ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குறித்த `மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படம் திருச்செந்தூர் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”நான் என்னைத் தலைவராக எண்ணவில்லை. கட்சி எனக்குத் தலைமை கழகச் செயலாளர் என்ற பதவி கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த இளைஞர்களின் செயல்பாடு, சக்தியை வைத்துத்தான் தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியுமே தவிர குறிப்பிட்ட தலைவரை வைத்து இல்லை.

ம.தி.மு.க-வை தலைவர் வைகோ பேச்சாற்றல், உழைப்பு, மக்கள் பணியால் 29 ஆண்டுகள் கட்சியை நடத்தினார். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இழந்ததை மீட்க வேண்டும் என்றால் மக்கள் பணி செய்வது அவசியம். அந்தந்தப் பகுதியில் மக்கள் பணிகளைச் செய்தால் கட்சிக்கும் தலைவருக்கும் பெருமை.
விவசாயிகளை பாதிக்கும் பிரச்னைகளை நாம் கையில் எடுத்துப் போராடுவோம். 29 ஆண்டுக்கால நம் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கிறோம். கட்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு மக்கள் பணியே சிறந்தது. பா.ஜ.க-வின் தவறான சித்தாத்தங்களுக்கு எதிராக இருக்கும் அனைத்து இயக்கங்களும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒன்றிணைந்தால் வெற்றிபெற முடியும்.

தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான அணியே இருக்கிறது. அண்ணாமலை, ’மேக் இன் இந்தியா’, இந்தியப் பொருள்களை ஊக்குவிப்பது என்று கூறிவிட்டு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாட்டுக் கைக்கடிகாரத்தைக் கட்டியிருப்பது குறித்து அவர்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.