை இளைஞரணி மூத்த உ.பி-க்களிடம் முன்வைத்தோம்.

நம்மிடம் பேசிய நிர்வாகிகள், ``அப்படியும்வெச்சுக்கலாம். தி.மு.க-வுக்கு எதிராக அவர்கள் யாத்திரை அரசியலைக் கையில் எடுத்திருப்பதால், பதிலடியாக `நமக்கு நாமே ' பாணியிலான இந்தப் பயணத்தை தி.மு.க கையிலெடுப்பது தவறில்லையே... இதன் மூலம் பா.ஜ.க-வுக்கு எதிரான பரப்புரையையும் மேற்கொள்ளலாம்தான். அதேநேரத்தில் இது மட்டுமே காரணமல்ல’’ என்றவர்கள், விரிவாகப் பேசத் தொடங்கினார்கள்.

உதயநிதி
உதயநிதி

``2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், அதற்குத் தயாராகும்வண்ணம் கழகத்தில் திட்டங்கள் தீட்டப்பட்டன. வரும் தேர்தலில் புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பார்கள் என்பதால், அவர்களைக் குறிவைத்து களமிறங்க வேண்டும் எனத் திட்டமிட்டோம். அந்தவகையில்தான் இளைஞரணியின் உதயநிதி இப்போதே பரப்புரையைத் தொடங்கிவிடலாம் எனத் தலைமையால் முடிவெடுக்கப்பட்டது. கழக நிர்வாகிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களை அதிக அளவில் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. `திருவாரூர் டு கோட்டை' என்கிற திட்டத்துக்கு அச்சாரமாக இருக்கும் இந்த 100 நாள் பரப்புரைப் பயணம்’’ என்றவர்களிடம், `உதயநிதி, ஏன், டெல்டா மாவட்டங்களிலிருந்து பயணத்தைத் தொடங்குகிறார்?' என்றோம்.

``உதயநிதியின் தாத்தா கலைஞர் மு.கருணாநிதி பிறந்த திருக்குவளையிலிருந்து தொடங்கினால் எல்லாம் சிறப்பாக அமையும் என்கிற சென்டிமென்ட்தான் காரணம்.

திருச்சி: `தொகுதி மேம்பாட்டு நிதி; உதயநிதி படம்!’ - நிழற்குடை சர்ச்சையில் மகேஷ் பொய்யாமொழி

மேலும் , டெல்டா மாவட்டம் என்றாலே விவசாயம்தான் பிரதானம். மத்திய அரசின் சமீபத்திய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவையாக இருக்கின்றன. `முதல்வர் எடப்பாடியும் தன்னை விவசாயி என்று சொல்லிக்கொண்டே விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறார்’ என்று பரப்புரை செய்யும்போது, விவசாயப் பெருமக்களின் வாக்குகள் எங்கள் பக்கம் திரும்பும். இப்படிப் பல காரணங்கள் இருக்கின்றன’’ என்கிறார்கள் இளைஞரணி உ.பி-க்கள்.

இவர்கள் இப்படிச் சொன்னாலும் இன்னொருபக்கம், ``டெல்டா மாவட்டங்களில் அ.ம.மு.க-வினர் கொஞ்சம் வலுவாக இருக்கிறார்கள். சசிகலா விடுதலையானால், அவர்கள் கூடுதல் பலம் பெறுவார்கள். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் டெல்டா மாவட்டங்களில் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், வாக்குவங்கியைப் பெருக்கவும் டெல்டா மாவட்டங்கள் முழுக்க வலம் வரவிருக்கிறார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அடுத்து, உட்கட்சிக்குள் கனிமொழி உள்ளிட்ட பல்வேறு சீனியர்களும் உதயநிதிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் கடுப்பில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க அழகிரி அணியினர் கட்சிக்குத் தனியாகக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இதையெல்லாம் சரிக்கட்ட இந்தப் பயணம் உதவும் என்பது உதயநிதியின் கணக்கு. அதாவது, `நமக்கு நாமே’ பாணியில் மக்களைச் சந்திக்கும்போது மக்களிடம் தன்னுடைய செல்வாக்கு பெருகும். அது கட்சிக்குள்ளும் கூடுதல் ஆதரவு வட்டத்தை உருவாக்கும். தன்னுடைய தலைமைத்துவத்தையும் கட்சிக்குள் நிறுவ முடியும் என்கிற உதயநிதியின் பிளான்தான், இப்படியான பயணத்துக்கான பின்னணி’’ என்கிறார்கள் உள்விவகாரங்களை நன்கு அறிந்த தி.மு.க-வின் சீனியர்கள் சிலர்.

``கோட்டைக்கு ரூட் போடுவதாகக் காட்டிக்கொண்டு அடுத்த தி.மு.க தான்தான் எனக் காட்ட, அறிவாலயத்துக்கு ரூட் போட்டிருக்கிறார் உதயநிதி’’ என்கிறார்கள் சில வேடிக்கையான உடன்பிறப்புக்கள்.

அடுத்த கட்டுரைக்கு