Published:Updated:

துரை தயாநிதியின் சட்டப் போராட்டம் டு பார்த்திபனுக்கு விட்டுக்கொடுத்த சீமான் வரை - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

``ஜல்லிக்கட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன். மெயில் செக் செய்யும்...” மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார்!

ஓசியில் `மாஸ்டர்’ டிக்கெட்
தியேட்டர் மேலாளரைத் தூக்கிய போலீஸ்

சென்னை கோயம்பேடு ஏரியாவைச் சேர்ந்த ஒரு தியேட்டரில் `மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸானது. ‘இந்தப் படத்துக்கு 150 டிக்கெட்கள் வேண்டும்’ என அந்த ஏரியா உயரதிகாரி ஒருவர் தியேட்டர் தரப்பிடம் கேட்டிருக்கிறார். `கொரோனாவால வருமானம் இல்லைங்க. 50 டிக்கெட் வேணும்னா தர்றேன்’ என்று தியேட்டர் தரப்பில் கூறியிருக்கிறார்கள்.

விஜய் | மாஸ்டர்
விஜய் | மாஸ்டர்

இதையடுத்து, ‘`அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கோயம்பேடு பகுதியில் போலீஸ் தரப்பில் திடீர் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. அதிக விலைக்கு டிக்கெட் விற்றதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட தியேட்டரின் மேலாளரைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். பதறிப்போன தியேட்டர் தரப்பு, அந்த அதிகாரி கேட்ட எண்ணிக்கையில் டிக்கெட் தந்த பிறகே, மேலாளர் விடுவிக்கப்பட்டாராம்.

`முடிஞ்சா தொடச் சொல்லுடா பார்ப்போம்’னு டயலாக் பேசலைங்களா தியேட்டர் ஓனர் சார்!?

விரிசலை ஏற்படுத்திய சமத்துவப் பொங்கல்!

ஜனவரி 13-ம் தேதி ஆவடி மாநகராட்சி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், மாவட்டச் செயலாளரும், அம்பத்தூர் எம்.எல்.ஏ-வுமான அலெக்ஸாண்டருக்கு அழைப்பில்லை. அதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸாண்டர் தரப்பு, ஆவடி மாநகராட்சி கமிஷனரிடம் போனில் விளக்கம் கேட்டிருக்கிறது. அதற்கு கமிஷனர் நாராயணன், `விஜிலென்ஸ் ரெய்டு நடப்பதால், அழைப்பு விடுக்க மறந்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

அதை ஏற்றுக்கொள்ளாத அலெக்ஸாண்டர் தரப்பு, `அமைச்சரை மட்டும் கூப்பிட்டுவிட்டு, நம்மைத் திட்டமிட்டே ஒதுக்குகிறார்கள்’ என்று பொருமலில் இருக்கிறதாம். ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்தில் மாஃபா பாண்டியராஜனுக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில், அலெக்ஸாண்டர் மட்டும்தான் மாஃபாவிடம் நட்பாக இருந்தார். அந்த நட்பிலும் சமத்துவப் பொங்கல் விழா விரிசலை ஏற்படுத்திவிட்டதாம்.

பொங்கப் பானையை உடைச்சிட்டாருன்னு சொல்லுங்க!

விசாரணை வளையத்தில் அதிகாரி!

சத்துணவுத் துறையில் திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கத்தின் பதிவாளராக இருப்பவர் சந்திரசேகர். இவர்மீது சில புகார்கள் எழவே... அந்தப் பதவியிலிருந்து வேறு பதவிக்கு மாற்றியிருக்கிறது துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தரப்பு. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே முதல்வருக்கு நெருக்கமான சேலத்து பிரமுகரைப் பிடித்து, பழைய பதவியிலேயே அமர்ந்துவிட்டாராம்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
ஈ.ஜெ.நந்தகுமார்

இதில் செல்லூர் ராஜூ அப்செட் என்கிறார்கள். இந்தநிலையில்தான், பொங்கல் பரிசு வழங்குவதற்காக ஏலக்காய் கொள்முதல் செய்ததில் குளறுபடி நடந்திருக்கிறதாம். இதைவைத்து, மீண்டும் அந்த அதிகாரியை வளைக்கத் திட்டமிட்டிருக்கிறது அமைச்சர் தரப்பு.

`ஏலக்காய்’ அதிகாரிக்கு ‘கடுக்காய்’ கொடுப்பாரோ!

``பெரிசுபடுத்தாதீர்கள்!’’
தம்பிகளுக்கு ஆணையிட்ட சீமான்

தீனதயாளனின் இயக்கத்தில் பார்த்திபன், விஜய் சேதுபதி நடித்த `துக்ளக் தர்பார்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தில், சீமானின் பெயரை `இமிடெட்’ செய்து, ‘ராசிமான்’ என்கிற கேரக்டரில் பார்த்திபன் நடித்திருக்கிறாராம். இது குறித்து நாம் தமிழர் வட்டாரத்தில் பார்த்திபனைக் கண்டித்து விமர்சனக் குரல்களும் எழுந்தன.

சீமான்
சீமான்

உடனடியாக, சீமானிடம் பேசிய பார்த்திபன், ‘ராசிமான்’ பெயர் வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கமளித்தாராம். இதைத் தொடர்ந்து, படத்துக்கு எந்தச் சிக்கலையும் உருவாக்க வேண்டாமென்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் சீமான் கூறியிருக்கிறாராம்.

துபாய் குறுக்கு சந்துலவெச்சு ‘குண்டக்க மண்டக்க’ பேச்சுவார்த்தையை நடத்தியிருப்பாங்களோ!

முதல்வரை மிரட்டினாரா தோப்பு?

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக ஜனவரி 6, 7-ம் தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வந்திருந்தார். 7-ம் தேதி பெருந்துறையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்த முதல்வருக்கு, வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமையில் பிரமாண்ட வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெயக்குமாருக்கும் எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலத்துக்கும் முட்டல் மோதல் இருப்பதால், ‘ஜெயக்குமார் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பில் முதல்வர் கலந்துகொள்ளக் கூடாது’ என்பதில் தோப்பு தீர்மானமாக இருந்தாராம்.

 தோப்பு வெங்கடாசலம்
தோப்பு வெங்கடாசலம்

முதல்வர் தரப்பிடம், ‘ஜெயக்குமாரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டால் என் இமேஜ் என்னவாவது?' என்று மன்றாடியதாம் தோப்பு தரப்பு. இதைத் தொடர்ந்து, எந்த வரவேற்பையும் ஏற்காமல் முதல்வர் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்ட அரசியலை கொழுந்துவிட்டு எரியவைத்திருக்கிறது.

‘தோப்பு, இதெல்லாம் ரொம்ப தப்பு!’னு நினைச்சிருப்பாரோ எடப்பாடி!

நெல்லையில் தொல்லை...
களமிறங்க யோசிக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ!

திருநெல்வேலி சிட்டிங் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த ஏ.எல்.எஸ்.லட்சுமணன் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில், திருநெல்வேலித் தொகுதியில் போட்டியிடுவதற்குத் தயங்குகிறாராம். தொகுதியைக் குறிவைத்து அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, 15 பெரிய ஸ்வீட் பாக்ஸ்களை களமிறக்கியிருக்கிறார்.

ஏ.எல்.எஸ்.லட்சுமணன்
ஏ.எல்.எஸ்.லட்சுமணன்
எல்.ராஜேந்திரன்

மொத்த லோக்கல் தி.மு.க புள்ளிகளையும் கணேசராஜா ‘பர்ச்சேஸ்’ செய்துவிட்டதால்தான், லட்சுமணன் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கட்சித் தலைமைக்கும் லட்சுமணன் கடிதம் எழுதியிருக்கிறார் என்கிறார்கள்.

கணேசராஜா
கணேசராஜா
எல்.ராஜேந்திரன்

இதையடுத்து, காங்கிரஸுக்குத் தொகுதியைத் தள்ளிவிட்டுவிடலாமா என்று யோசிக்கிறதாம் கட்சித் தலைமை.

திருநெல்வேலி அல்வா ரெடின்னு சொல்லுங்க!

தொண்டாமுத்தூர் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்!

அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில் சமீபத்தில் சர்வே எடுத்த ஐபேக் டீம், சுமார் 18 சதவிகிதம் அளவுக்கு தி.மு.க-வைவிட வேலுமணி முன்னிலையில் இருப்பதாக தி.மு.க தலைமைக்கு ரிப்போர்ட் அளித்திருக்கிறதாம்.

வேலுமணி
வேலுமணி

இதனால், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு மட்டும் 250 களப் பணியாளர்களை இறக்கி, மொத்தமுள்ள சுமார் 300 பூத்களிலும் வாக்காளர்களைக் குறிவைத்து களமாட தயாராகிறதாம் ஐபேக். இதற்காக ஸ்பெஷல் அலுவலகம் ஒன்றையும் தொண்டாமுத்தூரில் திறக்க ஐபேக் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

தொண்டாமுத்தூரை பேக் செய்யுமா ஐபேக்?!

உதயநிதிக்குத் தடைபோட்ட கட்சித் தலைமை...
பின்னணியில் மதுரை மூர்த்தி?

மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு பகுதியில், ஜனவரி 14-ம் தேதி தி.மு.க சார்பாக சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மணிமாறனின் கட்டுப்பாட்டுக்குள் வரும் இந்தப் பகுதியில், தி.மு.க பிரமுகர் எஸ்.ஆர்.கோபி மூலமாக பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர், புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரான மூர்த்தி. இப்படி மாவட்டம்விட்டு மாவட்டம் வந்து மூர்த்தி அரசியல் செய்வதால், மணிமாறன் தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்தச் சூழலில், எஸ்.ஆர்.கோபியின் அண்ணன் நல்லமருதுவின் இல்லத்தில், அவரின் படத்திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லீலாவதி கொலை வழக்கில் நல்லமருதுவின் பெயர் இருக்கிறது. வில்லாபுரம் வரும் உதயநிதியை அப்படியே படத்திறப்பு விழாவுக்கும் அழைத்துச் செல்ல எஸ்.ஆர்.கோபி திட்டமிட்டிருந்தாராம். மாநகர் மாவட்டச் செயலாளரான கோ.தளபதியும் உதயநிதியின் வரவுக்காக நல்லமருதுவின் இல்லத்தில் காத்திருந்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட மூர்த்தி, ‘கோபியும் தன் கையைவிட்டு தன்னிச்சையாகச் சென்றுவிடக் கூடாது, தளபதியும் தனியாக ஸ்கோர் செய்துவிடக் கூடாது’ என்று திட்டமிட்டு, உடனடியாக கட்சித் தலைமைக்கு போன் போட்டாராம். ‘கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க நம்ம கூட்டணியில இருக்காங்க. இந்தச் சூழல்ல, நல்லமருது படத்திறப்பு விழாவுல கலந்துக்குறது நல்லா இருக்காது’ என்ற வெடியை மூர்த்தி கொளுத்தினாராம். உடனடியாக, படத்திறப்புக்குச் செல்ல வேண்டாமென உதயநிதிக்கு கட்சித் தலைமை தடைபோட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரே நேரத்தில் மணிமாறனுக்கும் கோபிக்கும் தளபதிக்கும் மூர்த்தி அல்வா கிண்டியதுதான் மதுரை தி.மு.க-வில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

மூர்த்தி ‘அல்வா’ கடை... எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது!

மனக்கசப்பை மறக்கடித்த பொங்கல் விழா!

திருவள்ளூரிலுள்ள பண்ணை வீட்டில் பொங்கல் விழாவை பேரக்குழந்தைகளுடன் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். விழாவில் மகனும் ஆப்சென்ட்... மருமகனும் ஆப்சென்ட். அப்செட் ஆன ஸ்டாலின், விழாவுக்கு இருவரும் வந்தே தீர வேண்டுமென்று கண்டிப்புடன் உத்தரவிட்டாராம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சமீபகாலமாக உதயநிதியும் சபரீசனும் பேசிக்கொள்வதில்லை என்றாலும், ஸ்டாலினின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு இருவரும் ஒன்றாகப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்களாம்.

கொடுக்கல், வாங்கல் பிரச்னையெல்லாம் பொங்கல்ல காட்டாதீங்கப்பு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...
ஆர்வமாக விசாரித்த ராகுல்!

ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். தன் அருகில் அமர்ந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம், “இந்த மாட்டையெல்லாம் கொடுமைப்படுத்துறதா சொல்றாங்களே... உண்மையா?” என்று சந்தேகமாகக் கேட்டாராம் ராகுல். அதற்கு, “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க. நீங்களே பார்த்துட்டுத்தானே இருக்கீங்க. ரொம்ப பாதுகாப்போட நடத்தப்படுற தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டு இது” என்று பதிலளித்திருக்கிறார் அழகிரி. சந்தேகம் குறையாத ராகுல், வாடிவாசலுக்குள் எட்டிப் பார்த்தும், அடிபட்டவர்களிடம் விசாரித்தும், ஜல்லிக்கட்டு குறித்து ஆர்வமாக கேட்டுத் தெரிந்துகொண்டாராம்.

ராகுல்
ராகுல்

முன்னதாக, ராகுலின் அவனியாபுரம் வருகைக்கு விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் ஏற்பாடு செய்ததே கே.எஸ்.அழகிரிக்கு தெரியாது என்கிறார்கள். கடைசி நேரத்தில் தகவல் தெரிந்ததால் அழகிரி அப்செட்டாம்.

அவனியாபுரம் எதுக்கு... சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தாலே விதவிதமா ஜல்லிக்கட்டு பார்க்கலாமே!

ஊழல் அதிகாரியைக் காப்பாற்றியது யார்?

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெண் அலுவலர் ஒருவர்மீது, விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில், இறைச்சிக் கடைகளுக்கு அனுப்பப்படும் அடிமாடுகளையும், நீண்டநாள் நோய் பாதிப்பிலிருந்த மாடுகளையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி பயனாளிகளிடம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு இருந்துவந்தது. அவர் கொடுத்த நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்துவிட்டன. மேலும் 300 பேருக்கு மாடுகளை வழங்காமலே வழங்கியதாகப் பொய்க் கணக்கு எழுதியதாகவும் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரிமீது துறைரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறிய நிலையில், யார் செய்த மாயமோ தெரியவில்லை... அந்தப் பெண் அதிகாரி தற்போது அரியலூர் மாவட்டத்தில் அதே துறையில் பொறுப்பேற்றிருக்கிறாராம். ‘கோடிக்கணக்கில் கொள்ளையடித்த இவரை, விசாரணைகூட செய்யவிடாமல் காப்பாற்றியது யார் என்பது மட்டும் மர்மமாகவே இருக்கிறது’ என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டம்.

விசாரணையில என்ன ‘மாடு’லேஷன்ல பேசியிருப்பாரு?

சட்டப் போராட்டத்துக்குத் தயாராகும் துரை தயாநிதி!

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது கடும் ஆத்திரத்திலிருக்கிறாராம். ‘நம்மை ஏமாற்றிவிட்டார்கள். தி.மு.க அறக்கட்டளையில்கூட இடம் தர மாட்டோம் என்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் அமைதியாகச் செல்லுங்கள்.

துரை தயாநிதி
துரை தயாநிதி

நான் சும்மாவிட மாட்டேன். சட்டரீதியாக என்ன செய்து, அவர்களைத் திணறடிக்க முடியுமோ, அதைச் செய்யப்போகிறேன்’ என்று அழகிரியிடம் கொதித்துவிட்டாராம் துரை தயாநிதி. அழகிரி எவ்வளவோ சமாதானம் செய்தும், துரை தயாநிதி சமாதானம் அடையவில்லை என்கிறார்கள்.

‘கட்ட’துரை இப்போ ‘சட்ட’துரை!

‘வாயவெச்சுக்கிட்டு சும்மா இரும்மா!’
கோகுல இந்திராவிடம் கடுகடுத்த வேலுமணி...

சசிகலாவைப் போற்றி ‘தவ வாழ்க்கை வாழ்ந்தவர்’ என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியிருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி போன்றோர் நேரடியாகவே கடுப்படித்துவிட்டார்களாம்.

கோகுல இந்திரா
கோகுல இந்திரா

வேலுமணி தரப்பில், ‘கொஞ்ச நாளைக்கு வாயவெச்சுக்கிட்டு சும்மா இரும்மா. தேவையில்லாம பேசி பிரச்னையை உண்டு பண்ணாத’ என்று கடுகடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோகுல இந்திரா அப்செட்டாம்.

கோகுலத்துக்கு இல்லை குதூகலம்!

அடுத்த கட்டுரைக்கு