Published:Updated:

`சேதப்படுத்தப்பட்டதா பென்னிகுவிக் கல்லறை?' - லண்டனிலிருந்து ஒரு ரிப்போர்ட்

பென்னிகுவிக் கல்லறை
பென்னிகுவிக் கல்லறை

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர், லண்டனிலுள்ள பென்னிகுவிக் கல்லறைக்கு நேரடி விசிட் அடித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

தென்மாவட்ட விவசாயிகளால் `தெய்வம்’ எனக் கொண்டாடப்படுபவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். ஆங்கிலேய அரசில் பொறியாளராகப் பணியாற்றிய பென்னிகுவிக், தன் சொத்துகளை விற்று, முல்லைப்பெரியாறு அணையைக் கட்டியெழுப்பினார். இதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்த்து, மனிதக் கடவுளாக இன்றளவும் போற்றப்படுகிறார்.

பென்னிகுவிக் கல்லறை; முன்பும் பின்பும்
பென்னிகுவிக் கல்லறை; முன்பும் பின்பும்

தேனி மாவட்டம், கூடலூரில் பென்னிகுவிக்குக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டு, ஆளுயர வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அவரது பிறந்ததினமான ஜனவரி 15-ம் தேதியை, திருவிழாவாக தேனி மக்கள் கொண்டாடுகின்றனர். தென்மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பென்னிகுவிக், மார்ச் 9, 1913-ல் லண்டனில் காலமானார். இவரது உடல், இங்கிலாந்தின் சர்ரே மாகாணத்தில், பிர்ம்லி நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவரது கல்லறையை சிலர் சேதப்படுத்திவிட்டதாகத் தகவல் பரவி, பரபரப்பானது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க தலைவர் வைகோ உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பென்னிகுவிக் கல்லறை சேதப்படுத்தப்பட்ட செய்தியால், தென்மாவட்டம் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

Vikatan

எம்.ஜி.ஆர் மக்கள் மன்றத் தலைவர், எம்.ஜி.ஆர் நகர் புகழேந்தி தற்சமயம் லண்டனில் இருக்கிறார். பென்னிகுவிக் கல்லறை சேதப்படுத்தப்பட்ட செய்தியை அறிந்தவுடன், அக்கல்லறைக்கு நேரடி விசிட் அடித்துள்ளார். `உண்மையிலேயே பென்னிகுவிக் கல்லறை எந்த நிலையில் இருக்கிறது?’ என்று புகழேந்தியிடம் வாட்ஸ்அப் அழைப்பு மூலமாகப் பேசினோம்.

பென்னிகுவிக் கல்லறையில் புகழேந்தி
பென்னிகுவிக் கல்லறையில் புகழேந்தி

``செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் பின்புறமுள்ள கல்லறை தோட்டத்தில்தான் பென்னிகுவிக்கின் கல்லறை இருக்கிறது. கல்லறைத் தோட்டத்துக்குள் அனுமதியின்றி யாரும் நுழைந்துவிட முடியாது. பென்னிகுவிக்கின் கல்லறையை, சுண்ணாம்பு கலந்த கல்லால் கட்டியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இங்கு கடும் மழை பெய்துவருகிறது. 100 வருடங்கள் பழைமையான கல்லறை என்பதால், இயற்கையாகவே கல்லறையின் தூண் உடைந்து சரிந்திருப்பதைக் காண முடிகிறது. கல்லறைத் தோட்ட காவலாளிகளிடமும், தேவாலயத்தில் வசிப்பவர்களிடமும் பேசினேன். `யாரும் கல்லறையை உடைக்கவில்லை. இது இயற்கையான விபத்துதான்’ என்று அவர்கள் விளக்கமளித்தனர். அய்யா பென்னிகுவிக்கின் கல்லறை மிகப் பாதுகாப்பாக இருக்கிறது.

Vikatan

கல்லறையை மீண்டும் புதுப்பிக்க இந்திய ரூபாய் மதிப்பில் 30,000 ரூபாய் தேவைப்படும் எனத் தெரிகிறது. `அதற்கான முழுச் செலவையும் நானே ஏற்கிறேன். கல்லறையை மீண்டும் புனரமைக்க அனுமதி தாருங்கள்’ என செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறேன். பாதிரியார் தரப்பிடம் பேசிவிட்டுக் கூறுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நம் தமிழ் மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். தென்மாவட்டங்களின் குலதெய்வமாகப் போற்றப்படும் பென்னிகுவிக்கின் கல்லறை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும்’’ என்றார்.

பென்னிகுவிக் கல்லறை
பென்னிகுவிக் கல்லறை

ஜான் பென்னிகுவிக் கல்லறையின் மீது, `ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு’ என்கிற திருக்குறள் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, `ஏழைகளுக்குக் கொடுக்கும் கொடையும், அதனால் கிடைக்கும் புகழும் தவிர ஒரு மனிதருக்கு பயன் தரக்கூடியது வேறெதுவும் இல்லை’ என்பதுதான் இக்குறளின் பொருள். இதற்கேற்ப வாழ்ந்து மறைந்திருக்கிறார் பென்னிகுவிக். அவர் நினைவிடம் எங்கிருந்தாலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அடுத்த கட்டுரைக்கு