Published:Updated:

திமுக ஐடி அணியில் டாக்டர் மகேந்திரன்! - முதலில் இணைச் செயலாளர்... அடுத்து செயலாளர்?!

ஸ்டாலினுடன் மகேந்திரன்
ஸ்டாலினுடன் மகேந்திரன்

திமுக ஆட்சியின் 100-வது நாள் முடிந்து, ஆகஸ்ட் 16-ம் தேதி டாக்டர் மகேந்திரனுக்கான பொறுப்பு அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 7-ம் தேதியே அறிவிப்பு வெளியாகிவிட்டது.

மக்கள் நீதி மய்யத்தில் கமலுக்கு அடுத்த இடத்தில் துணைத் தலைவராக கடந்த மூன்றாண்டுகளாகப் பணியாற்றிவந்தார் கோவையைச் சேர்ந்த பிரபல இதய மருத்துவரும், தொழிலதிபருமான மகேந்திரன். முதலில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். அடுத்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு அங்கும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றார். இவர் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்ததால்தான் தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தோற்றுப்போனார் என்ற கருத்தும் நிலவுகிறது. ம.நீ.ம கட்சி கமல் கன்ட்ரோலில் இல்லாமல், தனியார் நிறுவனக் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக குற்றம்சாட்டி கட்சியிலிருந்து வெளியேறினார் டாக்டர் மகேந்திரன்.

கமல், மகேந்திரன்
கமல், மகேந்திரன்

பிறகு ஜூலை 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார் மகேந்திரன். அவர் இணைந்தபோதே தி.மு.க ஐடி அணி மாநிலச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்படவிருக்கிறது என்ற பேச்சு அடிபட்டது. ஏனெனில், நிதியமைச்சராகப் பல்வேறு பணிகள் இருப்பதால் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் ஐடி விங்கைச் சரிவர நிர்வகிக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டதால் அவரை ஐ.டி அணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்க ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டதாகச் செய்திகள் கசிந்தன. இந்தநிலையில், திடீரென இன்று ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதியின் மூன்றாவது நினைவு தினத்தன்று டாக்டர் மகேந்திரன் ஐடி அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ``டாக்டர் மகேந்திரன் கட்சியில் சேர்ந்தபோது `தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் கொங்குவில் கொஞ்சம் வென்றிருக்கலாம்' என்று ஸ்டாலினே அவரைப் பாராட்டிப் பேசினார். மூன்று ஆண்டுகளில் கமல் கட்சிக்கே பல கோடிகளை வாரிக் கொடுத்திருக்கிறார் மகேந்திரன். அவையனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. ஆனால் இங்கு அப்படி வீணாகாது. கோவை மக்கள் மத்தியில் மகேந்திரனுக்கு இருக்கும் செல்வாக்கு பற்றி தெரிந்ததால்தான் ஸ்டாலின் அப்படிப் பேசினார்.

மகேந்திரன்
மகேந்திரன்

கொங்கு பகுதிக்காக பல பிளான்களைப் போட்டுவைத்திருக்கிறார் ஸ்டாலின். அதில் மகேந்திரனும் அடங்குவார். அதனால் கட்சியை நம்பி வந்தவருக்குத் தகுந்த பதவியைக் கொடுக்க வேண்டும் என்பதால், ஐடி விங் மாநிலச் செயலாளர் பொறுப்புக் கொடுக்கப்படுவதாகத்தான் இருந்தது. ஏனெனில், மற்ற அணிகளிலெல்லாம் சம்பளத்துக்கு யாரும் வேலை செய்யவில்லை. ஆனால், ஐடி அணியில் பணியாற்றும் சிலருக்குச் சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது. தற்போதுவரை பி.டி.ஆர்-தான் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தி.மு.க-யில் இணைந்த மகேந்திரன்; ஸ்டாலினின் கொங்கு கணக்கு | Elangovan Explains

அதனால் இந்தப் பதவிக்கு வருபவர்கள் பொருளாதாரத்திலும் செழிப்பானவராக இருக்க வேண்டும் என்பதால்தான் மகேந்திரனுக்கு ஐடி அணிதான் சரி என்று முடிவெடுக்கப்பட்டது. கட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தலைமைப் பொறுப்பைக் கொடுக்க வேண்டாம் என சீனியர்கள் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். மேலும், தலைமைப் பொறுப்பில் ஒருவர் இருக்கும்போது, அவரை நீக்கிவிட்டு தன்னை அந்த இடத்துக்கு நியமிக்க வேண்டாமென மகேந்திரன் தரப்பிலும் கூறியிருக்கிறார்கள். முதலில் இணைப் பதவியைக் கொடுத்துவிட்டு, சில மாதங்கள் கழித்து பி.டி.ஆரையே முறைப்படி விலகவைத்துவிட்டு, செயலாளர் பொறுப்பில் நியமிக்கலாம் என்ற யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படிதான் இப்போது இணைச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது" என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு