Published:Updated:

`மீண்டும் பொருளாளர்; துரைமுருகனுக்கு செக் வைத்த ஸ்டாலின்?!'- தி.மு.க தலைமை முடிவின் பின்னணி

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

துரைமுருகன், முதல்வர் எடப்பாடி முதல் அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில் பழக்க வழக்கம் வைத்திருப்பதாகவும் அ.தி.மு.கவில் சில சோர்ஸ்களிடமிருந்து ஸ்டாலினுக்குத் தகவல்கள் சென்றிருக்கின்றன.

தி.மு.க-வின் பொருளாளராகவே துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி பிறந்தநாள் அன்று அறிவித்திருக்கிறார். இதனால், துரைமுருகன் உட்பட அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்களாம். அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்ததாக வேலூரில் தொகுதியில் உள்ள தி.மு.க-வினர் ஆதாரங்களுடன் தகவலை தி.மு.க தலைமைக்கு அனுப்பியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனைப் பார்த்துத்தான் ஸ்டாலின் துரைமுருகனுக்கு செக் வைத்ததாகச் சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

தி.மு.க-வில் இருக்கும் முக்கியத் தலைவர்களிலேயே முதன்மையானவர் துரைமுருகன். மார்ச் 29ஆம் தேதி திட்டமிட்டபடி தி.மு.கவின் பொதுக்குழு நடந்திருந்தால், இந்நேரம் துரைமுருகன் தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்திருப்பார். ஆனால், கொரோனா வைரஸ் ஊரடங்கால் பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு இப்போது வாய்ப்பில்லை. அதனால், துரைமுருகனிடம் மீண்டும் பொருளாளர் பதவியையே கொடுத்து அறிவித்துள்ளார் ஸ்டாலின். அதாவது பொதுச் செயலாளரைச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கலாம் என்பதே இந்த பொலிட் பீரோவின் முடிவு என்று தெரிகிறது. `ஸ்டாலினுக்குக் கட்சியின் தலைவர் பதவி கொடுக்கவேண்டும் என்று முதலில் தூபம் போட்டவர் துரைமுருகன். இந்நிலையில் துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்கிவிட்டு கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என ஸ்டாலின் ஒரு கணக்குப் போட்டார்.

ஆனால் கொஞ்ச நாள்களிலேயே அவரது மன ஓட்டம் மாறியிருக்கிறது’ என்கிறார்கள். அதற்குக் காரணம் ஆளுங்கட்சியினரிடம் துரைமுருகன் நெருக்கம் காட்டியதாகச் சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். என்ன நடந்தது என்று தி.மு.கவின் மேல் மட்டத்தலைவர்களிடம் பேசினோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

``தி.மு.க-வில் கருணாநிதியின் வலதுகரமாகத் திகழ்ந்தவர் துரைமுருகன். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர். எம்.ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதல்வரான போதும் கூட எம்.ஜி.ஆரா, கலைஞரா என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது அரசியல் பயணம் என்ற ஒன்று இருந்தால் அது கலைஞரோடுதான் என்று ஒரே நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருந்தார். தி.மு.க-வில் பல்வேறு அதிரடி முடிவுகளைக் கலைஞர் எடுத்தபோது அதன் அருகில் இருந்தவர் துரைமுருகன். இந்தநிலையில் கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற தெளிவான முடிவில் இருந்ததோடு அவரை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற தூபத்தைப் போட்டார். அப்போது கட்சிக்குள் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டன.

அதனைத்தொடர்ந்து அப்போதைய பொதுச்செயலாளர் அன்பழகனும் ஏற்றுக்கொண்டதோடு ஸ்டாலின் தலைவராகவும் ஆனார். தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த துரைமுருகனுக்குப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் ஸ்டாலின்.

துரைமுருகன் - எடப்பாடி பழனிசாமி
துரைமுருகன் - எடப்பாடி பழனிசாமி

இப்போது ஸ்டாலின் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கிறார். துரைமுருகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில் பழக்க வழக்கம் வைத்திருப்பதாகவும் அ.தி.மு.கவில் சில சோர்ஸ்களிடமிருந்து ஸ்டாலினுக்குத் தகவல்கள் சென்றிருக்கின்றன. அதனை அவர் நம்பவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஏன் என்றால் கட்சியில் முக்கியமானவர். மூத்த நிர்வாகி. கலைஞரின் நம்பிக்கை பாத்திரமானவர். அப்படி நடந்துகொள்ளமாட்டார் என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின்.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்நிலையில், துரைமுருகனின் ஆதரவாளர் சிலருக்கு ஆளும்கட்சியில் உள்ள முக்கிய அமைச்சர்களின் உதவியுடன் நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள கான்ட்ராக்டுகள் கைமாறியிருக்கிறது. இதனை வேலூர் தொகுதியில் உள்ள தி.மு.க நிர்வாகிகள் சிலர் ஆதாரங்களுடன் தி.மு.க தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதனைப் பார்த்தபிறகுதான் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தாராம். ஏற்கெனவே தனக்கு வந்த தகவல்களையும் சேர்த்து வைத்து வேகமாக ஒரு முடிவெடுத்துவிட்டார் ஸ்டாலின்’’ என்றனர்.

எது எப்படி இருந்தாலும் துரைமுருகன் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் துரைமுருகனின் ஆதரவாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு