Published:Updated:

`பா.ஜ.க சமத்துவத்தை விரும்பவில்லை என்று தோன்றுகிறது!’ - `புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

`திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் எங்களின் நியாயமான கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில்தான் அதை பா.ஜ.க பரிசீலிக்க ஆர்வம்காட்டியதால், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருந்தோம்’ - டாக்டர் கிருஷ்ணசாமி.

``எங்களின் நீண்டகால கோரிக்கையைப் பரிசீலித்ததால் பா.ஜ.க-வை மதித்தோம். அதற்காக அவர்களின் அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டோம் என்று அர்த்தம் இல்லை" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரை வந்திருந்த கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தொல்காப்பியம் சுட்டிக்காட்டும் மருத நில மக்களான ஆறு பிரிவினரை இணைத்து, `தேவேந்திர குல வேளாளர்’ என்ற அடையாளத்தை மீட்க வேண்டும் என்று 30 வருடங்களாகக் கோரிக்கை வைத்துவந்தோம். பா.ஜ.க அரசு அதற்கு மசோதா கொண்டுவந்திருக்கிறது.

அதேநேரத்தில், எங்களின் முக்கியக் கோரிக்கையான தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெயர் மாற்றத்துக்குப் பரிந்துரை செய்த தமிழக அரசும், பட்டியல் வெளியேற்றத்தை வலியுறுத்தவில்லை. மத்திய அரசின் இந்தப் பெயர் மாற்றத்தை மட்டும் பாராட்டும் சில அமைப்பினர் தேவேந்திர குல வேளாள மக்களுக்கு தொடர்பில் இல்லாத தனி நபர்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

ஏற்கெனவே இட ஒதுக்கீட்டால் குறைந்த அளவே பலன் கிடைத்துவந்தது. அந்தச் சலுகைகள் போனாலும் பரவாயில்லை, நாங்கள் சுயமரியாதையுடன் இந்துப் பண்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள் என்று வலியுறுத்திவருகிறோம்.

இஸ்லாமிய மக்கள் கடுமையாக எதிர்க்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அரசு, யாரும் எதிர்க்காத, வேறு எந்தச் சமூகத்துக்கும் பாதிப்பில்லாத பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை மட்டும் கண்டுகொள்ளாதது, அவர்கள் இன்னும் சமத்துவத்தை விரும்பவில்லையோ என்று எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் பா.ஜ.க-வை யாரோ தப்பாக வழிநடத்துகிறார்கள்.

‘‘டாக்டர் கிருஷ்ணசாமி எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல’’

தேர்தல் நிலைப்பாடு பற்றி இப்போது முடிவெடுக்கவில்லை. முதலில் எம் மக்களின் இந்தக் கோரிக்கை நிறைவேற வேண்டும். இதற்காகத் தமிழகம் வரும் உள்துறை அமைச்சர், பிரதமரை சந்திக்கவிருக்கிறேன். அதற்கு பிறகுதான் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்.

திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் எங்களின் நியாயமான கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில்தான் அதை பா.ஜ.க பரிசீலிக்க ஆர்வம் காட்டியதால், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருந்தோம். அதற்காக பா.ஜ.க-வின் அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பத்து வருடங்களுக்கு பிறகு, இடஒதுக்கீட்டால் சலுகை கிடைத்தாலும், சமத்துவம் இல்லை என்பதால் அவருடைய மஹர் சமூகத்தினருடன் புத்த மதத்துக்கு மாறிச் சென்றார். நாங்கள் அப்படி மாற விரும்பவில்லை. இந்து கலாசாரத்தோடு வாழ விரும்புகிறோம்.

ஒரு காலத்தில் மீனாட்சிபுரத்தில் மக்கள் மதம் மாறியபோது வாஜ்பாயெல்லாம் வந்தார். வளைகுடா பணத்தால் மதம் மாறிவிட்டதாகக் கூறினார்கள். அப்படிக் கூறியவர்கள், இப்போது எங்களை இந்து அடையாளத்துடன் இருக்க தாழ்த்தப்பட்டோர் பட்டியலிருந்து வெளியேற்றும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

மார்ச் 8-ல் வரும் மசோதாவில் திருத்தம் செய்து பட்டியல் வெளியேற்றத்தைச் சேர்க்க வேண்டும். அதைத் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால், தேவேந்திர குல வேளாள மக்களின் ஆதரவு மத்திய அரசுக்கு கிடைக்காது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு