சாத்தூர் தனியார் கல்லூரிப் பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவிகள், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களை ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வையாபுரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``விபத்தில் காயமடைந்த மாணவிகளுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி. மத்திய அரசின் செயல்பாடுகளை, குறைகளைச் சுட்டிக்காட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. எனினும் மத்திய அரசு, தானே எல்லாவற்றையும் கையிலெடுத்து நிர்வாகம் செய்வது, மாநில சுயாட்சியைத் தவிடுபொடியாக்குவது போன்றது. இதன் மூலம் மத்திய அரசு தனி ராஜாங்கத்தைச் செயல்படுத்தக் கூடாது. கடந்த ஒரு வருட காலமாக அண்ணாமலை, அர்ஜுன் சம்பத் ஆகியோரின் அறிக்கைகள் ஒரு மலிவான அரசியல் நடத்துவதுபோல இருக்கின்றன.

இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி மீனவர்கள் பிரச்னை மற்றும் இலங்கைத் தமிழர்கள் நலன் குறித்து தீர்க்கப்படாத பல பிரச்னைகளை அழுத்தம் கொடுத்து சரிசெய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். கடந்தகால இந்தியப் பிரதமர்களுக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு இப்போது உள்ள பிரதமர் மோடிக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அண்டை நாட்டுக்கு உதவுவது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், 40 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னைகளைக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி தீர்க்க முற்பட வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுப்பது, பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் இடங்களைக் கைப்பற்றுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் குறைகளை எதிர்க்கட்சிகள் கூறுவது தவறல்ல. ஆனால், அண்ணாமலை மலிவான அரசியல் செய்வது தவறானது. அவர் பிரச்னை செய்துகொண்டிருக்கிறார். காலப்போக்கில் மக்களுக்கே அது தெரியவரும். அரசியல் பொருளாதார நெருக்கடி ஒன்றிரண்டு ஆண்டுகளில் தீரும். பழைய பென்ஷன் திட்டத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் முன்னிறுத்தும் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதை தி.மு.க நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை" என்றார்.