Published:Updated:

`வைகோவின் பணிச் சுமையை குறைக்க, துரை வைகோவுக்கு பதவி!’ -தூத்துக்குடியில் தீர்மானம் நிறைவேற்றம்

``மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பணிச்சுமையை குறைத்திட துரை வைகோவுக்கு கட்சியில் செயல் தலைவர், துணைப்பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பதவிகளில் ஒன்று வழங்கிட வேண்டும்” என, தூத்துக்குடியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ம.தி.மு.கவைப் பொறுத்த வரையில் தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது. இந்த மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மட்டுமில்லாமல் மாவட்ட நிர்வாகிகளும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் வலியுறுத்தினார்கள். கட்சித்தலைமை அனுமதி அளித்தால் சாத்தூர் அல்லது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடலாம் என துரை வைகோவும் ஆர்வத்தில் இருந்தார்.

வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆனால், வைகோ கடைசி வரையில் அதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை. ”கடந்த 1993-ல் தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ, “தி.மு.கவில் கலைஞரின் மகன் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தவே என்னை வெளியேற்றியிருக்கிறார்கள்” எனக் கூறினார். வாரிசு அரசியலை அவரே எதிர்த்த நிலையில், தற்போது தன் மகனை அரசியலுக்குள் நுழைத்தால் தன் மீது களங்கம் ஏற்படுமோ என தலைவர் நினைக்கிறார். அதனால்தான் இத்தனை ஆண்டுகாலம் கட்சிக்குள் சேர்க்காமல் ஒதுக்கியே வைத்திருக்கிறார்” என கட்சியினர் விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து கட்சி நிகழ்ச்சிகளிலும், கட்சியினர் வீட்டி விசேச நிகழ்ச்சிகளின் பேனர்களில் வைகோ படத்துடன் துரை வைகோவின் படத்தையும் சேர்த்தே போட்டனர். துரைவைகோவும் கட்சியினர் வீட்டு சுப, துக்க நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொண்டார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி இரண்டாம் கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலிங்கப்பட்டி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தன் மகன் துரைவைகோவுடன் வாக்களித்தார்.

வைகோ
வைகோ

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோ. அப்போது, ’உங்க மகன் துரைவைகோ அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், “நான் என்னுடைய வாழ்க்கையின் 56 ஆண்டுகளைப் பொதுவாழ்விற்காக செலவழித்துவிட்டேன். அதில், 28 ஆண்டுகள் லட்சக்கணக்கான மைல்கள் காரில் பயணித்துவிட்டேன். ஆயிரக்கணக்கான மைல்கள் நடைபயணமாகச் சென்றிருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டு ஐந்தரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறேன். என் மகனுக்கு அத்தகைய கடினமான நிலை வேண்டாம் என்பது எனது கருத்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னோடு போகட்டும் அரசியல் என நினைக்கிறேன், ஆனால், கட்சியினர் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. வரும் 20-ம் தேதி நடக்கவுள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியனரே முடிவு செய்வார்கள்” எனப் பேசினார். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகிலுள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ம.தி.மு.க நிர்வாகி எரிமலை வரதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அவரது இல்லத்திற்குச் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் வைகோ.

துரை வைகோ- வைகோ
துரை வைகோ- வைகோ

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதும், ”துரை வைகோ அரசியலுக்கு வருவாரா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், “துரை வையாபுரி, கடந்த இரண்டு ஆண்டுக்காலமாக எனக்கே தெரியாமல் மதிமுக கட்சிக்காரர்கள் இல்லங்களின் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தார். கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு எனத் தகவல் கேட்டாலும், சிகிச்சைக்குத் தேவையான உதவியைச் செய்தும் வந்திருக்கிறார்.

கட்சியினரின் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் துரை வையாபுரியின் படத்தைப் போடக்கூடாது. அவர், படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது என நிர்வாகிகளிடம் சொன்னேன். கட்சியின் மாநாட்டுப் பந்தலிலும் அவர் படம் போடக் கூடாது எனச் சொன்னேன். அதை மீறிப் படம் போடப்பட்டிருந்த பேனர்களை அகற்றவும் சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து, இதே செயலில் நிர்வாகிகள் ஈடுபட்டால் கட்சியைவிட்டு நீக்கவும் தயங்க மாட்டேன் எனக் கண்டிப்புடன் கூறினேன். சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களைக் கொண்டுவர வேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டுச் செய்கிறார்கள்.

தீர்மானம் நிறைவேற்றம்
தீர்மானம் நிறைவேற்றம்

நான் அவரை ஊக்குவிக்கவில்லை. அதேநேரத்தில் அவர் அரசியலுக்கு வந்துவிடக் கூடாது எனத் தடுப்பதற்கு என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்று பார்த்தேன். அதையும் மீறி தற்போது காரியங்கள் நடக்கின்றன. ’எங்களுக்கு வழிகாட்ட நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும். அதற்கு எல்லாத் தகுதிகளும் துரை வையாபுரியிடம் இருக்கின்றன’ எனச் சொல்லி என்னையே மீறி தொண்டர்கள் அழைத்துக்கொண்டு போகின்றனர். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும்” என்றார்.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ம.தி.மு.கவின் வெற்றிகாக தேர்தல் களத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட துரைவைகோவிற்கு நன்றி தெரிவிப்பது, அத்துடன் 56 ஆண்டுகால பொதுவாழ்வில் மக்கள் பணியாற்றி வரும் ம.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வைகோவின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் துரை வைகோவிற்கு செயல்தலைவர், துணை பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு பதவியைத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்

”வரும் 20-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டதில் துரைவைகோவிற்கு பதவி வழங்கிட கட்சித் தலைமையிடம் வலியுறுத்த உள்ளோம். பல மாவட்டங்களின் நிர்வாகிகளும் இதில் உறுதியாக உள்ளனர்” என்றனர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது துரைவைகோ கட்சியில் இணைவதும் அவருக்கு பதவி தரப்படுவதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு